சினிமாத் துறையில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்!

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் கோரிக்கை

ராஜா பத்மநாபன் இயக்கத்தில், பலராம் ஜெ.பாலாஜி நடிப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் இளையராஜா, “தயாரிப்பாளர் பாரதி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற,  பாடலாசிரியர் ஜெயந்தி,இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, நடன இயக்குநர் தினேஷ், கலை இயக்குநர் சம்பத் திலக், எடிட்டர் ராம் கோபி உள்ளிட்டோர் பங்கேற்று இசை ஆல்பத்தைப் பற்றிப் பாராட்டிப் பேசினர். 

தொடர்ந்து பேசிய இயக்குநர் சரண், “இந்த ஒரு பாடலை வைத்து மட்டுமே அதை ஒரு படமாக எடுக்கலாம். சரிகம சாதாரணமாக ஒரு பாடலை தேர்வு செய்து தங்கள் தளத்தில் வெளியிடாது.

பல செக் லிஸ்ட் அதற்கு உண்டு. அதை எல்லாம் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள் என்றால் அங்கேயே வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்.

கமர்ஷியலாக ஒரு பாடலை வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு தினேஷ் மாஸ்டர் மெனக்கெடுவார்.

என்னுடைய சீனா தானா, தெற்கு சீமையிலே போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவதற்கு காரணம் தினேஷ் மாஸ்டர் உடைய நடன அமைப்புதான்.

இந்த பாடலையும் அவர் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரலும், இசையும் நன்றாக உள்ளது.

இயக்குநர் பேரரசு: “பாடலில் நடித்துள்ள பாலாஜிக்கு கதாநாயகன் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு. எல்லா ஹீரோவுக்கும் பிடிக்கும் ஒரே டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மாஸ்டர்தான்.

நடிகர் விஜய் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்றாலும் ஓகே சொல்லி விடுவார். ஆனால், முதல்முறையாக ‘சிவகாசி’ படத்தில் அவர் பரிந்துரை செய்த ஒரே நபர் தினேஷ் மாஸ்டர் தான்.

‘கோடம்பாக்கம் ஏரியா…’ பாடலுக்கு விஜய்யுடன் ஆட வைக்க சிம்ரன், ஜோதிகா முயற்சி செய்து பிறகு நயன்தாராவை ஆட வைத்தோம்.

நடனத்திற்கு நயன்தாராவுக்கு இரண்டு நாட்கள் ரிகர்சல் பார்த்தோம். அன்று தினேஷ் மாஸ்டர் கோரியோகிராஃபிக்கு விஜயும் நயன்தாராவும் மட்டும்தான் நடனம் ஆடினார்கள். இன்று ரீல்ஸில் நிறைய பேர் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சைலண்ட் இன்ஃபுளூயன்சர் பாடலின் நாயகன் பாலாஜி, விஜயின் தீவிர ரசிகர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் திரைத்துறையில் இருந்து முதலமைச்சராக விஜய் வந்திருக்கிறார். அது நமக்கு பெருமையான விஷயம்.

இன்று சினிமாவில் நாம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். அதற்கெல்லாம் விடிவு காலமாக விஜய் ஆட்சி அமையும்.

தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் காலம் தாழ்த்திக் கொடுக்காமல் படம் வெளியான அடுத்த வருடமே கொடுத்தால் அது விருது பெறுபவர்களுக்கும் புத்துணர்ச்சியாக அமையும்.

அரசியல் பணிகளில் இருந்தாலும் எம்ஜிஆர், கருணாநிதி இவர்களுக்கு சினிமா துறை மீது தனி பாசமும் அக்கறையும் உண்டு.

எந்த பிரச்சனை என்றாலும் அதைக் கேட்டறிந்து அதற்கு ஒரு தீர்வு எட்டினார்கள். அதன் பிறகு வந்தவர்கள் சினிமாவை கைவிட்டு விட்டார்கள்.

அது போல் இல்லாமல் எம்ஜிஆர், கலைஞர் போல முதல்வர் விஜய்யும் சினிமா துறை மீது அக்கறை கொண்டு எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்ட வேண்டும்” என்றார்.

இயக்குநர் எழில்: “படம் எடுத்து மக்களிடம் சென்றடைவதற்கு முன்பாக இப்படி ஒரு ஆல்பம் மூலம் ஹீரோ, இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் என அனைவரும் மக்களிடம் சென்றடைவது நல்ல விஷயம்.

இது புத்திசாலித்தனமான நகர்வும் கூட! பாடல் தானே என்று ஏனோ தானோ என செய்யாமல் சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் இதில் பணியாற்ற வைத்து நேர்தியாக எடுத்து இருக்கிறார்கள்”.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்:நல்ல படங்கள் கொடுக்கும் இயக்குநர்கள் குறைந்து விட்டார்கள். அவர்களை சரியாக பயன்படுத்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தவறி விட்டார்கள்.

தமிழ்த் திரையுலகை காப்பதில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்”. என்றார்.

Comments (0)
Add Comment