‘உழவர்களின் தோழன்’ விருதைப் பெற்ற சிவகார்த்தியேன்!

எல்லா மாஸ் கதாநாயகர்களும் மக்களை நோக்கிச் செல்வதில்லை. சிவகார்த்திகேயன் ஒரு விதிவிலக்கு. காவேரி டெல்டாவின் இதயம் போன்ற பகுதிகளில் ஒன்றான திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் ரகங்களைக் காக்கும் விதமாக ‘நெல் திருவிழா’வைப் பல ஆண்டுகளாக நடத்தி வந்தவர் மறைந்த இயற்கை வேளாண் ஆளுமையான நெல் ஜெயராமன்.

அவர் சிகிச்சையில் இருந்தபோது கரம் கொடுத்த சிவகார்த்தியேன், ஜெயராமனின் மகனது கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

அத்துடன் நில்லாமல், சமீபத்தில் ராஜீவ் ஒருங்கிணைத்து நடத்திய நெல் திருவிழாவுக்குத் தஞ்சை விவசாயிகளின் அழைப்பை ஏற்றுச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு ‘உழவர்களின் தோழன்’ என்கிற விருதைத் தஞ்சை விவசாயிகள் வழங்கினர்.

மேடையில் இருந்தபடி காரில் ஏறிப் போய்விடாமல், கீழே இறங்கி வந்து விழாவில் கலந்துகொண்ட ஒவ்வொரு விவசாயியின் அருகில் போய் அவர்களது கைகளைப் பற்றிப் பேசியதுடன் 5 மணிநேரம் நிகழ்ச்சியில் இருந்ததை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “நெல் திருவிழாவைத் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் நடத்துங்கள். நம்முடைய விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் என்னால் முடிந்ததைக் கடைசிவரை நான் செய்துகொண்டே இருப்பேன்” என்றார். இந்த நிகழ்வில் ‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’ படங்களின் இயக்குநர் இரா.சரவணனும் கலந்துகொண்டார்.

Comments (0)
Add Comment