சினிமாவில் போலீசை அலறவிட்ட அல்லு அர்ஜுன், நிஜத்தில்?

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை, தமிழ் ரசிகர்களுக்குத் தெரியாது. ரஜினி, கமல் கோலோச்சிய சமயத்தில் சிரஞ்சீவி, நாகார்ஜுன், ராஜசேகர் போன்ற ஒரு சில தெலுங்கு ஸ்டார்களே, இவர்களுக்கு பரிச்சயமான முகங்கள்.

‘புஷ்பா’ தெலுங்கு திரைப்படம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு, பான் இந்தியா படமாக வெளிவந்தது. அந்தப் படம் நல்லப் பெயரையும், வசூலையும் அள்ளிய பிறகே அல்லு அர்ஜுன் தமிழ்நாட்டில் பிரபலமானார்.

‘புஷ்பா’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் அவர் தட்டிச்சென்றார். இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பால், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவானது.

முதல் பாகத்தை இயக்கிய சுகுமார், இதனையும் டைரக்டு செய்தார். ராஷ்மிகா மந்தனாவே, இதிலும் நாயகியாக நடித்தார்.

பான் இந்தியா படம் என்பதால், படக்குழு, ஊர் ஊராகச் சென்று படத்தை விளம்பரம் செய்தனர்.

இந்தத் திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

வெளியான 6 நாட்களில், ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்துள்ள ‘புஷ்பா -2′ புதிய சாதனை புரிந்துள்ளது. ஆனால் திருஷ்டிபரிகாரமாக ஹீரோ அல்லு அர்ஜுனை சிறைக்குள் தள்ளியுள்ளது ‘புஷ்பா’,

பிரீமியர் காட்சியால் வந்தப் பிரச்சினை:

‘புஷ்பா 2’ சினிமாவின் பிரீமியர் காட்சி, படம் ரிலீஸ் ஆவதற்கு முதல் நாள் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது.

அல்லு அர்ஜுன் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். அப்போது அவரைப் பார்க்க ஏராளமானோர் திரண்டனர். ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு அல்லு அர்ஜுனைப் பார்க்க முயன்றனர்.

இதனால் திடீரென்று கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் மாட்டிக்கொண்ட ரேவதி என்ற பெண் இறந்தார். ரேவதியின் மகன் காயமடைந்தார். அவருக்கு இன்னமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அல்லு அர்ஜுன் வந்தபோது முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை – இதனால் அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என ரேவதியின் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.

உடனடியாக தியேட்டர் உரிமையாளர், மேனேஜர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக அறிவித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் நீதிமன்றத்தை நாடினார்.

அந்த மனு விசாரணைக்கு வராத நிலையில் அல்லு அர்ஜுனை நேற்று ஐதராபாத் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அல்லு அர்ஜுன் வீட்ட்ற்கு போலீஸ் வரும்போது தனது வீட்டில் டீ குடித்து கொண்டிருந்தார். அவரை கைது செய்வதாக போலீசார் தெரிவித்ததும் மனைவி ஸ்னேகா கண்கலங்கினார்.

அல்லு அர்ஜுன் அவரின் கண்ணீரை துடைத்துத் தேற்றினார். அதன்பிறகு டீ குடித்துவிட்டு சிரித்தபடி அல்லு அர்ஜுன் போலீசாருடன் சென்றார்.

கீழமை நீதிமன்றத்தில் அவரை ஆஜர் செய்தனர். 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால், சஞ்சல்குடா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே தெலுங்கானா உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. ஆனால் அந்த உத்தரவு, சிறை அதிகாரிகளுக்கு இரவில்தான் கிடைத்தது. கைதிகளை இரவு நேரத்தில் விடுதலை செய்யக்கூடாது என்பது சிறை விதி.

இதனால் அல்லு அர்ஜுன், நேற்றைய இரவை ஜெயிலில் கழித்தார். இன்று காலையிலேயே அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அல்லு அர்ஜுன், கைது செய்யப்பட்டதை, தெலுங்கு சினிமா பிரபலங்கள் கண்டித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் இப்போது, ஒரு வேடிக்கையும் அரங்கேறியுள்ளது.

அல்லு அர்ஜுனை கைது செய்யக்கோரி புகார் அளித்த, ரேவதியின் கணவர் பாஸ்கர், ‘என மனைவி மரணத்துக்கும், அல்லு அர்ஜுனுக்கும் தொடர்பு இல்லை. வழக்கை வாபஸ் வாங்க ரெடி’  என பல்டி அடித்துள்ளார்.

இதனிடையே, நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் நானி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment