மலையாள சினிமாவை அலற வைத்த பாலியல் விவகாரம்!

கேரளாவில் மட்டுமின்றி, சர்வதேச தளங்களிலும் மலையாள சினிமாக்களுக்கு, தனித்த மரியாதை எப்போதுமே உண்டு. சினிமாவில் பல ஜாம்பவான்களை உருவாக்கிய, விருதுகள் தேசத்தில் இன்று, கறையும் களங்கமும் ஒரு சேரப்படிந்திருப்பது, உலக சினிமா ஆர்வலர்களை, வேதனையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

பூகம்பத்தை உருவாக்கிய ஹேமா கமிட்டி:

மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்தக் கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

இந்தக் கமிட்டி அறுபதுக்கும் மேற்பட்ட, நடிகைகள், பெண் கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் விசாரணை நடத்தியது. படங்களில் நடிக்க வந்தபோது அனுபவித்த கொடுமைகள் குறித்து அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் ‘ஹேமா கமிட்டி’ தனது விசாரணைகளில் தெரிய வந்த உண்மைகளை அறிக்கையாக தொகுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தாக்கல் செய்தது.

4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அறிக்கை வெளியிடப்படாமல் உள்ள நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் சில தினங்களுக்கு முன்னர், ‘ஹேமா கமிட்டி’ அறிக்கை வெளியானது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கூறப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் இல்லையென்றாலும், அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில விஷயங்கள் அதிர வைப்பதாக உள்ளது.
அதில் சில சாம்பிள்கள்:

* சினிமாவில் வாய்ப்பு தேடும் பெண்கள் காம்பர்மைஸ், அட்ஜஸ்ட்மென்ட் ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலையே கேரள சினிமா உலகில் உள்ளது

* பாலியல் இச்சைகளுக்காக பலரும் நிர்பந்திக்கப்படுகிறார்கள் – நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலரிடம் இருந்து பாலியல் தொல்லைகள் உள்ளன.

* பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளும் ‘காஸ்டிங் கவுச்’ சினிமாத்துறையில் உள்ளது – நடிகைகள் தங்கும் ஹோட்டல் அறைகளின் கதவுகளை இரவு நேரத்தில் தட்டுவது சினிமாத்துறை ஆண்களின் வழக்கம்

* சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களின் பிடியில் மலையாள சினிமா உள்ளது – இவர்கள் மற்றவர்கள்மீது அதிகாரத்தைச் செலுத்தி வருகின்றனர்.

இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் இந்தத் துறையிலிருந்து வெளியேற்றும் அதிகாரம் படைத்த மாஃபியாவாக இவர்கள் உள்ளனர் – இந்த பவர் குரூப்புக்கு எதிராக பேசவோ செயல்படவோ செய்தால் சினிமா துறையில் இருந்து விலக்கி வைக்கும் நிலை உள்ளது

மேற்சொன்னது போல், இது ஒரு சில சாம்பிள்கள் தான்.

ஹேமா கமிஷனின் இந்த ‘கண்டுபிடிப்புகள்’, தனிப்பட்ட நபர்கள் குறித்து நடிகைகள் நேரடியாக அளித்த வாக்குமூலம் ஆகும். தகவல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்குமூலம் அளித்த நபர்களின் பெயர்களோ, குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெயரோ வெளியிடப்படவில்லை.

ஆனாலும், ஹேமா கமிஷன் அறிக்கை குறித்த விவாதத்தில் சிலரது பெயர்கள் வெளிப்பட்டு வருகின்றன.

மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஸ்ரீலேகா மித்ரா என்ற நடிகை பிரபல டைரக்டரும், மலையாள திரைப்பட அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

“மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த பாலேரி மாணிக்கம் என்ற படத்தில் நடிக்க வந்தபோது தன்னிடம் டைரக்டர் ரஞ்சித் அத்துமீறினார் – கதை சொல்லும் சாக்கில் அறையில் வைத்து என்னுடைய உடலில் தொட்டார்” என்பது ஸ்ரீலேகாவின் புகார்.

இதேபோல ரேவதி சம்பத் என்ற நடிகை, கேரள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் பொதுச் செயலாளர் சித்திக் மீது பரபரப்பு புகாரை தெரிவித்தார்.

தான் பிளஸ்-டூ முடித்த நேரத்தில் தன்னை அணுகிய நடிகர் சித்திக், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி, பலாத்காரம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை ரஞ்சித்தும், சித்திக்கும் மறுத்தனர். எனினும், ‘அம்மா’ பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சித்திக்கும், மாநில அரசின் திரைப்பட அகாடமி தலைவர் பொறுப்பில் இருந்து ரஞ்சித்தும் நேற்று விலகி விட்டார்கள்.

சித்திக், தனது ராஜினாமா கடிதத்தை, நடிகர் சங்கமான ‘அம்மா’வின் தலைவர் மோகன்லாலுக்கு அனுப்பினார்.

ரஞ்சித், கேரள அரசுக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள கேரள கலாச்சாரத்துரை அமைச்சர் சஜித் செரியன், “பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டோர், முறைப்படி புகார் அளித்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்துள்ளார்.

மரியாதைமிக்க மலையாள சினிமா பிரபலங்கள் மீது அடுத்தடுத்து குவியும் பாலியல் புகார்களால் மலையாள சினிமா உலகம் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவித்துள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment