தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
விண்ணப்பித்த 7 மாதங்கள் கழித்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் படத்துக்கு ஏ சான்றிதழ் அறிவித்துள்ளது
ஜனநாயகன் தொடங்கியது எப்படி?
வெங்கட்பிரபு இயக்கிய ‘கோட்’ படத்துக்குபின் விஜய்யின் 69வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி 2024 தொடக்கத்திலேயே எழுந்தது.
இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், எச்.வினோத், அட்லி ஆகியோர் அந்த பட்டியலில் இருந்தனர்.
தெலுங்கு இயக்குநர்களான திரிவிக்ரம், அனில்ரவிபுடி ஆகியோர் விஜய்யிடம் கதை சொன்னதாக தகவல்கள் கசிந்தன. கடைசியில் எச்.வினோத் ஒப்பந்தம் ஆனார்.
2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி முறைப்படி அறிவிப்பு வெளியானது.
அக்டோபர் 4-ஆம் தேதி சென்னையில் படப்பூஜை போடப்பட்டு மறுநாள் படப்பிடிப்பு தொடங்கியது.
‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்யுடன் மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பதாக அடுத்தடுத்து செய்திகள் வந்தன.
2025, ஜனவரி 26-ம் தேதி ‘ஜனநாயகன்’ தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் 27-ம் தேதி மலேசியாவில் பிரமாண்டமாக ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
2026, ஜனவரி 9-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ படத்தை தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிட முடிவு செய்து, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழ் பெற டிசம்பர் 18-ஆம் தேதி படக்குழுவினர் விண்ணப்பித்தனர்.
படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு வாரியத்தின் உறுப்பினர் ஆட்சேபம் தெரிவித்தார்.
இதையடுத்து, சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் ஜனவரி 6-ஆம் தேதி படத்தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது.
இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஜனவரி 9-ஆம் தேதி சென்னையில் வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அதை எதிர்த்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது.
அவர்கள் நீதிபதி பி.டி.ஆஷா தீர்ப்புக்கு தடை விதித்தனர். உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் தலையிட மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை உயர்நீதிமன்ற அமர்வே விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டது. மீண்டும் சென்னையில் வழக்கு நடந்தது.
கடைசியில் பிப்ரவரி 10-ஆம் தேதி கேவிஎன் நிறுவனம் தனது வழக்கை வாபஸ் பெற்றது. தாங்கள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடம் மீண்டும் அனுப்புவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்
மார்ச் 17-ஆம் தேதி சான்றிதழ் வாரிய அதிகாரிகள் ‘ஜனநாயகன்’ படத்தை மீண்டும் பார்த்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காலம் என்பதால், தவெக தலைவரான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிட தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவை என்று மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் கூறியது.
சில கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் தமிழக தேர்தல் முடிந்த பின்னரே படத்தை வெளியிடுவோம் என பட நிறுவனம் சொல்ல, அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வந்தது.
இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’
ஆனாலும், பல வாரங்களாக ஜனநாயகன் படத்துக்கு முறைப்படி சான்றிதழ் கிடைக்காத நிலை நீடித்தது.
இந்நிலையில், ஏப்ரல் 9-ஆம் தேதி ஜனநாயகன் படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்ததாக செய்திகள் வந்தன.
படத்தொகுப்பாளர் பிரதீப் அலுவலகத்தில் தவறு நடந்ததாக கூறப்பட்டது. அவர் படத்தொகுப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
ஜூலை11-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக ஜூலை 23-ல் ‘ஜனநாயகன்’ உலகம் முழுக்க வெளியாகும் என கேவிஎன் நிறுவனம் அறிவித்தது.
சமீபத்தில் ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதும் சர்ச்சை ஆனது.
குழந்தைகள் பார்க்க முடியாது
‘ஜனநாயகன்’ படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், 18 வயதுக்கும் குறைவானவர்கள் படத்தை பார்ப்பது சட்டப்படி குற்றம்.
இதனால், குழந்தைகள், 18 வயதுக்கு உட்பட்டோர் தியேட்டருக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களுடன் வந்தாலும் குழந்தைகளைத் திரையரங்கிற்குள் அனுமதிக்க முடியாது.
விஜய் நடிப்பில் ‘பகவதி’ படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கழித்து ‘ஜனநாயகன்’ படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.
31 நாடுகளில் 8 ஆயிரம் திரைகளில்…
இதனிடையே, ‘ஜனநாயகன்’ படத்தை இந்தியா உட்பட 31 நாடுகளில், சுமார் 8 ஆயிரம் திரைகளில் வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தெரிவித்துள்ளார்.
– மீனாட்சி சுந்தரம்
நன்றி: பிபிசி