திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் உள்ள மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த இயக்குநர் தாமிராவின் இயற்பெயர் ஷேக் தாவூத்.
இளநிலை விலங்கியலில் பட்டம் படித்துவிட்டு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
முற்போக்கு இதழியலாளர், சிறுகதை எழுத்தாளர்
சென்னையில் பொம்மை என்ற சினிமா இதழிலும், வேறு பல சினிமா இதழ்களிலும் கட்டுரைகள் எழுதிவந்தார். சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும் இருந்தவர்.
ஊரில் இருந்தபோதே சமூக செயல்பாடுகளிலும் இலக்கியத்திலும் ஆர்வமுடையவர் என்பதால் முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இலக்கிய இதழில் கவிதைகளும், சிறுகதையும் எழுதிவந்தார்.
இவரது சிறுகதைகள் பர்வதமலையில் ராஜகுமாரி, தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள் ஆகிய தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
தாமிரபரணி ஆற்றின் பெயரிலிருந்து தாமிரா என்பதை தனது புனைப்பெயராக்கிக் கொண்டார்.
கே.பாலசந்தரிடம் பணியாற்றியவர்
கே.பாலசந்தரிடம் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய தாமிரா, அவர் கடைசியாக இயக்கிய பொய் படத்திற்கு வசனமும் எழுதியிருந்தார்.
சஹானா, அண்ணி, மனைவி உள்ளிட்ட தொடர்களுக்கு திரைக்கதையும் வசனமும் எழுதியிருக்கிறார்.
தாமிரா கன்னடத்தில் வெளியான அமிர்ததாரே, மாத்தாடு மாத்தாடு மல்லிகே படங்களுக்கும் திரைக்கதை எழுதினார்.
இயக்கிய திரைப்படங்கள்
‘ரெட்டச்சுழி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆரி அர்ஜூனன் மற்றும் அஞ்சலி நடித்த அப்படம் 2010-ல் வெளியானது.
இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாலசந்தர் ஆகிய இருவரையும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தார்.
இதற்குப் பிறகு சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் ஆகியோரை வைத்து ‘ஆண் தேவதை’ என்ற படத்தை இயக்கினார். அடுத்ததாக தனது மூன்றாவது படத்தை இயக்குவதற்கான கதை விவாதம் உள்ளிட்ட பணிகளில் தற்போது தாமிரா ஈடுபட்டிருந்தார்.
எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய ‘பாயம்மா’ சிறுகதையைத் தழுவி மெஹர் என்ற டெலிஃபிலிம் எடுத்தார்.
தமிழ் முஸ்லிம்களின் வாழ்வில் நடக்கும் விடயங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட அந்தச் சிறுகதையை 2 மணி நேர தொலைக்காட்சிப் படமாக உருவாக்கினார் தாமிரா. இது தமிழ்ச் சூழலில் பேசாத பொருளைப் பேசியதால் பலராலும் பாராட்டப்பட்டது.
தமிழீழ ஆதரவாளர்
தமிழீழ ஆதரவாளரான இயக்குனர் தாமிரா 2009-ம் ஆண்டு போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி நடந்த போராட்டங்களில் முன்னணியில் நின்றார்.
மரண தண்டனைக்கு எதிராக படைப்பாளிகள் இணைந்தபோது, அதில் தன்னை இணைத்துக் கொண்டு மரண தண்டனைக்கு எதிராக தீர்க்கமாக கருத்து தெரிவித்தார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டங்களில் இடிந்தகரைக்குச் சென்று பங்கெடுத்தவர்.
தமிழ்நாட்டு வாழ்வாதாரப் போராட்டங்கள் அனைத்திலும் அக்கறை கொண்ட சமூக பொறுப்புள்ள படைப்பாளியாக விளங்கியவர்.
- நன்றி: மெட்ராஸ் ரிவ்யூ