‘வேட்டையன்‘ – 4 நாள் வசூல் ரூ. 200 கோடி!

சூர்யா கதாநாயகனாக நடித்த ‘ஜெய் பீம்’ எனும் வெற்றிப் படத்தைக் கொடுத்து, ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஞானவேல். அந்தப் படத்தின் வெற்றியால், அவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை வைத்து ‘வேட்டையன்’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் போன்றோரும் நடித்துள்ள இந்தப் படம் கடந்த 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியான இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பேமிலி ஆடியன்சையும் திருப்திபடுத்தியுள்ளார், ரஜினி.

இந்நிலையில், ‘வேட்டையன்’ படத்தின் வசூல் நிலவரத்தை, திரைப்படங்களின் வசூல் குறித்து துல்லியாக விசாரித்து செய்தி தரும் ‘CINE TRACK’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் முதல் 2 நாளில் 110 கோடி ரூபாய் வசூலித்த ‘வேட்டையன்’, சனிக்கிழமை 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

‘வேட்டையன்’ திரைப்படம் 4 வது நாளான நேற்று (13 ஆம் தேதி) அட்வான்ஸ் புக்கிங் விற்பனையில் 12 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாயை எட்டி இருக்கும் என கூறப்படுகிறது.

இதுவரை அந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

(படத்தின் பட்ஜெட் ரூ. 250 கோடி) தியேட்டர்களின் வசூல் நிலவரம் இதுவென்றாலும் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமை பலப்பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தயாரித்த ‘லைகா’ நிறுவனம், இதற்கு முன்னதாக தயாரித்து வெளியிட்ட ‘லால் சலாம்’, ‘இந்தியன்-2 ஆகிய இரண்டு படங்களில் பெரும் நஷ்டத்தை சந்தித்திருந்தது.

இந்த நிலையில் ‘வேட்டையன்’ வசூல் நிலவரம் லைகா நிறுவனத்துக்கு ஆறுதலை அளித்துள்ளது.

‘தளபதி’ விஜயின் ‘கோட்’ திரைப்படம் முதல் நாளில், 126 கோடி ரூபாய் அள்ளிய நிலையில், அந்த வசூல் சாதனையை முறியடிக்க தவறியுள்ளது ‘வேட்டையன்’. எனினும் ‘கோட்’ படத்திற்கு பிறகு சிறந்த ஓப்பனிங் கொண்ட 2-வது படமாக அமைந்துள்ளது, ரஜினியின் படம்.

– பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment