தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்த நகைச்சுவை முன்னோடிகளில் மிக முக்கியமானவர் நடிகர் டி.எஸ்.துரைராஜ்
1940-1970-களில் நாடக உலகின் முன்னோடி சங்கரதாஸ் சுவாமிகளின் சீடரான டி.எஸ்.துரைராஜ் நாடக உலகில் இருந்து திரையுலகிற்கு வந்தவர்.
மேடை நாடக நடிகராகவும், மிகத்திறமையான தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராகவும் விளங்கியவருமான இவர், இயக்குனராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
இவரது பருத்த உடல்வாகும் தங்கு தடையற்ற வசன உச்சரிப்பும் பார்ப்பவர்களை ஈர்த்துவிடும்.
குதிரை ரேஸில் கலந்து கொள்வதில் அலாதிப் பிரியர். மற்றவர்களின் கஷ்டங்களை உணர்ந்து உதவும் குணமுடையவர்.
“காலையிலே எந்திரிச்சு
கஞ்சித்தண்ணி இல்லாம
கஷ்டப்படுறேனே கடவுளே!’’
மிகையில்லாத இயல்பான பேச்சு வழக்கில் அமைந்த இந்தப் பாடலை ‘சகுந்தலை’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீனவராகப் பாடும்போது கூடவே பாடுவார் துரைராஜ்.
பாட்டு முடிந்ததும் பிடித்த மீனை யார் வைத்துக் கொள்வது என்பதில் இருவருக்கும் இடையில் சண்டை வந்துவிடும்.
துரைராஜை என்.எஸ்.கே அடிக்கும்போது “ங்கொப்பன் மவனே சிங்கம்டா’’ என்று அழுதபடியே உச்ச ஸ்தாயியில் கத்துவார் துரைராஜ்.
மேலும் அடி விழ, குரல் கலைந்து துரைராஜ் பேசிய “ங்கொப்பன் மவனே’’ வசனம் அவரைக் கவனிக்க வைத்தது.
‘மலைக் கள்ளன்’ படத்தில் எம்.ஜி. சக்கரபாணியுடன் போலீஸ் மாம்பழ நாயுடுவாக துரைராஜ் இயல்பாக நடித்திருப்பார்.
“மல்கோவா மாம்பழமே’’ என்று ‘மாமன் மகள்’ படத்தில் சந்திரபாபு பாடி நடித்தபோது கூடவே பாடி இவர் அமர்க்களப்படுத்தியிருப்பார்.
‘படிக்காத மேதை’ படத்தில் சிவாஜிக்கு உதவும் தோழனாக – “எதையும் கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்குச் சரியா வரும்’’ என்கிற வசனத்தை அடிக்கடி சொல்லி நடித்திருப்பார்.
கப்பலோட்டிய தமிழனில் வந்தேமாதரத்தின் மீது பிடிப்புக் கொண்ட சலவைத் தொழிலாளி பாத்திரத்தைக் கவனிக்க வைத்திருப்பார்.
துரைராஜூக்குப் பெரிய முழி. கண்ணை அகலவிரித்துக் குரலை ஏற்ற இறக்கத்துடன் பேசும்போது அவருடைய கனத்த உடலும் பேசும்.
இன்னொரு படத்தில் துரைராஜ் வீட்டுக்குள் நுழையும்போது நாய் இவரைப் பார்த்துக் குரைக்கும். அவர் பயந்து நடுங்குவார். குலைப்பு அதிகரிக்க அவருடைய பயமும் அதிகரிக்கும்.
‘ஏங்க.. பயப்படுறீங்க.. குரைக்கிற நாய் கடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியாதா?’’
கேட்டவரிடம் வழக்கமான முழியை முழித்தபடி துரைராஜ் சாதுவாகக் கேட்பார்.
“குரைக்கிற நாய் கடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியும். எனக்குத் தெரியும்.. ஆனா அந்த நாய்க்கு அது தெரியாதே’’.
மதுரையைச் சேர்ந்த இவர் முதலில் பாய்ஸ் நாடகக் குழுவில் நடித்து, அதன் பிறகு, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நகைச்சுவைக் கூட்டாளியாக பல படங்களில் நடித்தார்.
கலைவாணரைப் போலவே அவர் சம்பந்தப்பட்ட படங்களின் நகைச்சுவைக் காட்சிகளை அவரே தீர்மானித்திருக்கிறார்.
பல படங்களில் கலைவாணரும், துரைராஜூம் ஜோடி சேர்ந்தார்கள். அந்தப்படங்கள் அமோகமாக ஓடின.
“புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சிக் கண்ணே” என்ற பாடல் இன்று வரையிலும் ஒலிக்காத திருமண வீடே இல்லையெனலாம்.
இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் இவர் தயாரித்த ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’ என்ற படத்தில் இடம்பெற்றது.
தனது மாஸ்டர் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் மூலமாக பானை பிடித்தவள் பாக்கியசாலி, ஆயிரங்காலத்துப் பயிரு என்ற இரு படங்களைச் சொந்தமாக தயாரித்து இயக்கியுள்ளார்.
இப்பட நிறுவனத்தின் இலட்சினை கூட பறக்கும் குதிரை என்பது சிறப்பு. நகைச்சுவை நடிகர்களிலேயே முதன்முதலாக ஏராளமாக சம்பாத்தித்தவர்.
சந்திரபாபுவுடன் “கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே, மச்சி வீட்டில் காத்திருக்கும் மல்கோவா மாம்பழமே” என்ற பாடல் இப்போதும் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதைப் பார்த்திருக்கலாம். அப்பாடலில் வருபவர் தான் டி.எஸ்.துரைராஜ்.
மிகவும் இயல்பாக வசனம், ஆராவாரம் இல்லாத நடிப்பு, நகைச்சுவை உடல்மொழி இதுதான் இவருடைய வெற்றிக்குக் காரணம்.
“நகைச்சுவை நடிகராக ஆனது தான் என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத விஷயம்’’ என்று நெகிழ்வோடு கூறும் டி.எஸ்.துரைராஜின் நடிப்பை இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும் விதத்தில் இருப்பதே அவருடைய வாழ்நாள் சாதனை.
– மணி அமுதன்