பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் நாகிரெட்டி நினைவுநாள் இன்று (பிப்ரவரி-25, 2004)
இந்தியத் திரைப்படத்துறையை வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தில் வைத்து போற்றப்படுகிறவர்களில் இவர் முக்கியமானவர்.
குறிப்பாக, தமிழ்த் திரையுலகில் திரைப்படங்களைக் கலை ரசனையோடு காட்சிகள் அமைத்து காவியமாக வடிவமைத்தவர்களில் இவரும் ஒருவர்.
பணம் முதலீடு செய்து, அதில் லாபம் ஈட்டுகிற ஒரு தொழில்தான் சினிமா என்றாலும், அதிலும் கலையை முதன்மைப்படுத்தியவர் இவர்.
இவர் தான் பொம்மிரெட்டி நாகிரெட்டி எனப்படும் பி. நாகிரெட்டி (Bommireddy Nagireddy).
அப்போதைய சென்னை மாகாணத்தில் (ஆந்திர மாநிலம், கடப்பை மாவட்டம்) பொட்டிம்பாடு கிராமத்தில் பிறந்தவர்.
இவருடைய தந்தை, வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தனது 18-வது வயதில் நாகிரெட்டியும் இதேதொழிலில் ஈடுபட்டார்.
வெங்காயம் ஏற்றிச் சென்ற கப்பல் கடலுக்குள் மூழ்கியதால், நாகிரெட்டி கடனில் மூழ்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பெரும் இழப்புக்குப் பின்னர், அச்சகம் ஒன்றைத் தொடங்கி, ‘ஆந்திர ஜோதி’ எனும் தெலுங்கு மாத இதழைத் தொடங்கினார்.
குழந்தைகளுக்காக தெலுங்கில் ‘சந்தமாமா’ சிறுவர் இதழைத் தொடங்கினார். பின்னர், தமிழில் ‘அம்புலிமாமா’ வெளியிட்டார்.
ஆந்திராவைச் சேர்ந்த சக்கரபாணி என்ற எழுத்தாளர், அம்புலிமாமாவில் கதை எழுதினார். நாகிரெட்டியும், சக்கரபாணியும் நெருங்கிய நண்பர்களாகினர்.
இருவரும் தொடர்ந்து திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைத்தனர். மூல நாராயணசாமி என்பவர் நடத்தி வந்த வாகினி ஸ்டூடியோ, நெருக்கடியால் தத்தளித்தது. அதை குத்தகைக்கு எடுத்து நடத்த ஆரம்பித்தனர்.
பின்பு, சென்னை வடபழனி அருகே நிலம் வாங்கி, ‘விஜயா – வாகினி ஸ்டூடியோ’ என்ற படப்பிடிப்புத் தளத்தை உருவாக்கினார் நாகிரெட்டி.
முதல் படமாக என்.டி. ராமாராவ் நடித்த ‘பாதாள பைரவி’யைத் தயாரித்த நாகிரெட்டி, ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும் வெளியிட்டார். படம் பெரும் வெற்றிபெற்றது.
கல்யாணம் பண்ணிப் பார், மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றன.
அதன் பிறகு 10 ஆண்டுகள் நாகிரெட்டி படம் எதையும் தயாரிக்கவில்லை. 1965-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி இணையில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் தயாரித்தார்.
படம் வெற்றி வாகை சூடியது. இதன் ஹிந்திப் பதிப்பில் திலீப்குமார் கதாநாயகனாக நடித்தார். தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக விஜயா – வாகினி திகழ்ந்தது.
அந்தக் காலத்தில் சென்னையில் தான் எல்லா ஸ்டூடியோக்களும் இருந்தன. ஆந்திராவில் எந்த ஸ்டூடியோவும் இல்லை.
ஆந்திராவில் முதலமைச்சர்களாக இருந்த சஞ்சீவ ரெட்டி, பிரம்மானந்தரெட்டி ஆகியோர் ஆந்திராவுக்கு ஸ்டூடியோவை மாற்றிவிடுங்கள் என நாகிரெட்டியிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், நாகிரெட்டி மறுத்துவிட்டார். தன்னை வாழவைத்த தமிழ் மண்ணில் தான் இறுதி மூச்சுள்ளவரை வாழ்வேன் என உறுதியாக நாகிரெட்டி தெரிவித்தார்.
திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர், சமூக சேவகர் என்ற பல ஆளுமைகள் ஒருங்கே இணையப்பெற்ற ஓர் மனிதராகத் திகழ்ந்த நாகிரெட்டி, தனது 90-வது வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, நினைவாற்றலை இழந்தார்.
கடந்த 2004-ம் ஆண்டு அவர் விரும்பியபடியே தமிழ் மண்ணில் (சென்னை) தன் கடைசி சுவாசத்தை நிறுத்திக் கொண்டார்.
✍️ *லாரன்ஸ் விஜயன்*