இணையத்தில் கசிந்த ராஜமவுலி படத்தின் காட்சிகள்!

தெலுங்கு தேசத்து பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி, ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஓய்வில் இருந்தார்.

ஓய்வு எடுத்தார், என்று குறிப்பிடுவதை விட, அடுத்து தான் உருவாக்க இருக்கும் புதிய படத்திற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

தனது அடுத்த படைப்பு ‘பான் வேர்ல்டு’ படமாக – உலகம் தழுவியதாக இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். அதனை இப்போது செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்.

எஸ்.எஸ். ராஜமவுலியின் புதிய படத்தில், தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கிறார், இரு ஜாம்பவான்களும் இணையும் முதல் படம் இது.

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தங்கள் இருவர் பேரையும் இணைத்து, தற்காலிமாக ‘SSMB 29’ என படத்துக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மகேஷ்பாபு தவிர, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் ஆகிய இருவரும் இந்தப் படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

இவர்கள் மட்டுமில்லாமல், கடல் தாண்டியும் புகழ் பெற்றுள்ள பிரபல முகங்களும் இந்தப் படத்தில் உண்டு. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

இரண்டு பாகங்களாக ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும், இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள அலுமினியம் தொழிற்சாலை ஒன்றில் நடைபெற்றது.

அங்கு காசி நகரம் போன்று அரங்கம் அமைக்கப்பட்டு ‘ஷுட்டிங்’ நடந்தது. இந்த அரங்கத்தை யாரோ செல்போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டனர்.

இப்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு ஒடிசா மாநிலத்தின் கோராபுத் பகுதியில் நடந்து வருகிறது. அங்குள்ள மலைப்பகுதியில், படப்பிடிப்புக்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கையும் விஷமிகள் படம் பிடித்து, இணையத்தில் கசிய விட்டனர்.

அரங்கங்கள் மட்டுமே வெளியானதால் படக்குழு, இதனை பொருட்படுத்தவில்லை. ஆனால் அந்தப் பகுதியில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இப்போது, இணையத்தில் கசிந்துள்ளன.

‘லீக்’ ஆகி இருப்பது மகேஷ்பாபுவும், பிருதிவிராஜும் பங்கேற்ற காட்சி ஆகும். கசிந்த காட்சியைப் பார்க்கலாம்.

திறந்த வெளியில் மகேஷ்பாபு நடந்து வருகிறார். அப்போது புயல் வீசுகிறது. வீல் சேரில் பிருத்விராஜ், அமர்ந்திருக்கிறார். அவரது அடியாட்கள், மகேஷ்பாபுவை அங்கே தூக்கிக்கொண்டு வருகிறார்கள்.

அவரை பிருதிவிராஜ் காலடியில் போடுகிறார்கள். மகேஷ்பாபுவை சுற்றிலும், அடியாட்களின் துப்பாக்கிகள் நீள்கின்றன.

இதுதான் இணையத்தில் கசிந்தக் காட்சி. பூட்டிய காருக்குள் இருந்து செல்போன் மூலம் இந்தக் காட்சி படம் பிடிக்கப்பட்டு, பிறகு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரங்கங்களைத் தொடர்ந்து படக்காட்சிகளும் கசிந்து விட்டதால், இயக்குநர் ராஜமவுலி, அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அவர் ஏற்கனவே, படப்பிடிப்பு தளத்துக்கு யாரும் செல்போன் கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். அதனையும் மீறி, யாரோ செல்போன் கொண்டு வந்து வீடியோ எடுத்திருப்பதால் அவர் ஆத்திரம் அடைந்துள்ளார்.

படத் தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியர்கள், கவனக்குறைவாக இருந்ததால் தான், ‘காட்சி திருட்டு’ நடந்துள்ளது, என்பது ராஜமவுலியின் கோபத்துக்குக் காரணம், காட்சிகள் ‘லீக்’ ஆனதால் அவர் கோபம் கொண்டு அவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.

‘படப்பிடிப்பு பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ள காவலர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, புதிய ஆட்களை நியமிக்குமாறும் கட்டளை பிறப்பித்துள்ளார்’, ராஜமவுலி.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment