ரஜினி பெயரைச் சொல்லி நடிகையிடம் மோசடி!

மலையாளத்தில் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற சினிமா மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் ஷைனி சாரா. இவர் இப்போது, மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார்.

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்க வைப்பதாகச் சொல்லி ஒரு நபர் சாராவிடம் மோசடி செய்ய முயன்றுள்ளார்.

இது குறித்து நடிகை ஷைனி சாரா, பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ள விவரம்:

‘சில நாட்களுக்கு முன் எனது ‘வாட்சப்’ போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. ரஜினியின்  ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது – இதற்காக நடிகர்களை தேர்வு செய்யும் ஏஜென்சி உங்கள் பெயரை பரிந்துரைச் செய்துள்ளது.

அந்தப் படத்தில் நீங்கள் ரஜினியின் மனைவியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள் – இது குறித்து சுரேஷ்குமார் என்பவர் உங்களைத் தொடர்புகொண்டு பேசுவார்’ என அந்த நபர் தெரிவித்தார்.

இரண்டு நாள் கழித்து சுரேஷ்குமார், வாட்சப் காலில் பேசினார் – சேலை அணிந்து வருமாறு கூறினார் – நானும் சேலை அணிந்து அவருடன் வாட்சப் காலில் பேசினேன் – ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக நீங்கள் நடிக்கத் தேர்வாகி உள்ளீர்கள் என்று சொன்னார்.

‘எனக்கு சந்தேகம் வந்தது – முதல் பாகத்தில், ரஜினி மனைவியாக ரம்யா கிருஷ்ணன் அல்லவா நடித்திருந்தார்? என்று கேட்டேன் – அவர், கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு ‘இது ரஜினி நடிக்கும் வேறொரு படம் – மலேஷியாவிலும் ஷுட்டிங் உள்ளது.

பாஸ்போர்ட் உள்ளது அல்லவா? என்றார். இந்தப் படத்தில் நடிக்க உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்படும் –  உறுப்பினர் கார்டு எடுக்க வேண்டும். அதற்கு 12,500 ரூபாய் செலவாகும். அதனை அனுப்பி வையுங்கள் என்றார்.

இங்கே அதெல்லாம் கிடையாதே – எனக்கு இரண்டு நாள் டைம் கொடுங்க என்றேன். அவர், நான் வேண்டுமானால் முதல் தவணையை செலுத்துகிறேன் – பிறகு, நீங்கள் பணத்தை அனுப்பி வைக்கலாம்’  என்றார்.

எனக்கு சந்தேகம் வலுத்தது. எனது, மலையாள சக நடிகைகளான மாலா பார்வதி, லிஜோமோல் ஆகியோர் தமிழில் நடித்துக்கொண்டிருப்பதால் அவர்களிடம் இது குறித்து கேட்டுத் தெரிந்துகொள்ள போன் செய்தேன். இருவரும் எடுக்கவில்லை.

எனது தோழியான இன்னொரு நடிகையைத் தொடர்பு கொண்டேன். அவர்தான், ‘இது மோசடி கும்பல் வேலை – ஏமாந்து விடாதே என்று எச்சரித்தார்’ என்று அந்த வீடியோவில் ஷைனி சாரா தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் உள்ள அனைத்து ஊடகங்களிலும், சாராவின் வீடியோ தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment