திரைப்பாடல்கள் ராகங்களில் அமைவதுண்டு. பாடல்களில் ராகங்களின் பெயர்களும் அமைவதுண்டு.
அப்படி திரைப்பாடலில் ராகங்களின் பெயர்களை இணைத்து எழுதுவது என்பது ஒரு நகாசு வேலை. கவியரசர் கண்ணதாசனுக்கு அது கைவந்த கலை.
‘திருவிளையாடல்’ படத்தில் ஐயா பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலில், நடிகர் டி.எஸ்.பாலையாவின் நடிப்பில் ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். நினைவிருக்கிறதா?
“ஒருநாள் போதுமா இன்றொரு நாள் போதுமா?” என்ற பாடல் அது. கவியரசர் எழுதிய பாடல்.
அந்த பாடலின் பின்பகுதியில் வரும் ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு ராகத்தின் பெயர் இழையோடும்.
‘இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ?’ என்ற வரியில் தோடி ராகம்.
‘எனக்(கு) இணையாக தர்பாரில் எவரும் உண்டோ?’ என்ற வரியில் தர்பார் ராகம்.
‘கலையாத மோகனச் சுவை நானன்றோ?’ என்ற வரியில் மோகன ராகம்.
எல்லாவற்றிலும் உச்சம் அந்த கடைசி வரிதான். ‘கானடா… என் பாட்டு தேனடா, இசை தெய்வம் நானடா’ என்று அந்த வரி முடியும்.
அந்த கானடா என்ற சொல் கானடா ராகத்தைக் குறிப்பிடும் அதேநேரம், ‘காணடா’ (பாரடா) என்று மன்னரையும், அவையோரையும் மறைமுகமாக அது ஏளனம் செய்யும்.
மீண்டும் ஒருமுறை சொல்லிப் பாருங்கள். ‘கானடா… என் பாட்டு தேனடா, இசை தெய்வம் நானடா’.
இதில் இசைதெய்வம் என்பதற்குப் பதில் கவிதெய்வம் நானடா என்று மாற்றிப் பாருங்கள். கவியரசருக்கு அது மிகப்பொருத்தமாக இருக்கும்.
கடந்த ஜூன் 24ஆம் தேதி கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளுடன் அவரது நூற்றாண்டு விழா தொடங்கியுள்ளது.
அவரது நூற்றாண்டில் முடிந்த அளவு அவரை நினைவு கூருவோம்.
– மோகன ரூபன்