பாகுபலி-1, பாகுபலி-2, ஆர்.ஆர்.ஆர்., ஆகிய படங்கள் மூலம் இந்தியாவைத் தாண்டி பேசப்பட்டவர் டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலி. இவை மூன்றுமே ‘பான் இந்தியா’ படங்கள். இதனைத் தொடர்ந்து அவர் ‘பான் வேர்ல்ட்’ படத்தை இயக்க உள்ளார்.
தெலுங்கில் எடுக்கப்பட்டு, பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்தப் படம் ரிலீஸ் ஆகும். இந்தப் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கிறார்.
‘SSMB-29′ என தற்காலிகமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஹீரோவைத் தவிர வேறு எந்த நட்சத்திரமும் முடிவு செய்யப்படாமல் இருந்தது.
கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என மாதக்கணக்கில் யோசித்து வந்த ராஜமவுலி, இப்போது பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த ஆறு மாதங்களாக இருவரும் விவாதித்து வந்துள்ளனர்.
கதை, தனது கேரக்டர், சம்பளம் போன்ற விஷயங்களில் திருப்தி ஏற்பட்டதால், ராஜமவுலிக்கு ஓகே சொல்லியுள்ளார் பிரியங்கா.
முன்னாள் உலக அழகியான அவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.
பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்போது கணவர் நிக் ஜோனஸ், மகள் மால்டி ஆகியோருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
ஹாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்துகிறார். ஆப்பிரிக்க காடுகளில் ஷுட்டிங்.
‘இண்டியானா ஜோன்ஸ்’ படத்தைப் போன்று, உலக அளவிலான மாஸ் ஆக் ஷன் அட்வென்சர் படமாக இது இருக்கும் என்று எஸ்.எஸ். ராஜமவுலி கூறியுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.
ஆப்பிரிக்க காடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அமெரிக்காவிலும் முக்கியக் காட்சிகள் எடுக்கப்படும்.
2026 ஆம் ஆண்டு இறுதிவரை படப்பிடிப்பு நடக்கிறது. 2027-ம் ஆண்டு படம் திரைக்கு வருகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.