மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும்!

- வைரமுத்து பேச்சு

கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளில் உருவாகியுள்ள ‘வேட்டைக்காரி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து,  ஒரு நடிகர் தன்னை close up இல் வைக்க சொன்னபோது எத்துப் பல்லாக உள்ளது, அசிங்கமாக உள்ளது என்று சொன்னார்கள், அப்படி நிராகரிக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர்.

ஒரு படத்தில் ஒரு நடிகர் வசனம் பேசினால் மீன் வாய் திறப்பது போல உள்ளது வாயைத் திறக்காமல் பேச சொல்லுங்கள் என்றனர், அப்படி சொல்லப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன்.

கவிதை எப்போது இசையுடன் இணைந்து கொடி கட்டிப் பறக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்ப் பாட்டு உச்சத்தில் கொடி கட்டிப் பறந்திருக்கிறது.

ஒரு நல்ல கவிதை கிடைத்தால் ஒரு பாடலாசிரியர் பாடலாக்கி விடவேண்டும் என்று துடிப்பார். இப்போது நல்ல பாடல்கள் வருவதில்லை தெரியுமா? எதற்கு பஞ்சம் என்றால் பாடல்களை உட்கார வைக்க படத்தில் இடம் இல்லை.

ஆங்கில படத்தில் படத்தோட படமாய் பாடல்கள் தேய்க்கப்பட்டு விடுகிறது. அதை தமிழ்ப் படத்தில் பயன்படுத்தாதீர்கள்.

தமிழில் பிறக்கும் போது, தவழும் போது, நடக்கும் போது, இறக்கும் தருவாயில் கூட பாட்டு உள்ளது. படத்தில் பாட்டு நிற்க வேண்டும் என்றால் அதற்கு தனி திரைக்கதை இருக்க வேண்டும்.

காதலர்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள், திரைக்கு எதிர்ப்புறம் திரும்பி உட்காருகிறார்கள். சினிமா இங்கு ஓடுகிறது, அவர்கள் படம் அங்கு ஓடுகிறது.

கோடைக் காலத்தில் 50 ரூபாய் கொடுத்தால் 2 மணி நேரம் ஏசி-யிலிருந்துவிட்டு வரலாம் என்று திரையரங்குகளுக்கு வருகிறார்கள்.

இன்றைய கால கட்டத்தில் சினிமாவின் வடிவம் மாறுகிறது. ஆனால், அழிந்து விடவில்லை. மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும். அது தன் வடிவத்தைத் தான் மாற்றிக் கொள்ளும்” என்றார் வைரமுத்து.

Comments (0)
Add Comment