ஆக்‌ஷன் கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் அருண் விஜய்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய் நடித்த `வணங்கான்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அருண் விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் திருக்குமரன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த `மான் கராத்தே’ மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த `கெத்து’ படங்களை இயக்கியவர்.

இந்தப் படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும், அருண் விஜய் திரையுலக வாழ்வில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஐந்து கெட்டப்புகள் இருப்பதாகவும், குறிப்பாக சிக்ஸ்பேக் உடல் அமைப்புடன் ஒரு சண்டை காட்சி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் நாயகியாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்த சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். அவர்களுடன் ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். மாஸ்டர்ஸ் அன்பறிவு மற்றும் பிரபு மாஸ்டர் இணைந்து சண்டைக்காட்சிகளை வடிவமைக்கவுள்ளனர். அருண்சங்கர் துரை கலை இயக்கம் செய்கிறார். கிருத்திகா சேகர் உடை வடிவமைப்பு பணிகளைச் செய்கிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் துவக்கவிழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதுடன், கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார்.

Comments (0)
Add Comment