ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது? திரையில் நாம் காணும் அனுபவத்தைப் போல அது நிச்சயமாக இராது. ஏனென்றால், அதன் பின்னே பல தடைகளைக் கடந்த வலிகள், வேதனைகளுக்குப் பின்னால் இருக்கும் தியாகங்கள், பெரும் போராட்டங்கள் நிறைந்திருக்கும்.
அவற்றைக் கடந்து, அவை குறித்த சிறு தடயத்தைக் கூடப் பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட திரைப்படம் திரையில் ஒளிரும்.
அதனால், அது எப்படி உருவானது என்பதை அறிய நேர்வது நிறையவே சங்கடங்களைத் தருவதாக இருக்கும். அதற்காக நாம் செலவழிக்க வேண்டிய காலமும் பொறுமையும் மிகப்பெரியது.
அதனாலேயே, படப்பிடிப்புகளை வேடிக்கைப் பார்க்கச் சென்ற எவரும் அதனைத் தொடர்கதையாகத் தொடர்வதில்லை. பல ஆண்டுகளாக இதுவே வழக்கமாக இருந்து வருகிறது.
அது மட்டுமல்லாமல், படப்பிடிப்புத்தள சூட்சமங்களை மக்கள் அறிந்துவிட்டால் திரைப்படங்களைக் கொண்டாடுகிற போக்கு அருகிவிடும் என்ற நம்பிக்கையும் திரையுலகில் இருந்து வருகிறது.
அதற்கு வழிவிடும் விதமாக, படப்பிடிப்புத்தளத்தைக் காட்டுகிற, அதனைக் கதைக்களமாக, மையக் கருவாகக் கொண்ட படங்கள் வெற்றி பெறாது என்ற நம்பிக்கையும் நிலவி வந்தது.
இந்த நிலையில், சமீபகாலமாக அந்தக் கற்பிதங்கள் உடைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ‘பயாஸ்கோப்’ எனும் படமானது ஒரு கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து திரைப்பட உருவாக்கத்தில் பங்கேற்றதைப் பேசும் வகையில் தயாராகிறது.
இந்தப் படத்தினை இயக்கியிருப்பவர் சங்ககிரி ராஜ்குமார். அவர் இயக்கிய முதல் படமான ‘வெங்காயம்’ படப்பிடிப்பில் என்னவெல்லாம் நிகழ்ந்தன என்பதை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இதில் புதுமுகங்களோடு சத்யராஜ், சேரன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
‘சினிமா பற்றி எதுவுமே தெரியாத ஒரு கிராமத்து மக்கள் எப்படி ஒரு படத்தை எடுத்தாங்க என்பதே இதன் கதை’ என்றிருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்.
அதனை எதிர்கொண்டபோது, தமிழில் இதே போன்ற கருப்பொருளில் எத்தனை படங்கள் வெளிவந்திருக்கின்றன என்ற கேள்வி எழுந்தது?
அறுபதுகளில் தொடக்கம்!
ஒரு படப்பிடிப்புத் தளத்தில், பாடல் பதிவு அரங்கில், படத்தொகுப்பு அறையில் என்னென்ன நிகழும்? இந்தக் கேள்வியை யோசித்திராத காலமொன்று உண்டு.
அப்படியான காலகட்டத்தில் வெளியான ‘சர்வர் சுந்தரம்’ (1964) படத்தில் ஒரு நடிகைக்கு இயக்குநர் தான் நடிப்பு சொல்லிக் கொடுப்பார் என்று காட்டப்பட்டிருக்கும்.
திரையில் நாயகனாகத் தெரிகிற ஒருவர், அதற்கு முன்னர் சாதாரண மனிதனாக எப்படிப்பட்ட அனுபவங்களை எதிர்கொண்டார் என்பதும் சொல்லப்பட்டிருக்கும்.
கே. பாலச்சந்தர் எழுதிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை இயக்கியவர்கள் கிருஷ்ணன் – பஞ்சு.
ஜெயசித்ரா நடித்த ‘சினிமா பைத்தியம்’ படமானது, திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் படப்பிடிப்புத்தளத்தில் எப்படி இருப்பார்கள் என்று காட்டியது.
1975இல் வெளியான இப்படத்தை இயக்கியவர் முக்தா சீனிவாசன். இது ‘ஹுடி’ எனும் இந்திப் படத்தின் ரீமேக் ஆகும்.
1980இல் வெளியான ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் இயக்குநர் பாரதிராஜா நாயகனாக அறிமுகமாகியிருந்தார். ஒளிப்பதிவாளர் பி.எஸ். நிவாஸ் அதனை இயக்கியிருந்தார்.
கிராமமொன்றில் சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. அதனைக் காணும் இரண்டு இளம்பெண்களில் ஒருவர் அப்பட நாயகன் மீதும், இன்னொருவர் அதன் இயக்குநர் மீதும் காதல் கொள்வதைக் காட்டியது.
அவர்களது காதல் என்னவானது என்பதைச் சொன்ன இப்படம், நிஜத்திற்கும் நிழலுக்குமான வேறுபாட்டைச் சொன்னது.
இயக்குநர் கே.பாக்யராஜின் படங்களில் பெரிய விலைக்கு விற்பனையாகி, அவரை விநியோகஸ்தர்கள் கொண்டாட வழி வகுத்த படம் ‘தாவணிக் கனவுகள்’.
இதில் ஐந்து தங்கைகளைக் கொண்ட நாயகன் எப்படி திரையுலகில் நிஜமாகவே வெற்றி பெற்று நாயகன் ஆகிறான் என்பதைச் சுவைபடச் சொல்லியிருந்தார் பாக்யராஜ்.
பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்த வி. சேகர் இயக்குநராக அறிமுகமான படம் ‘நீங்களும் ஹீரோதான்’. இத்தனைக்கும் அந்தப் படம் இயக்கும்போது அவர் நடுத்தர வயதைத் தொட்டிருந்தார். ஆனாலும், அடுத்த பட வாய்ப்பு குறித்து யோசிக்காமல் இப்படம் தந்திருந்தார்.
இப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குத் தமிழ் திரையுலகில் நிலவிய சில விஷயங்களை அப்படத்தில் சொல்லியிருந்தார்.
நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹீரோ ஒருவரை அவரது ரசிகர்கள் எப்படிக் கொண்டாடுகின்றனர் என்பதைக் காட்டியிருந்தார்.
இதில் நகைச்சுவை வேடமேற்று நடித்த கவுண்டமணி, செந்தில் இருவரும் வேறு சில படங்களிலும் திரையுலகைக் கிண்டலடித்து வசனம் பேசியிருக்கின்றனர். அந்த ’சுய கிண்டல்’ பலரும் கைக்கொள்ளத் தயங்குவது.
ராஜீவ்மேனனின் ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் அஜித்குமார் உதவி இயக்குநராக இருந்து இயக்குநர் அந்தஸ்தை எட்டும் பாத்திரமாகத் தோன்றினார்.
‘வேகம்னு ஒரு ஸ்கிரிப்ட் எங்கிட்ட இருக்கு’ என்று அவர் பேசுகிற காட்சி இன்றைக்கும் கூட சிரிப்பை வரவழைக்கக் கூடியது.
அப்படம் வந்த 2000ஆவது ஆண்டில் வி. இசட். துரை இயக்கிய ‘முகவரி’ வெளியானது. அதில் இசையமைப்பாளராக ஆகும் முயற்சியில் இறங்கிய ஒரு இளைஞராக நடித்திருந்தார் அஜித்.
‘புதிய கீதை’ தந்த கே.பி. ஜெகன் இரண்டாவதாக இயக்கிய படம் ‘கோடம்பாக்கம்’. கிராமத்தில் இருந்து சினிமா கனவுகளோடு வந்த ஒரு மனிதன், அதனை நனவாக மாற்றினாரா என்று சொன்னது இப்படம்.
‘ரகசியமானது காதல்’ என்ற சிற்பியின் பாடல் மட்டுமே, இன்றும் இதன் அடையாளமாக இருந்து வருகிறது.
