தமிழக முன்னாள் முதல்வரும், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவி திருமதி. ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் 24-வது நினைவுநாளையொட்டி (மே-19) தாய் இணைய இதழின் சிறப்புப் பதிவு.
தமிழக மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் சாதனை மனிதர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆருக்கு, அவருடைய இறுதிக் காலம்வரை பக்க பலமாக இருந்தவர் ‘தோட்டத்தம்மா’ என்று எங்களால் அன்போடு அழைக்கப்பட்ட திருமதி. ஜானகி அம்மா அவர்கள்.
என்னுடைய தாய் வழித் தாத்தா திரு.பி. நாராயணன் என்கிற மணி அவர்களின் உடன்பிறந்த மூத்த சகோதரி தான் திருமதி. ஜானகி ராமச்சந்திரன்.
கேரள மாநிலம் வைக்கம் எனும் ஊரில், பொன்மனச்சேரி இல்லத்தில் 1923 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி, ராஜகோபால் அய்யர்-வைக்கம் நாராயணி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர் வி.என்.ஜானகி.
இவரது தந்தை ராஜகோபால் அய்யர் கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்டவர். சிறந்த தமிழாசிரியரான இவர், பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
இவரது தம்பி ‘தமிழ்த் தியாகராஜர்’ என்று அழைக்கப்பட்ட பாபநாசம் சிவன். ராஜகோபால் அய்யர் ஜெமினி ஸ்டூடியோ, மாடர்ன் தியேட்டர் உள்பட பல இடங்களில் பணியாற்றியவர். அவருடைய மனைவி வைக்கம் நாராயணி. கேரள மாநிலம் வைக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்த வி.என்.ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டியம், ஆங்கிலம் என பன்மொழிப் புலமைப் பெற்றவர்.
தென்னிந்திய நடனக் கலைகளான பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி உள்ளிட்டவைகளில் சிறப்பான பயிற்சி பெற்றவர்.
இயக்குநர் கே.சுப்பிரமணியம் தோற்றுவித்த ‘நிருத்யோதயா’ நடனப் பள்ளியின் முதல் மாணவி. முறையாக நடனம் கற்றுக் கொண்ட பின்னர், ‘நடன கலாசேவா’ என்ற நாட்டியக் குழுவில் சேர்ந்து, பல ஊர்களில் ஏராளமான நாட்டிய நாடகங்களில் நடித்துள்ளார்.
அது தவிர சிலம்பம், கத்திச்சண்டை உள்ளிட்ட தற்காப்புக் கலைகளிலும் இவர் கைதேர்ந்தவர். 1937 ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய இவர், 25 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைத்துறையில் இருந்த காலங்களில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வந்தவர்.
எம்.ஜி.ஆர் திரைத்துறையிலும், அரசியலிலும் வளரத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே, தோட்டத்தம்மா எம்.ஜி.ஆருக்கு பக்கபலமாக இருந்தார்.
சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில், வீட்டிலிருந்து உணவைக் கொண்டு வரச்சொல்லி, அதையும் தோட்டத்தம்மா கையால் பரிமாறச் சொல்லி சாப்பிடுவதையே விரும்பி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.
உண்மையில் சேச்சாவின் (எம்.ஜி.ஆர்) கொடுக்கும் குணத்திற்கு சற்றும் சளைத்தவரல்ல தோட்டத்தம்மா. உதவி கேட்டு வந்தவரை சேச்சா வீட்டுக்கு அனுப்பினால், வந்தவரின் சூழலைப் புரிந்து, சேச்சா சொன்ன தொகையை விட கூடுதலாகவே கொடுத்து அனுப்புவாராம்.
1950 களில் சென்னை லாயிட்ஸ் சந்தில் (லாயிட்ஸ் லேன்) உள்ள ஒரு வீட்டில் எம்.ஜி.ஆரும், தோட்டத்தம்மாவும் வசித்து வந்தனர். அப்போது தோட்டத்தம்மாவின் சொந்த உழைப்பில் வாங்கப்பட்டது தான், தற்போது அ.இ.அ.தி.மு.க-வின் தலைமை அலுவலமாக உள்ள இடம்.
1956 இல் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி தொடங்கப்பட்டபோது எம்.ஜி.ஆருடன் தோட்டத்தம்மாவும், எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியும் நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்தனர்.
எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கிய ‘நாடோடி மன்னன்’ என்ற வெற்றித் திரைப்படம் உருவாக மிகமுக்கியக் காரணம் தோட்டத்தம்மா தான்.
