25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு வரும் சங்கீதா!

90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் சங்கீதா. கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். குழந்தையாக இருந்தபோதே சினிமாவில் நுழைந்தவர்.

1978 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘சினேகிகன் ஒரு பெண்ணு’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

‘என் ரத்தத்தின் ரத்தமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக காலடி எடுத்து வைத்தார். பிறகு, தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

விஜய்யுடன் சங்கீதா இணைந்து நடித்த ‘பூவே உனக்காக’ படம் அவரை தமிழகம் முழுவதும் பிரபலமாக்கியது. விக்ரமன் இயக்கி இருந்தார். வெள்ளி விழா கொண்டாடிய படம்.

இந்தப் படத்தில், விஜய்யின் கதாபாத்திரம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றதோ அதே அளவுக்கு சங்கீதாவின் துறுதுறுப்பான நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

கை நிறைய படங்கள் இருக்கும்போது, திடீரென சங்கீதா, ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சரவணனை திருமணம் செய்தார்.

சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ எனும் படத்தை சரவணன் தான் இயக்கியிருந்தார். இந்தப் படம் சிம்பு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தாலும், வசூல் ரீதியாக தோல்வி அடைந்து விட்டது.

2000 ஆம் ஆண்டு சரவணன் – சங்கீதா திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப்பிறகு, சினிமாவில் இருந்து விலகி இருந்த சங்கீதா, 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நகர வருதி நடுவில் நியான்’ என்ற படம் மூலம் ரீ -எண்ட்ரிக் கொடுத்தார்.

கொஞ்ச ஆண்டுகள் இடைவெளி. மீண்டும், 2023 ஆம் ஆண்டு வெளியான ‘சாவித்’ எனும் மலையாளப் படத்தில் நடித்தார்.

அதன் பிறகு, ‘பராக்கிரமம்’, ‘ஆனந்த் ஸ்ரீ பாலா’ உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்தவர், 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு வருகிறார்.

பரத் நடிக்கும் ‘காளிதாஸ் -2’ படத்தின் மூலம் சங்கீதா தமிழ் சினிமாவுக்கு திரும்பியுள்ளார்.

47 வயதிலும், அதே குறும்பு முகத்துடனும், இளமையோடும் வசீகரமாக இருக்கிறார். சங்கீதா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.

அண்மையில் வெளியான ‘காளிதாஸ் – 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சங்கீதாவின் இளமையான போட்டோவும் இடம் பெற்றுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment