இயக்குநரின் 25 வருடப் போராட்டத்தைச் சொல்லும் ‘வீராயி மக்கள்’!

இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’.

இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தில் குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கியுள்ளார். எம். சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார்.

விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகர் வேல ராமமூர்த்தி:

இந்த மேடையில் உள்ள அத்தனை நபருடனும் எனக்கு ஒரு நல்ல நட்பு உள்ளது. இவர்கள் எல்லோருமே என்னைப் போல மண்ணை நேசிக்கும் மனிதர்கள்.

உண்மையில் சொல்லப் போனால் இந்தப் படத்தில் நான் நடிக்க வில்லை, எனக்கு அந்தக் கதாபாத்திரம் இயல்பாகவே பொருந்தி விட்டது.

இந்தப் படத்தில் நடிக்கும்போது என் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வு இருந்தது. என் அம்மாவைப் போல இந்த வீராயி என் கண் முன்னே தோன்றினார்.

படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அதற்கு முக்கியக் காரணம் இயக்குநர் நாகராஜ்.

இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே இப்படி ஒரு படத்தை உருவாக்க முடியும், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார்” என்றார்.

இயக்குநர் பேரரசு: 

தமிழ் சினிமாவில் இது போன்ற படங்களைப் பார்ப்பது அரிதாகி விட்டது. இப்போது வரும் படங்கள் அதிகமாக உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அனைத்தும் வியாபாரம் ஆகி விட்டது.

பெரிய படங்கள் தான் மக்களுக்கு பிடிக்கும் என்பது இல்லை. அதை மக்கள் பல முறை பொய்யாக்கி விட்டனர். மக்கள் நல்ல படத்திற்கு கண்டிப்பாக ஆதரவு கொடுப்பார்கள்.

மக்களுக்கு தேவையான படம் இது, மக்களும் இதை புரிந்து கொண்டு, இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும். இந்தப் படத்தை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் என்றார்.

நடிகர் ரவி மரியா: குடும்பத்துடன் பார்க்கும் படங்களின் வரிசையில் இந்தப் படம் முதலில் இருக்கும். பல குடும்பங்களை இந்தப் படம் இணைக்கப் போகிறது என்பது உறுதி.

இந்தப் படம் இயக்குநரின் 25 வருடப் போராட்டம். பல வலிகளைச் சுமந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். கண்டிப்பாக அவரது உழைப்பு வீண் போகாது. இந்தப் படம் மக்கள் மனதைக் கண்டிப்பாகக் கவரும்” என்றார்.

Comments (0)
Add Comment