ஆடு ஜீவிதத்திற்காக ஐந்து மொழிகளில் டப்பிங்!

- பிரிதிவிராஜ் நெகிழ்ச்சி

மலையாள சினிமாவில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடு ஜீவிதம்’. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, அதே பெயரில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

மலையாளத்தின் புகழ்பெற்ற இயக்குனர் பிளெஸ்சி தாமஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டார்.

2017 ஆம் ஆண்டே இந்தப் படத்தின் அறிவிப்பை பிளெஸ்சி வெளியிட்டார். கொரோனா காலகட்டத்தில், வளைகுடா நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

கேரளாவின் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த நஜீப் முகமது என்பவர் சவுதி அரேபியாவுக்கு ஆடு மேய்க்கும் வேலைக்குச் சென்று அங்கு மாட்டிக் கொண்டு, அவதிப்படுவதை சித்தரிக்கும் நாவல், இது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, எழுத்தாளர் பென் யாமின் இந்த கதையை உருவாக்கி இருந்தார்.

கதாநாயகனாக பிரிதிவிராஜும், அவரது ஜோடியாக அமலாபாலும் நடித்துள்ளனர்.

‘பான் இந்தியா’ படமாக உருவாகியுள்ள ‘ஆடு ஜீவிதம்’ மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதே ‘லைவ் ரெக்கார்டிங்’ முறையில் வசனங்கள் ‘லைவ்’ வாக மலையாளத்தில் பதிவு செய்யப்பட்டன.

படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளிலும், பிரிதிவிராஜ் ‘டப்பிங்’ பேசி முடித்துள்ளார்.

இது தொடர்பாக, பிரிதிவிராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மலையாளம் (லைவ் சவுண்ட்), தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி டப்பிங் முடிந்தது.

இந்த முழு கதாபாத்திரத்தையும் மீண்டும் ஒருமுறை வாழ்ந்திருக்கிறேன். 4 வெவ்வேறு மொழிகளில் மீண்டும் 4 முறை பார்த்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்தின் ஒலிக் கலவையை ரசூல் பூக்குட்டி கவனித்துள்ளார்.

வரும் 28 ஆம் தேதி திரையரங்குகளில் ‘ஆடுஜீவிதம்’ வெளியாக உள்ளது. இதற்கு முன்பும் டப்பிங்கில் ஐந்து மொழிகளில் பேசியுள்ளார் பிரித்விராஜ்.

பிரசாந்த் நீல் இயக்கிய சலார் திரைப்படத்தில் வில்லனாக பிரித்விராஜ் நடித்திருந்தார். பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோரின் கூட்டணியில் இந்தப் படம் உருவாகியது.

சலார் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது பேசிய பிரித்விராஜ் பல ஆண்டுகளாக நான் பணியாற்றிய பழமொழி படங்களிலும் எனது அனைத்து கதாபாத்திரங்களும் எனது சொந்த குரலை கொடுக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

என்னுடைய சில கதாபாத்திரங்களுக்கு நானே டப்பிங் பேசியிருக்கிறேன். ஆனால் என்னுடைய ஒரே கேரக்டருக்கு ஐந்து மொழிகளில் பேசுவது இதுவே முதல்முறை. மலையாளம் உள்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் சலார் படத்திற்காக டப்பிங் பேசியுள்ளேன்.

இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment