தரம் குறைந்த படங்கள் தோல்வி: தப்பித்த ஓடிடி தளங்கள்!

கொட்டகைகளில் மட்டுமே திரைப்படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டாடும் தருணங்கள் ஒரு காலத்தில் இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி, அந்தக் கோலாகலத்தை இடம் பெயர்த்து விட்டன.

ஆரம்பத்தில் வீடியோ கேசட்டுகள், அதன்பின், தொலைக்காட்சிகள் போன்ற நுட்பங்கள், நமது இல்லத்துக்கு உள்ளேயே, சினிமாவைக் கொண்டு வந்து விட்டன.

புதிய வரவு – ஓடிடி தளங்கள்.

மேல்தட்டு குடிமக்கள் மட்டுமே அறிந்து வைத்திருந்த ஓடிடி தளங்கள், கொரோனா கால கட்டத்தில்தான், சாமான்ய மக்களுக்கும் அறிமுகமானது.

கொத்து கொத்தாக உயிர்களைப் பறித்த கொரோனா, இயல்பு வாழ்க்கையை முடக்கியதோடு, தியேட்டர்களையும் மூட வைத்தது.

வீட்டில் அடங்கிக் கிடந்த மகாஜனங்கள் அப்போதுதான், ஒடிடி தளங்கள் மீது பார்வையைத் திருப்பினர். எல்லா மொழிகளிலும் மக்களுக்கு ஓடிடியில் சினிமாக்கள் கிடைத்தன.

படங்களைத் தயாரித்து, விற்க முடியாமல் விக்கித்து, விரக்தியுடன் நின்ற திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், ஆபத்பாந்தவனாக உதவியது ஓடிடி தளங்கள்.

கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடியாமல் புதுப் படங்கள் தவித்தபோது, கைகொடுத்தது இந்த ஓடிடிக்கள்தான்.

அப்போது தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் தரும் வகையில் அந்தப் படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்கி வெளியிட்டன.

அந்தச் சமயத்தில் கட்டுப்பாடு இல்லாமல், எல்லா படங்களையும் ஓடிடி நிறுவனங்கள் வாங்கிக் குவித்தன. ஓடிடி தளங்களில், எல்லோரும், எல்லாவற்றையும் பார்த்தனர்.

ஆனால், கொரோனா விடைபெற்று, திரை அரங்குகள் வழக்கம் போல் செயல்பட்ட பின்னர், நிலமை மாறியது. ஓடிடி தளங்களின் படங்களை ரசிகர்கள் வடிகட்டினார்கள்.

கதை அம்சம் கொண்ட படங்களுக்கு மட்டுமே பார்வைகள் கிடைத்தன. பல படங்களை மக்கள் நிராகரித்தனர். அவை கதையில் கோட்டைவிட்ட படங்களாக இருந்தன.

இதனால் உஷாரான ஓடிடி நிறுவனங்கள், இனி நல்ல கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, ரசிகர்களை ஈர்க்கும் மேக்கிங் இருந்தால் மட்டுமே படங்களை வாங்குவது என முடிவு செய்தன.

தியேட்டர்களில் ஓடாத, கல்லா கட்டாத, புதுமைகள் ஏதும் இல்லாத படங்களை ஓடிடி நிறுவனங்கள் அதிரடியாக நிராகரித்தன.

கடந்த ஆண்டு தமிழில் வெளியான மொத்த படங்கள் 241. இவற்றில் வெறும் 76 படங்களை மட்டுமே ஓடிடி நிறுவனங்கள் வாங்கியுள்ளன. 165 படங்களை நிராகரித்து விட்டன.

ஏன் இந்தத் திடீர் மன மாற்றம் என ஓடிடி நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது, தெளிவாக தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.

“ரசிகர்கள் மாறிவிட்டார்கள் – அவர்கள் உலக சினிமாவைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் – படத்தின் டிரெய்லரை வைத்தே அது எந்த வெளிநாட்டு படத்தின் காப்பி என்பதை கண்டுபிடித்துவிடுகிறார்கள் – சமீபத்தில் கூட அதுபோல் மாட்டிக்கொண்ட ஒரு பெரிய படம் பற்றி எல்லோருக்குமே தெரியும்.

அதனால் இனி புதுமை மட்டுமே எடுபடும்.

அவர்களின் பசிக்கு மலையாள சினிமா தீனி போடுகிறது. கடந்த ஆண்டில் மட்டுமே 228 மலையாளப் படங்கள் திரைக்கு வந்தன. அதில் நேரடியாக ஓடிடியில் வெளியான மலையாளப் படங்கள் 41.

தியேட்டரில் வெளியான பிறகு ஓடிடி நிறுவனங்கள் வாங்கியது 83 படங்கள். மொத்தமாக 124 மலையாளப் படங்களை ஓடிடிக்கள் வாங்கியுள்ளன.

மலையாளப் படங்கள்போல் தமிழ் படங்களும் எடுக்கப்பட்டால் அதை ஓடிடிக்கள் கண்டிப்பாக நல்ல விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளது” என்று தெளிவாக எடுத்து வைத்தார்.

ஓடிடி நிறுவனங்களின் விளக்கம் நியாயமாகவே உள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment