அஜித் கார் விபத்து குறித்து விளக்கமளித்த படக்குழு!

- பதற வைக்கும் வீடியோ

‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து, ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித், இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார்.

வெளிநாட்டில் நடக்கும் கதை என்பதால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் அஜர்பைஜான் நாட்டில் மும்முரமாக நடைபெற்று வந்தது. அனிருத் இசை அமைக்கிறார்.

இன்னும் சில பாடல்கள் தயாராகவில்லை என்பதால், படப்பிடிப்புக்கு இடைவேளை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை திரும்பிய அஜித், சில நாட்களுக்கு முன்னர், மத்தியபிரதேச மாநிலத்துக்கு ‘பைக் டூர்’ சென்றார்.

நடிகர் ஆரவ் உள்ளிட்ட தனது குழுவுடன், அந்த மாநிலத்தில் அஜித், ‘பைக் ரேஸ்’ மேற்கொண்டார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் ஓட்டும் கார், விபத்தில் சிக்கும் வீடியோ ஒன்றை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், கார் ஒன்றின் முன் பக்க இருக்கையில், நடிகர் ஆரவ், கைகள் கட்டப்பட்ட நிலையில் அஜித் அருகே அமர்ந்திருக்கிறார்.

ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் அஜித், ஆரவிடம் ஏதோ விசாரித்தபடி, அதிவேகத்தில் காரை ஓட்டுகிறார். அப்போது சாலை ஓரத்தில் கார் நிலைதடுமாறி கவிழ்ந்து விடுகிறது.

பதற்றம் அடையும் படக்குழுவினர், கார் கவிழ்ந்த இடத்துக்கு ஓடுவதோடு வீடியோ முடிகிறது. கடந்த நவம்பர் மாதம், நடந்த ‘ஷுட்டிங்’கின் போது, இந்த விபத்து நடந்துள்ளது.

‘இந்த விபத்து எப்படி நடந்தது? 5 மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் நடந்த விபத்தை இப்போது ஏன் வெளியிட்டுள்ளீர்கள்?’ என அஜித் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் கேட்டபோது, அவர் நீண்ட விளக்கம் அளித்தார்.

அதன் விவரம்:

“நான் இப்போது வெளியிட்டுள்ள வீடியோ, நவம்பர் மாதம் 23 ஆம் தேதி எடுக்கப்பட்டது. அது, அஜர்பைஜானில் நடந்த கார் சேஸிங் ‘ஷுட்டிங்’.

ஆரவ் தன் அருகே உட்கார்ந்து இருக்க, அஜித் வேகமாக காரை ஓட்டி, முன்னால் செல்லும் காரை மடக்க வேண்டும் என்பது காட்சி.

இதற்காக காரின் உள்ளே ஒரு காமிரா பொருத்தப்பட்டிருந்தது. ‘ட்ரோன்’ மூலமும் இந்த காட்சி படமாக்கப்பட்டது.

சாலை ஓரத்தில் கார் செல்லும் போது, டயர் வழுக்கி, அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. படக்குழுவினர் ஓடிச்சென்று பார்த்தபோது அஜித்துக்கும், ஆரவுக்கும் ஒன்றும் ஆகவில்லை என தெரிந்த பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

எனக்கும் இந்தக் தகவல், அஜர்பைஜானில் இருந்து தெரிவிக்கப்பட்டது. நானும் பதறிப்போனேன்.

காரில் இருந்து அஜித்தையும் ஆரவையும் படக்குழுவினர் மீட்டுள்ளனர். உடனடியாக இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமானது. அஜித் ஓட்டியது, ‘ஹம்மர்’ ரக கார் என்பதால், இருவரும் காயமின்றி தப்பினர்.” என படபடப்போடு, பதற வைக்கும் வீடியோ ரகசியம் சொன்ன சுரேஷுடம், ‘இப்போது ஏன் இந்த வீடியோவை வெளியிட வேண்டும்?’ என கேட்கப்பட்டது.

“உயிரைப் பணயம் வைத்து கார் ஓட்டி, அஜித் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் சிலர் ‘விடா முயற்சி’ படம் ‘டிராப்’ ஆகிவிட்டது என செய்திகள் பரப்பிய வண்ணம் உள்ளனர்.

அது, வதந்தி என்பதை ரசிகர்களிடம் கொண்டு செல்லவும், படக்குழுவினருக்கு உற்சாகம், தெம்பை உருவாக்கவும் தான், இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன்.

படத்தின் 60 சதவீத ‘ஷுட்டிங்’ நிறைவடைந்து விட்டது. மக்களவைத் தேர்தல் முடிந்த மறுநாளே வெளிநாட்டுக்கு, அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் பறந்து விடுவார்கள்’’ என உற்சாகமாக ‘அப்டேட்’ செய்தி அளித்தார், அஜித் மேலாளர்.

தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காகவே, சென்னையில் தங்கி இருக்கிறார் அஜித். ஒவ்வொரு தேர்தலிலும் அவர் வாக்களிக்கத் தவறுவதில்லை.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment