இது ஒரு அரிய கருப்பு வெள்ளை படம். 1964 இறுதி அல்லது 65 ல் எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.
நேரு மறைவுக்குப்பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக ஆகியிருந்த நேரம். அப்போது இந்தியா மீது போர் தொடுக்கக் கூடிய நிலையில் பாகிஸ்தான் இருந்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவியது.
அந்தச் சூழலில் தான் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும், அவருடைய துணைவியார் லலிதா சாஸ்திரியும் சென்னை வந்திருந்தனர்.
அப்படிப்பட்ட போர்ச் சூழலில் எடுக்கப்பட்டது தான் இந்தப் புகைப்படம். இதில், அன்றைய சென்னை மாகாண முதல்வர் பக்தவத்சலம், திரைப்பட நடிகர்கள் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, பத்மினி, ஜெயலலிதா, அவருடைய தாயார் சந்தியா, கே.ஆர்.விஜயா, வரலட்சுமி, கோபாலகிருஷ்ணன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என அத்தனை திரை உலகப் பிரபலங்களும் சாஸ்திரியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு நிதி உதவி செய்தனர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் படப்பிடிப்பில் இருந்ததால், இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை. ஆனால், போர் நிதியை அதிகமாகவே வழங்கினார்.
போர்முனைக்குச் சென்று ஜவான்களை ஊக்கம் தரும் வகையில் சந்தித்து இவர்கள் பேசியதும் உண்டு.
ரவிச்சந்திரனும் ஜெய்சங்கரும் அப்போது தான் திரை உலகில் கால் வைத்த நேரம். ‘சோ’ ராமசாமி இதில் கலந்து கொண்டதாக தெரியவில்லை.
நாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு, கருணாநிதி போன்றோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். எம்.டி.ராமராவ், சஹஸ்ரநாமம், டி.எஸ்.பாலையா, எஸ்.டி.சுப்பையா, நாகையா போன்ற குணச்சித்திர நடிகர்களும் இயக்குநர் ஶ்ரீதர் உள்ளிட்டோரும் இந்தப் புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
– வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்