இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் காலமானது திரைத்துறைக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு. அவர் கடைசியாக இசையமைத்த திரைப்படம் ‘புயலில் ஒரு தோணி’.
அந்தப் படத்தின் இயக்குநர் ஈசன் நெகிழ்ச்சியாகக் கூறியவை இதோ.
“பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
நான் கதையை தேர்வு செய்யும் முன்பாகவே பவதாரிணியைத் தான் இசையமைப்பாளராக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.
முழு படத்தையும் முடித்த பின்பு பவதாரிணியை நேரில் சந்தித்து முழு படத்தையும் திரையிட்டு காட்டினேன். அவருக்கும் மிகவும் பிடித்துப் போனது.
படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டையும் கவிஞர் சினேகன் எழுதியுள்ளார். இரண்டு பாடல்களையும் மிக விரைவாகவே எங்களுக்கு கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார்.
இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். ஒரு பாடலை ஜி.வி. பிரகாஷ் குமாரும், மானசியும் பாடியுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார்.
புயலில் ஒரு தோணி படத்திற்கான பின்னணி இசையை மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் அமைத்துள்ளார் பவதாரிணி.
படம் வெளிவருவதிற்கு முன்பாக இவ்வாறு நிகழும் என்று துளியளவும் நினைத்துப் பார்க்கவில்லை. இப்போதும் எங்களால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை.
எங்கள் திரைப்படத்தின் மிகப்பெரியப் பலம் அவர். பவதாரிணி கிரீடத்தில் உள்ள வைர கல்.
எங்கள் திரைப்படத்தின் வெற்றியை அவருக்கு கூடிய விரைவில் அர்ப்பணிப்போம்” என உருக்கமாக் கூறியுள்ளார்.