நடிகை ராஷிகண்ணா திரையுலகில் அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவு செய்துள்ளார். திரையுலகில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த ராஷிகண்ணாவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு நடிகை அதிகபட்சம் 10 வருடங்கள் திரையுலகில் நீடித்திருப்பது பெரிய விஷயம் என்ற நிலையில் அதுவும் நாயகியாக தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ராஷிகண்ணா.
தமிழில் ‘இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத் தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதைக் குறித்து நெகிழ்ச்சியோடு பேசிய ராஷிகண்ணா, “நடிகர்-நடிகைகளுக்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய சொத்து. அவர்களின் அன்பு எனக்கு முதல் படத்தில் இருந்தே கிடைக்கத் தொடங்கியது.
நான் நடிக்க ஆரம்பித்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. முதல் தெலுங்கு படத்தில் நடித்தபோது எனக்கு மொழி தெரியாது. ஆனால் ரசிகர்கள் என்னை அவர்கள் வீட்டுப் பெண் மாதிரி ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு தமிழில் அடி எடுத்து வைத்தேன்.
அங்கும் ரசிகர்கள் எனக்கு கொடுத்த ஆதவை மறக்கவே முடியாது. எனது திறமையை நிரூபித்துக்கொள்ள இயக்குநர்கள் வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
நான் நடித்த படங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது” எனத் தெரிவித்துள்ளார் ராஷிகண்ணா.