தமிழக சட்டசபைத் தேர்தலை நோக்கியப் பயணத்தை ‘இளையத் தளபதி’ விஜய், வேகமாக நகர்த்த ஆரம்பித்து விட்டார். 150 கோடி ரூபாயைத் தாண்டி சம்பளம் வாங்கும் அவருக்கு, முதலமைச்சர் நாற்காலியின் மீது நீண்ட காலமாகவே ஒரு கண்.
படங்களின் தொடர் வெற்றி, வசூல் குவியல், திரளான ரசிகர் பட்டாளம் என அனைத்துமே, ஒருசேர கைகூடி வந்ததால், நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு என தீர்மானமாக அறிவித்து விட்டு, அதற்கேற்பக் காய்நகர்த்தி வருகிறார்.
கட்சியைத் தொடங்கிய கையோடு, உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் என அடுத்தடுத்த பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார் விஜய்.
அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி, சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
கொடியின் மேலும் கீழும் அடர் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறம் இடம்பெற்று இருந்தன. நடுவில் இரண்டு போர் யானைகளுடன் வாகை மலரும் கட்சிக் கொடியில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தவெக கட்சியின் முதல் மாநாட்டை, வெற்றிகரமாக நடத்துவதில், விஜய் முழு மூச்சாக இறங்கியுள்ளார்.
திருச்சியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் மாநாட்டை நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.
எனவே விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மாநாடு நடத்த முடிவாகியுள்ளது. இந்த இடம் 85 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது.
அந்த இடத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ம் தேதி மாநாடு நடத்த அனுமதி கேட்டு, தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் மாவட்டக் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திருமாலிடம் நேற்று மனு அளித்தார்.
இதையடுத்து மாநாடு நடத்த அனுமதி கோரியுள்ள இடத்தை, ஏடி.எஸ்.பி. திருமால் நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஸ்டாலின் பேசிய இடம்:
கடந்த மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் வேட்பாளர்களை ஆதரித்து, இந்த இடத்தில்தான் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இடம் என்பதால், சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து மாநாட்டுக்கு வருவோருக்கு, சவுகரியாக இருக்கும் என்பது தவெக நிர்வாகிகள் கருத்தாகும்.
ஒரு தொகுதிக்கு ஆயிரம் தொண்டர்கள் வீதம் 234 தொகுதிகளில் இருந்து மொத்தமாக இரண்டு லட்சத்து 34 ஆயிரம் தொண்டர்களைத் திரட்ட வேண்டும் என்பது விஜயின் இலக்காகும். தொண்டர்கள் நீங்கலாக பொதுமக்கள் 50 ஆயிரம் பேர் தானாக திரள்வார்கள் என்றும் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
மாநாட்டில் கட்சியின் கொள்கையை விஜய் அறிவிக்க உள்ளார். மாற்றுக் கட்சிகளில் இருந்து, இந்த மாநாட்டில் சில விஐபிக்கள் தவெக கட்சியில் சேரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
விஜய் என்பது V, வெற்றிக் கழகம் என்பது V, விக்கிரவாண்டியும் V என விஜய் கட்சியினர் ‘விக்டரி’யை சுட்டிக்காட்டுகிறார்கள்.
– பாப்பாங்குளம் பாரதி.