தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியைத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை கௌரி கிஷன் பேசினார்.
“ஒவ்வொரு சவாலான படத்துக்கு இருக்கிற மாதிரி, இந்தப் படத்துக்கும் சில சிரமங்கள், சிக்கல்கள் இருந்தன.
ஆனால் அவையெல்லாம் தாண்டி, படம் அதன் தரத்திற்காக பாராட்டப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
நான் இதுவரை செய்ததிலிருந்து வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை (கல்கி) இதில் செய்திருக்கிறேன்.
அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் புரிந்துகொண்டு, தனிப்பட்ட முறையில் மெசேஜ்கள் அனுப்பி பாராட்டுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது.
குறிப்பாக, அந்த நட்பு பற்றிய உணர்வை பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நம்ம தலைமுறையில் கொஞ்சம் கவனிக்கப்படாமல் போகும் ஒரு உறவு நட்பு. அதிலிருந்து உருவாகும் அன்பு. “வாஸ்” மற்றும் “கல்கி” இடையிலான அந்த அழகான நட்பு இந்தப் படத்தின் முக்கியமான அம்சம்.
சமூக வலைதளங்களில், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாம் பார்த்தால், இயல்பான, உண்மையான நல்ல எதிர்வினைகள் அதிகமாக வருகிறது. சில இடங்களில் சிறிய எதிர்மறை கருத்துகள் வருகின்றன.
இந்தப் படம் இயல்பானது, உண்மையானது. அதனால் அதை அதே உணர்வோடு ரசிக்க வேண்டும்.
தேவையில்லாத எதிர்மறை கதை உருவாக்காமல், படத்தை அனுபவிக்க வேண்டும். இந்த கோடைக் கால வெளியீடாக, குடும்பத்தோடு, நண்பர்களோடு தியேட்டரில் ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான படைப்பு இது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் கனவும், பார்வையும்தான் இந்தப் படம். இதற்காக மிகுந்த உழைப்பும், திறமையும் செலுத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அவர்களின் அழகான காட்சியமைப்பும் இதில் பெரிய பலம்.
அனைத்து நடிகர்களும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள்.
பிரதீப் – அவருடைய முந்தைய வெற்றிகளைத் தொடர்ந்து, இதுவும் ஒரு பெரிய வெற்றியாக அமையும் திறன் கொண்ட படம்.
கிருத்தி தமிழ்த் திரையுலகுக்கு ஒரு சிறந்த வரவு. இனி, நினைவில் நிற்கக்கூடிய நடிகையாக அவர் இருப்பார். மொத்தத்தில், இது ஒரு முழுமையான அனுபவத்தை தரும் படம்.
ரசிகர்களின் நேர்மையான ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி” என்றார்.