ஜெர்மன் திரைப்படமான ‘டிஸ்டன்ஸ்’ பெருந்தொற்றின்போது உருவாக்கப்பட்ட ஆவணப்படமாகும். பேரழிவு தரும் தொற்றுநோயால் தூண்டப்பட்ட பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மையால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் லார்ஸ் நார்ன் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘உலக சினிமா’ (சினிமா ஆஃப் தி வேர்ல்ட்) பிரிவில் டிஸ்டன்ஸ் (தூரம்) படம் திரையிடப்பட்டது.
இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் லார்ஸ் நார்ன், “நம்மைச் சுற்றி நிகழும் அச்சம் மற்றும் மாற்றங்களுக்கு மத்தியில் முன்னோக்கித்தள்ள வேண்டிய மனித தேவையை ஆராய முயற்சித்தேன்” என்று குறிப்பிட்டார்.
தொற்றுநோய்களின் போது தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளும் லாஸ்லோவின்
வாழ்க்கையைச் சுற்றி இந்தப் படம் அமைந்துள்ளது.
உலகளாவிய தொற்றுநோயால் ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவு நேரத்தில், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இப்படம் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவரும் தொற்றுநோய்க்காக அறிவிக்கப்பட்ட சமூக நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றினர்.
“படம் முடிந்தவரை யதார்த்தமானதாகவும், உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். நடிகர்கள் முகக்கவசம் அணிந்து நடிக்க வேண்டியிருந்தது.
அப்போது எங்கள் குழுவினர் முகக்கவசம் அணிந்தவர்களைப் படம் பிடிக்க தயக்கம் காட்டினர்.” என்று கூறியுள்ளார் லார்ஸ் நார்ன்.
“தொற்றுநோய் மனிதக் குலத்தின் வாழ்க்கையை மாற்றிய தருணம். இதைப் படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் பிரதிபலிப்பது நம் கடமை.
ஒரு இசைக்கலைஞர், புகைப்படக் கலைஞர், எழுத்தாளர் அல்லது திரைப்படத் தயாரிப்பாளர் என எந்த ஒருவரின் படைப்பிலும் தொற்றுநோயை புறக்கணிக்க முடியாது” என லார்ஸ் நார்ன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் ஃபெலிக்ஸ் லீபெர்க், “இங்குள்ள வரலாறு மற்றும் கலாச்சாரம் இணக்கம், பகிர்தல், அன்பு மற்றும் பாசத்தை அதிகமாகக் கொண்டது” என்று குறிப்பிட்டார்.
நடிகர்கள் ஹன்னா எர்லிச்மேன், லூகாஸ் இங்கிலாண்டர் ஆகிய இருவருமே, நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற பயம் இருந்தபோதிலும், குழுவுடன் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுடன் வாழ்வது தங்களை பாதுகாப்பாக உணர வைத்ததாகக் கூறினர்.
‘டிஸ்டன்ஸ்’ திரைப்படம் இன்றைய நமது சமூகத்தின் பிரதிபலிப்பு. இழப்பு, மன அழுத்தம், அகங்காரம், பயம், தாம்பத்யம் மற்றும் காதல் ஆகியவற்றின் விளைவுகளை லாஸ்லோவும் ஸோ-வும் மிகத் தூய்மையான மனித மாண்புடன் இந்தப் படத்தின் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளனர்.