மலையாளத்தில் வெளியான ‘உதயநானு தாரம்’ படத்தின் ரீமேக் ‘வெள்ளித்திரை’. விஜி இயக்கிய இந்தப் படத்தில் ஒரு சினிமா படப்பிடிப்புத்தளம் எப்படி இருக்கும் என்பது குறைவான சினிமாதனத்துடன் காட்டப்பட்டிருந்தது.
இன்றும் சிம்புவை ரசிகைகள் கொண்டாடுகிற படமாக இருந்து வருகிறது ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. கௌதம் மேனன் இயக்கிய இந்தப் படத்தில் சிம்பு உதவி இயக்குநராகத் தோன்றியிருப்பார்.
‘ஜெஸ்ஸி’ பின்னால் உருகி உருகிக் காதலிப்பதே இப்படத்தின் மையம் என்றபோதும், அத்திரைக்கதையின் முதுகெலும்பாக தமிழ் திரையுலகம் தொடர்பான காட்சிகள் இருந்தன.
முகம் தெரியாத நடிகர்களின் பழைய படங்களைப் பார்க்கையில், ‘காசு கொடுத்துட்டு நடிச்சிருப்பாங்க’ என்ற கமெண்ட் எழுவது தொண்ணூறுகளில் வழக்கமாக இருந்தது. ‘உப்புமா படங்கள்’ என்றொரு பெயரும் அவற்றுக்கு உண்டு.
கிட்டத்தட்ட அப்படியொரு தொனியில், ஒரு உண்மையான ரவுடியைத் திரையில் நாயகனாகக் காட்டினால் எப்படியிருக்கும் என்று சொன்னது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’.
கடந்த ஆண்டு இதன் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வெளியானது. இரண்டுமே ஒரேமாதிரியான கதை அமைப்பைக் கொண்டிருந்தாலும் இருவேறு விதமான திரையனுபவங்களைத் தந்தன.
பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, இதே பின்னணியில் ஒரு ‘த்ரில்லர்’ அனுபவத்தைத் தந்தது. அப்படத்தில் தன் பாணியில் திரையுலக நடைமுறைகளைக் கிண்டலடித்திருப்பார் பார்த்திபன்.
ராதாமோகனின் ‘உப்பு கருவாடு’, கமல்ஹாசன் திரைக்கதை எழுதிய ‘உத்தம வில்லன்’ போன்ற படங்களிலும் படப்பிடிப்புத்தளங்களே காட்சிகளின் பின்னணியாக அமைக்கப்பட்டிருந்தன.
இது போக உபேந்திராவின் கன்னடப்படமான ‘ஏ’, மலையாளத்தில் வெளியான ‘செல்லுலாய்ட்’, ஷாரூக்கானின் ‘ஓம் சக்தி ஓம்’ உள்ளிட்ட சில படங்கள் நமக்கு மேற்சொன்ன திரையனுபவத்தைத் தந்திருக்கின்றன.
அசோக்செல்வன் இயக்கிய ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ படத்தில் இயக்குனராகவே வந்து போயிருந்தார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.
மேற்சொன்ன படங்களில் பெருவெற்றி அடைந்த படங்களும் உண்டு; பப்படம் ஆனவைகளும் உண்டு.
மொபைல் போனை கையிலெடுத்துக்கொண்டு ஆளாளுக்கு ‘ரீல்ஸ்’ எடுத்து ‘அப்லோட்’டுகிற காலம் இன்று கனிந்திருக்கிறது. படப்பிடிப்பு என்ற வார்த்தை நம் வாழ்வோடு கலந்துவிட்டது.
அதனால், தமிழ் திரையுலகின் பழைய செண்டிமெண்ட்கள் நைந்து கிழிந்துவிட்டன.
சிறப்பான எழுத்தாக்கம், காட்சியாக்கத்தோடு மக்களின் தினசரி வாழ்வோடு ஒட்டிக்கொள்கிற கதை சொல்லலைக் கொண்டிருந்தால் எந்தவொரு படமும் வெற்றி பெறும்.
அந்த வகையில், சினிமா படப்பிடிப்புகளைக் காட்டுகிற திரைப்படங்களும் வெற்றி பெறும் எனும் நம்பிக்கை சமீபகாலத்தில் ஆழமாக வேர் கொண்டிருக்கிறது.
– மாபா.