எம்.ஜி.ஆரும்-ஜானகியும் திரையுலகில் உச்சம் தொட்டிருந்த காலகட்டத்தில், எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி மறைவுக்குப் பிறகு, 1962 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கும் தோட்டத்தம்மாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
இதனிடையே, 1961-ல் சதானந்தவதியின் உறவினர் சீதாதேவியை, ஜானகி அம்மையாரின் சகோதரர் நாராயணனுக்கு எம்.ஜி.ஆர் திருமணம் நடத்தி வைத்தார்.
என்னுடைய தாய் திருமதி. லதா ராஜேந்திரன் 1962 ஆம் ஆண்டு பிறந்தார். அப்போது ராமாபுரம் தோட்டத்திற்கு குடியேறிய எம்.ஜி.ஆரும் ஜானகியம்மாவும், என்னுடைய அம்மா லதாவையும் உடன் அழைத்துச் சென்றனர். அவர்களுடைய அரவணைப்பில் ராமாபுரம் தோட்டத்தில் வளர்ந்தார் என்னுடைய தாயார்.
அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, ஜானகி அம்மாள் அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டார்.
இதேபோல், 1984 ல் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும், அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டவர் தோட்டத்தம்மா தான்.
என்னுடைய அம்மா லதாவின் எதிர்காலத் தேவையான கல்வி, வாழ்க்கைக்குத் தேவையான அன்பு மற்றும் நல்லொழுக்கத்தையும் புகட்டி வளர்த்தனர் எம்.ஜி.ஆரும் தோட்டத்தம்மாவும்.
பின்னர் 1977-ல் சென்னை கலைவாணர் அரங்கில் என்னுடைய பெற்றோர் லதா-ராஜேந்திரனின் திருமணத்தை நடத்தி வைத்ததும் அவர்கள் தான்.
1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நான் பிறந்தபோது எம்.ஜி.ஆர் டெல்லியில் இருந்தார். அப்போது ஜானகி அம்மா தான் என்னுடைய அம்மாவை உடனிருந்து கவனித்துக் கொண்டார்.
எனக்கு பெயர் வைத்தது தொடங்கி, டான் பாஸ்கோ பள்ளியில் சேர்த்தது வரை என்னுடைய வாழ்க்கையின் அடித்தளம் உறுதியாக அமைவதற்கு ஊன்றுகோலாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆரும் தோட்டத்தம்மாவும்.
மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த எம்.ஜி.ஆர், 1987 ஆம் ஆண்டு மறைந்தபிறகு, தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சரானார் ஜானகியம்மாள்.
சிறுது காலத்திலேயே அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற அவர், தன் இறுதிக் காலம் வரை எம்.ஜி.ஆரின் கொள்கைகளைப் பின்பற்றுவதிலும், அதைப் பரப்புவதிலும் கவனம் செலுத்தி வந்தார்.
எம்.ஜி.ஆர் உருவாக்கிய காதுகேளாதோர் மற்றும் வாய்ப்பேச முடியாத குழந்தைகளுக்கான இல்லத்தை கவனித்து வந்த தோட்டத்தம்மா, 1996 ஆம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி தனது 73-வது வயதில் இயற்கை எய்தினார்.
எம்.ஜி.ஆர் வறுமையில் இருந்தவர்களுக்கு வாரி வழங்கினார் என்றால், தோட்டத்தம்மாவோ பசியோடு வந்தவர்களுக்கு வயிறாற உணவளித்தார்.
அவர் வாழும் காலம் வரை ராமாபுரம் இல்லத்தின் கதவுகள், பசித்த மக்களுக்காக திறந்தே இருந்தது. அங்கிருந்த சமையலறை ஓய்வின்றி இயங்கிக் கொண்டே இருந்தது.
கும்பகோணத்தில் தொடங்கிய ஜானகி அம்மையாரின் பயணம், கோட்டை வரை சிறப்பாகச் சென்றடைந்ததே பெருமைக்குரிய ஒன்று தான்.
தோட்டத்தம்மாவின் இறுதி நாட்களில் நான் அவருடன் மூன்று மாதங்கள் வரை உடனிருந்தேன்.
உயிா் பிாிந்த கடைசித் தருணத்திலும், அவருடன் இருந்தது எனது பெரும்பாக்கியம்.
“கல்வியும், கலையும் நமக்கு மிகப்பெரிய சொத்து. அதை நம்மிடம் இருந்து யாராலும் பிாிக்க முடியாது. கலையும், தொழிற்கல்வியும் கற்றுக் கொண்டால், இந்த உலகின் எந்த மூலையிலும் வாழ்ந்து விடலாம்” என்று என்னிடம் அடிக்கடி சொல்வாா், தோட்டத்தம்மா. அது அனுபவப்பூா்வமான உண்மை என்பது இப்போது புாிகிறது.
– ரா.செல்வக்குமரன், வழக்கறிஞா்.