டீசர், ட்ரெய்லர் உட்படப் பல வகையான விளம்பர உத்திகளைப் பயன்படுத்தியபிறகும், சில படங்கள் எவ்வித எதிர்பார்ப்பையும் உருவாக்காது. ஆனால், அவற்றைப் பார்க்க அமர்ந்தால் இருக்கையை விட்டு எழ முடியாது.
அவை எந்த வகைமைப் படங்களாகவும் இருக்கலாம். அதற்குச் சமீபத்திய உதாரணமாகியுள்ளது அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஷாட் பூட் த்ரி’.
வெங்கட்பிரபு, சினேகா, யோகிபாபு, ஷிவாங்கி, டெல்லி கணேஷ், அருண் வைத்தியநாதன், கவிதாலயா கிருஷ்ணன், ஷிவாங்கி ஆகியோர் நடித்திருந்தாலும், இப்படத்தின் கதை கைலாஷ் ஹீத், பிரனிதி, வேதாந்த் வசந்த், பூவையார் உள்ளிட்ட நான்கு பதின் பருவக் குழந்தைகளை மையமாகக் கொண்டது.
‘அப்படின்னா இது குழந்தைகளுக்கான படமா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சரி, இப்படம் தரும் அனுபவம் எப்படிப்பட்டது என்று பார்க்கலாமா?
காணாமல்போன நாய்!
நாய், பூனை உள்ளிட்ட வீட்டு விலங்குகளை மையமாக வைத்து உலகம் முழுக்கப் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
கிறிஸ்துமஸ் மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு, குழந்தைகளைக் கவரும் பல வகைமைத் திரைப்படங்களில் ஒன்றாக இதற்கும் முன்னுரிமை அளித்து வருகிறது ஹாலிவுட்.
அந்த வரிசையில், ஆங்கிலப் பட பாணியிலான திரைக்கதையைக் கொண்டுள்ளது ‘ஷாட் பூட் த்ரி’.
கைலாஷ் (கைலாஷ் ஹீத்), பல்லவி (பிரனிதி) மற்றும் பல்லு (வேதாந்த் வசந்த்) மூவரும் ஒரே வகுப்பில் பயிலும் நண்பர்கள்.
அது மட்டுமல்லாமல், மூவரது குடும்பங்களும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் வசித்து வருகின்றன. அதனால், மூவரும் எந்நேரமும் இணைபிரியாமல் தோழமையோடு இருந்து வருகின்றனர்.
அதேநேரத்தில், அம்மூவரையும் அவர்களது குடும்பத்தினர் நோக்கும் விதம் வேறாக உள்ளது. கைலாஷின் பெற்றோர் (வெங்கட்பிரபு – சினேகா) அவருக்குப் பொறுப்பே இல்லை என்று அடிக்கடி வருத்தமுறுகின்றனர்.
‘தனது மகள் படிப்பில் கவனம் செலுத்தாமல் பாட்டு பாடுவதில் விருப்பமாக இருக்கிறாளே’ என்பது பல்லவி தந்தையின் எரிச்சல். பல்லுவுக்கு எதையும் எதிர்த்துப் போராடும் துணிச்சல் இல்லையே என்பது அவரது பெற்றோரின் கவலை.
பல்லவி, பல்லு, கைலாஷ் மூவருக்கும் நெருக்கமான நண்பராகத் திகழ்கிறார் ரமணா (பூவையார்). அக்குழந்தைகள் குடியிருக்கும் இடத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார் ரமணாவின் தந்தை.
பள்ளிக்குச் செல்லாமல் வெளியுலகில் உள்ளவர்களோடு நட்பு பாராட்டுவது ரமணாவின் முழு நேர வேலை. அது மட்டுமல்லாமல், மூவரது ஆசைகளையும் தீர்த்து வைப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அப்படித்தான், நாய் வளர்க்க வேண்டும் என்ற கைலாஷின் ஆசையைப் பூர்த்தி செய்கிறார் ரமணா. அந்த நாய்க்கு ‘மேக்ஸ்’ என்று பெயரிடுகிறார் கைலாஷ். அவரது தாய் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பிறகு சமாதானம் ஆகிறார்.
ஓராண்டு கழிகிறது. தீபாவளிக்கு முந்தைய நாள், அலுவலக வேலையாகக் கைலாஷின் பெற்றோர் வெளியூர் செல்கின்றனர்.
அன்றைய தினம், தனது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டில் இருப்பதாகச் சொல்கிறார் கைலாஷ்.
எல்லாமே சரியாகப் போய்க் கொண்டிருக்க, திடீரென்று மேக்ஸ் காணாமல் போகிறது.
சிசிடிவி பதிவில், அது குடியிருப்பை விட்டு வெளியேறியது தெளிவாகத் தெரிகிறது. அதையடுத்து, மேக்ஸை தேடி கைலாஷ், பல்லு, பல்லவி, ரமணா நால்வரும் திருட்டுத்தனமாக வெளியே செல்கின்றனர்.
அதன்பிறகு என்ன நடந்தது? மேக்ஸ் மீண்டும் அவர்களுக்குக் கிடைத்ததா என்று சொல்கிறது ‘ஷாட் பூட் த்ரி’யின் மீதி.
நாய் காணாமல் போவதாக அமைந்துள்ள இக்கதையில், அது யார் யார் கைவசம் சென்றது என்பதைப் பல திருப்பங்களுடன் விவரிக்கிறது திரைக்கதை.
அது திரும்பக் கிடைக்கும்போது, சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களையும் ‘பேண்டஸி’யாகச் சொல்கிறது.
குழந்தைகளுக்கான படம்!
