பிரபலங்களானாலும் பொதுவெளியில் கவனம் தேவை!

பிரிக்க முடியாதவை என்ன என்றுக் கேட்டால் அந்த வரிசையில் பலவற்றை அடுக்க முடியும். அதில் சினிமாவும் சர்ச்சையும் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அந்தளவு திரைப்பிரபலங்களின் பேச்சானது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சர்ச்சைகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் 100ஆவது நாள். அன்று மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடந்த கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 13 பேர் உயிரிழந்தனர்.

ஸ்டெர்லைட் விவகாரத்தின்போது சென்னையில் தன் இல்லத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அரசு எந்திரம் தோற்றுவிட்டது” என்றும் “காவல்துறை வரம்புமீறி தாக்குதல் நடத்தியுள்ளது” என்றும் பேசினார்.

அதே சமயத்தில், தூத்துக்குடி சென்றிருந்த ரஜினிகாந்த், “எதற்கெடுத்தாலும் போராடினால், தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்” எனவும் கூறியிருந்தார்.

இந்தக் கருத்து அச்சமயத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதன் விளைவாக சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினி வெகுவாக விமர்சிக்கப்பட்டார்.

இதேபோல், சென்னையில் பிரபல வெள்ளிப் பொருட்கள் கடை ஒன்றை திறந்து வைக்கச் சென்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம், விஜயகாந்தின் மரணம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளிக்க மறுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கடை திறப்பு விழா பற்றி மட்டும் தன்னிடம் கேள்விகள் கேட்குமாறு கூறினார்.

இருப்பினும் செய்தியாளர்கள் விடாமல் மீண்டும் கேள்வி எழுப்பியதை அடுத்து, விஜயகாந்த் மரணம் வருத்தம் தருவதாகவும் தாம் ஊரில் இல்லை என்றும் புதுச்சேரியில் இருந்ததால் தன்னால் அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை எனவும் காரணம் கூறினார்.

புதுச்சேரிக்கும் சென்னைக்கும் 3 மணி நேர பயணத்தில் வந்துவிட முடியும் என்பதை கூட உணராமல் தாம் ஏதோ வெளிநாட்டு படப்பிடிப்பில் இருந்ததை போல் நான் ஊரில் இல்லை என சிம்பிளாக கூறினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதுவும் அப்போது பெரும் பேசுபொருளானது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசவில்லை என்றாலும் அவரைச் சுற்றி சர்ச்சையான கருத்துகள் வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவின் முன்னாள் சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி. ராஜு, கூவத்தூரில் ஒரு சட்டமன்ற உறுப்பினருடன் த்ரிஷா ஒன்றாக இருப்பதற்கு 25 லட்சம் கொடுத்தனர் என்று கூறிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஸ்வரூபம்  எடுத்த த்ரிஷாவின் சர்ச்சை செய்தி, பின்னர் காலப்போக்கில் அடங்கிப் போனது.

அதைத் தொடர்ந்து,  கொஞ்ச நாட்களிலேயே செய்தியாளர்கள் சந்திப்பில்  பேசிய நடிகர் மன்சூர் அலிகான் பேசிய பேச்சு மீண்டும் பேசுபொருளானது.

அதாவது, “2000க்கு முன்பு த்ரிஷா நடித்த திரைப்படங்களில் நடிகைகளை வில்லன் நடிகர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகள் இருக்கும் என்றும் லியோ படத்தில் அதுபோன்ற காட்சிகள் இருக்கும் என்று தான் எதிர்பார்த்ததாகவும் மன்சூர் அலிகான் பேசினார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அதன்பிறகு இது தொடர்பாக மன்னிப்பு கேட்டார் மன்சூர் அலிகான்.

இதேபோல், நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கிட்டதட்ட 10க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களில் பேசி வருகிறார்.

நடிகைகளுக்கு சினிமாவில் எப்படி வாய்ப்பு கிடைத்தது, நடிகைகள் எப்படி பிரபலமானார்கள், சினிமா பிரபலங்களின் விவாகரத்து என சலக விஷயத்திலும் மூக்கை நுழைத்து, அவங்கள் குறித்து தரக்குறைவாகப் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதற்கும் பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. ஆனாலும் இதுபோன்ற பேச்சுக்கள் குறைந்தபாடில்லை.

எந்தப் பிரபலமாக இருந்தாலும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பேசும் முன் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பொதுவெளியில் அவர்களுக்கு இருக்கும் நற்பெயரை அவர்கள் இழக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

– மூ. நிவேதா, மாணவி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி.

Comments (0)
Add Comment