எப்படி இருக்கிறது நகைச்சுவை உணர்வு?

நாடக அனுபவத்தைப் பகிர்ந்த மனோரமா

“அது 1958-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் எனக்கு ஜோடியாகக் காக்கா ராதாகிருஷ்ணன் நடித்தார். கண்ணதாசன் கதை, வசனம் எழுதித் தயாரித்த படம் அது.

ராதா கிருஷ்ணனும், நானும் ஒரு பணக்கார வீட்டின் வேலைக்காரனும், வேலைக்காரியும். என்பெயர் அஞ்சலை; அவர் பெயர் சுடலை.

முதல் காட்சியில் நான் ஒருபுறமாக வீட்டைப் பெருக்கி, சுத்தம் செய்யும் போது, அவர் வேறுபுறமாகப் பெருக்கிக் கொண்டுவருவார்.

அவர் சுத்தம் செய்து வைத்திருந்த இடத்தில் நான் பெருக்கிய குப்பைகள் பறந்துபோய்விட, அவர் கோபத்துடன் என்னிடம் சண்டைக்கு வருவார்.

‘அதுதான் உன் எல்லை. அதை மீறி உள்ளே வராதே’ என்று ஆரம்பித்து சண்டை பெரிதாக வளர்ந்துவிடும்.

‘ஐயாவோட துப்பாக்கிய எடுத்து உன்னைச் சுடலே என் பேர் சுடலே இல்லே….’ என்று அவர் மிரட்ட,

‘சர்த்தான் போய்யா.. உன் பேச்சுக் கெல்லாம் நான் ஒண்ணும் அஞ்சலே…’ என்று நான் பதில் சொல்வேன்.

அப்போ அங்கே வந்த கணக்குப்பிள்ளை, ‘என்ன…? என்ன நடக்குது இங்கே….? கூட்டலே… பெருக்கலே… ஒண்ணுமே ஆகலே போலிருக்கு…’ என்பார்.

‘அதுவா…. நான் கூட்டிடணும்ன்னுதான் பார்க்கிறேன்; ஆனா இவ தான் தட்டிக்கழிக்கப் பார்க்கிறா…’ என்று காக்கா கூறுவார்.

இப்படி வார்த்தைகளை வைத்து ஜாலம் பண்ணும் காட்சிதான் நான் முதன்முதலாக நடித்த நகைச்சுவைக் காட்சியாகும்.

‘திக்குத் தெரியாத வீட்டில்’ என்ற நாடகம் அப்போது மிகவும் பாப்புலர்.

பின்னால் அதுவே திரைக்கும் வந்தது. அந்த நாடகத்தில் ஒரு காட்சியில் வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் ‘இதோ உங்கள் ஸ்நோ என்று கூறி பாட்டிலைக் கொடுக்க, அவர் அதை முகர்ந்து பார்த்து விட்டுத்  திருப்பித் தருவதாக  ஒரு  காட்சி. 

எப்போதும் வழக்கமாக வைக்கிற காலிபாட்டிலைக் காணததால் புதிதாக ஒரு ஸ்நோ பாடிலைக் கொண்டு வந்து யாரோ வைத்துவிட, அது தெரியாத நான், “இதோ உங்கள் ஸ்நோ பாட்டில்” என்று அவரிடம் நீட்ட,

விவரம் தெரியாமல் வெண்ணிற ஆடைமூர்த்தி காலி பாட்டில் என்று தினைத்து மூக்கை உள்ளே விட, மூக்கு முழுவதும் ஸ்நோ அப்பிக்கொண்டு விட்டது.

ஏற்கனவே மூர்த்திக்குக் கொழுக்கட்டை மூக்கு. அதில் ஸ்நோ வேறு அப்பிக்கொண்டு, கருடன் வேஷம் போட்டதைப்போல் இருந்தது. மேடையில் சுற்றி நின்று கொண்டிருந்த நடிகர்கள் எல்லோரும் மூர்த்தியைப் பார்த்து சிரித்துவிட்டோம்.

உடனடியாகத் திரையைத் தொங்க விடும்படி ஜாடை காட்டியும், கயிறைப் பிடித்து இழுக்க வேண்டியவரும் தன்னை மறந்து சிரித்து கொண்டிருக்க ஒரே கலாட்டாதான்.

‘காசேதான் கடவுளடா’ என்ற நாடகம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி சபாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

நாங்கள் எப்போது நாடகம் போட்டாலும் தவறாமல் ஒரு பெரியவர் வந்து அமர்ந்துகொண்டு சிரித்து ரசிப்பார்.

அன்று அதில் ஒரு நகைச்சுவை சீன்.

ஆடியன்ஸ் விடாமல் சிரித்துச் சிரித்துக் கைத்தட்டினார்கள். திடீரென்று அவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு, பின்னர் அந்தப் பெரியவரைக் கைத்தாங்கலாக வெளியே தூக்கிச்சென்றனர்.

பின்னர்தான் எங்களுக்கு விவரம் தெரிந்தது.

அவர் அந்த குறிப்பிட்ட காட்சியை மிகவும் ரசித்து ‘ஹோ ஹோ வென்று சிரித்தபோது, புரைக்கேறி ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

‘சிரிக்கவெச்சே கொன்னுருவாங்க போலிருக்கே’ என்று மற்றவர்கள் விமர்சனம் செய்தபோது இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை.”

– ஆர் . வனிதா

1994-ம் ஆண்டு மே மாதம் ‘புதிய பார்வை’  இதழில் வெளிவந்த கட்டுரை.

Comments (0)
Add Comment