மலையாள எழுத்தாளர் பென்யாமின், உண்மை சம்பவத்தை அடிப்படியாக வைத்து, ‘தி கோட் லைஃப்’ என்ற நாவலை எழுதி இருந்தார்.
கேரளாவின் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த நஜீப் என்பவர், குடும்பச் சூழல் காரணமாக பிழைப்புக்காக வேலைதேடி அரேபியா செல்கிறார். அங்கு அவருக்கு ஆடு மேய்க்கும் வேலை கிடைக்கிறது.
அந்த நாட்டில் நஜீப் எதிர்கொண்ட போராட்டங்களை தனது நாவலில் தத்ரூபமாக சித்தரித்திருந்தார், எழுத்தாளர் பென்யாமின்.
2008 ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல், வாசகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால், இதனை படமாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டார்.
மலையாள பிரபல இயக்குநரான பிளெஸ்ஸிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அவர், பென்யாமினிடம் இருந்து கதையை வாங்கினார்.
கதையின் நாயகனாக 2009 ஆம் ஆண்டு பிருதிவிராஜை ஒப்பந்தம் செய்தார். எனினும் இதன் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு தான் ஆரம்பமானது.
‘ஆடு ஜீவிதம்’ என படத்துக்கு பெயர் சூட்டப்பட்டது. ஜோர்டான், அல்ஜீரியா, அமெரிக்கா ஆகிய இடங்களில் ‘ஷுட்டிங்’ நடத்தப்பட்டது. கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் படம் முடங்கிக் கிடந்தது.
‘பான் இந்தியா’ படமாக உருவாகியுள்ள ‘ஆடு ஜீவிதம்’ பல்வேறு தடைகளைத் தாண்டி, ஒரு வழியாக நாளை (வியாழக்கிழமை) வெளியாகிறது.
இதன் சிறப்புக்காட்சியை, ‘உலகநாயகன்’ கமல்ஹாசனுக்கும், இயக்குநர் மணிரத்னத்துக்கும் படக்குழுவினர் திரையிட்டுக்காட்டினர்.
படத்தைப் பார்த்து இரு ஜாம்பவான்களும் பிரமிப்பு அடைந்ததாகப் படக்குழு தெரிவித்துள்ளது. படத்தைப் பார்த்த கமல்ஹாசன் பிருதிவிராஜின் நடிப்பை பார்த்து மிரண்டே போய் விட்டாராம்.
‘இப்படியொரு படைப்பு இந்திய சினிமாவின் பெருமை உலகத்தரம் வாய்ந்த படமாக காலம் கடந்தும் இந்த ஆடுஜீவிதம் ஜீவிக்கும்’ என்று கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
படக்குழு இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “சூப்பர் ஸ்டாரும், 3 முறை தேசிய விருது பெற்றவருமான கமல்ஹாசன், எங்கள் படத்தைப் பாராட்டினார். படம் பார்த்து விட்டு, கமல்ஹாசன் நெகிழ்ந்து போனார்.
அசாதாரணமான கதையை நிஜத்தில் கொண்டுவர, நிங்கள் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளீர்கள்” என கமல் புகழ்ந்ததாகப் படக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த மாதிரி ஒரு படத்தை அந்த நாடுகளில் எப்படி எடுக்க முடிந்தது? என மணிரத்னம் வியந்துள்ளார்.
கமல் பாராட்டியதால் மகிழ்ச்சியில் திளைத்துள்ள பிருதிவிராஜ் ‘இதனை பெரிய விருதாகக் கருதுகிறேன்’ என்று கூறினார்.
– பாப்பாங்குளம் பாரதி.
#எழுத்தாளர்_பென்யாமின் #Writer Beniamin #நஜீப் #Najeeb #பிளெஸ்ஸி #Blessy #ஆடு_ஜீவிதம் #Aadu_jeevitham #சிறப்புக்காட்சி #Special_Show #கமல்ஹாசன் #Kamalhaasan #மணிரத்னம் #Manirathnam #பிருதிவிராஜ்