மீண்டும் ‘பேட்ட’ இயக்குநருடன் இணையும் ரஜினி!

ரஜினிகாந்த், கபாலி, காலா போன்ற படங்களில் நடித்து முடித்திருந்த நேரம்.

இரண்டுப் படங்களும் நல்ல விமர்சனங்களைப் பெற்றன. வசூலுக்கும் குறை இல்லை, ஆனால் ரஜினி ரசிகர்களைக் கவரவில்லை.

அந்தச் சமயத்தில்தான் ‘ஜிகர்தண்டா’ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜிவுடன் இணைந்தார், ரஜினி. படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் ரஜினியின் தீவிர ரசிகர். சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் ரசனை அறிந்தவர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘பேட்ட’ படம் 2019 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் திரைக்கு வந்தது. ரசிகர்கள் படத்தைக் கொண்டாடித் தீர்த்தனர். வசூலிலும் பட்டையைக் கிளப்பியது ‘பேட்ட’.

அதன் பிறகு மீண்டும் ரஜினியும், கார்த்திக் சுப்பராஜும் இணையவில்லை.

ரஜினிகாந்த், இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். பெரும் நட்சத்திரப் பட்டாளம் இடம்பெற்றுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது.

‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் சில நாட்களாக நடித்து வருகிறார், ரஜினி. இரண்டுமே சன் பிக்சர்ஸ் படங்கள்.

இந்த நிலையில் ‘பேட்ட’ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அண்மையில் ரஜினியைச் சந்தித்து ஒரு கதையைச் சொல்லி உள்ளார்.

பேட்டயைப் போன்று அதிரடியான அந்தக் கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போனது. உடனடியாக ஓகே சொல்லிவிட்டார்.

‘ஜெயிலர் -2’ ஷுட்டிங் முடிந்ததும், ‘பேட்ட’ கூட்டணியின் ஆட்டம் ஆரம்பம் ஆகும்.

இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினியை வைத்து அந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது.

ரஜினி சிக்னல் கொடுத்து விட்டதால், திரைக்கதையை எழுதி வரும் கார்த்திக் சுப்பராஜ், பிற நட்சத்திரங்கள் உள்ளிட்ட கலைஞர்கள் பட்டியலையும் தயார் செய்து வருகிறார்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment