விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு மீண்டும் சிக்கல்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ‘தளபதி’ விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். கடந்த மாதம் 22-ஆம் தேதி கட்சியின் கொடி, பாடலை அறிமுகம் செய்தார்.

கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடிக்கான விளக்கத்தை முதல் மாநாட்டில் வெளியிடுவதாக அப்போது அவர் தெரிவித்தார். சாமான்ய மக்களையும் கவரும் வகையில், கட்சியின் கொள்கை இருக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார்.

இது குறித்து பல தரப்பினரிடமும் அவர் கருத்து கேட்டு வருகிறார். தவெக கட்சியின் கொள்கைகளை அவர் இறுதி செய்து விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு இடம் தேர்வு செய்வதில், அவர் பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டார்.

ஒரு வழியாக விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வி.சாலையில் முதல் மாநாட்டை நடத்தி, கட்சிக் கொள்கைகளை அறிவிக்க விஜய் திட்டமிட்டிருந்தார். மாநாட்டை வரும் 23-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டுக்கு அனுமதி கோரி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் காவல்துறையிடம் மனு அளித்திருந்தார்.

அனுமதி அளிப்பதற்காக, காவல்துறை தரப்பில் 21 கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கியது.

அந்தக் கேள்விகளுக்கான பதில் அடங்கிய மனுவை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, பல்வேறு நிபந்தனைகளுடன். மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி வழங்கியது. ஆனாலும், திட்டமிட்டபடி 23 ஆம் தேதி மாநாடு நடத்த இயலவில்லை.

அக்டோபர் 27 ஆம் தேதி மாநாடு:

இந்த நிலையில், தவெக கட்சியின் முதல் மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ஆம் தேதி நடைபெறும் என விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி, மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார்.

“தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம் – நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக.

தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன்.

விரைவில் சந்திப்போம் – வாகை சூடுவோம்” என அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.

மாநாட்டுக்கு புதிய சிக்கல்:

மாநாடு நடைபெறும் இடம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால், சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் கேட்கவே வேண்டாம்.

இந்த நிலையில், தவெக மாநாடு, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த நாளில் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பதில் போலீசாருக்கு சங்கடம் உருவாகியுள்ளது.

இது தவிர, மாநாடு நடக்கும் நாளில் இருந்து நான்கு நாளில் தீபாவளி பண்டிகை வேறு வருகிறது.

எனவே அந்த பகுதியில் ஞாயிற்றுக் கிழமையில், (அக்டோபர் 27 ஆம் தேதி) வாகன நெரிசல் நினைத்து பார்க்க முடியாத அளவில் இருக்கும்.

இதனால் விஜய் கட்சி மாநாட்டுக்கு அன்றைய தினம் அனுமதி கிடைக்குமா? என்பது தெரியவில்லை. போலீசார் அனுமதி அளிக்காத பட்சத்தில் மாநாட்டு தேதி மீண்டும் மாற்றி அமைக்கப்படலாம்.

– மு.மாடக்கண்ணு.

Comments (0)
Add Comment