வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு சினிமா உதவுகிறது!

- பிருந்தா சாரதி

புக்ஸ் & ரீடர்ஸ், பிலிம்ஸ் & ஃபேன்ஸ் குழுமங்களின் 2022, 2023 ஆண்டு விழா சென்னை எழும்பூர் மியூசியம் தியேட்டரில் 11.05.2024 மாலை நடைபெற்றது.

விழாவில் நூல் விமர்சனம், திரை விமர்சனம் ஆகியவற்றில் கலந்துகொண்டு பரிசு பெற்றவர்களுக்கு பரிசளிப்பு முக்கிய நிகழ்வாக நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் அனைவரும் வாசிப்பால் தாங்கள் உயர்ந்தது எப்படி என்பதையும் வாசிப்பின் அவசியம் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதையும் மையமாக வைத்து உரையாற்றினார்கள்.

அதே போல் பார்வையாளராக வந்திருந்த ‘புக்ஸ் அண்ட் ரீடர்ஸ்’ உறுப்பினர்களும் தங்கள் வாசக அனுபவத்தை பகிர்ந்து கொண்டது சிறப்பாக இருந்தது.

போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளித்து, குழுமங்களை உருவாக்கி திறம்பட நடத்தி வரும் சிவசங்கர் ஜெகதீசன் தலைமையிலான குழுவுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்து, வாசிப்பில் என்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன்.

உரையின் இடையே முதன்முதலாக பள்ளி இறுதியில் நான் படித்த ஜெயகாந்தன் சிறுகதையான ‘நான் இருக்கிறேன்’ பற்றியும், அண்மையில் நான் பார்த்த சிறந்த இந்தித் திரைப்படமான ’12 – இத் ஃபெயில்’ பற்றியும் கூறினேன்.

வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கு இலக்கியம், திரைப்படம், கலை இவையெல்லாம் எப்படிப் பயன்படுகின்றன என்றும் வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளில் அவற்றிலிருந்து மீறி எழ இந்த வாசிப்பு அனுபவம் எப்படி பயன்படும் என்பதைக் குறித்தும் பேசுவதற்கு இவை உதவியாக அமைந்தன.

‘ஸ்ட்ரெஸ்’ என்று மனநல மருத்துவரை நாடுவதற்குப் பதிலாக நல்ல நூல்களைப் படிக்கும் போது நம்முடைய மனம் எல்லை கடந்த கற்பனை உலகில் பறந்து அதுவரையான மன அழுத்தங்களில் இருந்து விடுதலை ஆவதை உணர முடியும் என்பதை எடுத்துரைத்தேன்.

விழாவில் புத்தங்களைக் கொண்டாடும் நிறைய நண்பர்களை சந்தித்தது உற்சாகம் அளித்தது.

– நன்றி: பிருந்தா சாரதி

Comments (0)
Add Comment