கைலாஷ் ஹீத், பிரனிதி, வேதாந்த் வசந்த் மூவரையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதனால், மூவருக்கும் சம அளவு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
பூவையார் சில காட்சிகளே வந்தாலும், ‘சூப்பர் சிங்கர்’ ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளும்விதமான ‘பெர்பார்மன்ஸை’ தந்திருக்கிறார்.
இவர்கள் நால்வரது நடிப்பு அருமையாக இருக்கும் காரணத்தாலேயே, அவர்களது பாத்திரங்கள் இயல்பானதாகத் தெரிகின்றன.
வெங்கட்பிரபு, சினேகா இடம்பெறும் காட்சிகள் சட்டென்று நம்மை ஈர்க்கின்றன. டெல்லிகணேஷ் இடம்பெறும் காட்சியும் அந்த வகையிலேயே அமைந்துள்ளது.
ஆட்டோ டிரைவராக வரும் யோகிபாபு, கந்துவட்டிக்காரராக வரும் சாய் தீனா, விலங்குகள் நல ஆர்வலராக வரும் ஷிவாங்கி இடம்பெறும் காட்சிகள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன.
சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு, குழந்தைகளுக்குப் பிடித்தமான துள்ளலைத் திரையில் நிறைக்கிறது. அதற்கேற்றவாறு, எந்த இடத்திலும் நிற்காமல் அலைந்தோடும் பாணியைக் கைக்கொண்டிருப்பது சிறப்பு.
படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், திரையில் குழப்பமின்றிக் கதை சொல்ல உதவியிருக்கிறார். பின்பாதியில் ஆளுக்கொரு பக்கமாகப் பிரியும் காட்சிகளில் கொஞ்சமாகத் திணறியிருக்கிறார்.
கலை இயக்குனர் ஆறுசாமி குழுவினரின் உழைப்பில், அடுக்குமாடிக் குடியிருப்பு காட்சிகள் நம் மனதோடு ஒட்டிக் கொள்கின்றன.
யோகிபாபுவின் வீடு, மாநகராட்சி கிடங்கு, சீட்டாட்ட கிளப் போன்றவற்றை வடிவமைத்ததில் நிறையவே சினிமாத்தனம் தென்படுகிறது.
இயக்குனர் அருண் வைத்தியநாதன் மற்றும் ஆனந்த் ராகவ், இப்படத்தின் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கின்றனர்.
என்னதான் நாயைத் தேடி சாலைகளில் திரிவதாகக் கதையை அமைத்திருந்தாலும், முழுப்படமும் உயர் நடுத்தரவர்க்க வாழ்க்கைமுறையையே ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அதையும் மீறி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்விதமாகச் சில அம்சங்களைத் திட்டமிட்டுச் சேர்த்திருப்பது அருண் வைத்தியநாதனின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.
இந்த படத்தில் ‘பால் மழையின் தூறலில்’, ‘நீ இல்லாமல் நான் தவிப்பதா’, ‘ஷாட் பூட் த்ரி’, ‘மைத்ரிம் பஜேத’ என்று நான்கு பாடல்கள் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ராஜேஷ் வைத்யா.
ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான உணர்வினை ஊட்டுகின்றன என்றபோதும், பால் மழை பாடல் சட்டென்று நம் மனதோடு ஒட்டிக்கொள்கிறது.
போலவே, முன்பாதியில் அமைந்துள்ள பின்னணி இசை நம்மைத் துள்ளாட்டம் போட வைக்கிறது. பின்பாதியில், காட்சிகளின் தன்மைக்கேற்ப தேடலையும் வாடலையும் முன்னிலைப்படுத்துகிறது.
ராஜேஷ் வைத்யாவின் இசை இன்றி இப்படத்தைப் பார்த்தால், நிச்சயம் அது உப்புச்சப்பில்லாத அனுபவமாகவே இருக்கும். அதுவே, அவரது பங்களிப்புக்கான சரியான பாராட்டு!
லாஜிக் கிடையாது!
வேளாவேளைக்குக் குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடுத்தனுப்பிவிட்டு, வீட்டிற்கு வந்த விருந்தினர்களைக் கவனிப்பதில் மட்டுமே ஈடுபடும் பெற்றோர்கள் சினிமாவில்தான் இருக்க முடியும். இந்த படத்தில் அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் உள்ளன.
இரவு நேரத்தில் நான்கு குழந்தைகள் அங்குமிங்கும் நாயைத் தேடிச் சுற்றியலைவது யதார்த்தமற்றது.
படத்தில் காவல் துறையினரைக் காட்டினாலும், பல காட்சிகளில் சினிமாத்தனம் அதிகம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
லாஜிக் அடிப்படையில் பார்த்தால், இக்கதையில் ஓட்டைகள் அதிகம். அப்படியொன்று சுத்தமாகக் கிடையாது என்று கூடச் சொல்லலாம்.
அது போன்ற குறைகளைப் புறந்தள்ளிவிட்டு, ‘இப்படத்தில் காட்டப்படுவது இன்னொரு உலகம்’ என்று நோக்கினால் ‘பீல்குட்’ அனுபவம் கிடைக்கும்.
அது மட்டுமல்லாமல், வீட்டு விலங்குகளைக் குழந்தைகளாகப் பாவிக்கும் மனிதர்கள் எக்காலத்திலும் உண்டு.
அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகவும், குழந்தைகளுக்கேற்ற படங்களைப் பார்க்க விரும்பும் பெற்றோர்களை ஈர்க்கும் விதமாகவும் ‘ஷாட் பூட் த்ரி’ உள்ளது என்று உறுதியாகச் சொல்லலாம்.
ஆதலால், அந்த எதிர்பார்ப்போடு மட்டுமே தியேட்டருக்கு வருபவர்களை இப்படம் திருப்திப்படுத்தும்!
– உதய் பாடகலிங்கம்