நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள ‘பித்தல மாத்தி’ திரைப்படம் நாளை (ஜூன்-14) உலகமெங்கும் வெளியாகிறது.
காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் உமாபதி ராமையா மாறுபட்டக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிக வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும். ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் மாணிக்க வித்யா, தயாரிப்பாளர் சரவணன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் ஆர்வி உதயகுமார், நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்: படத்தின் தலைப்பு வித்தியாசமாகவும் அழகாகவும் தமிழ்த் தலைப்பாகவும் உள்ளது. இப்போது நிறைய படங்களில் தமிழைத் தேட வேண்டியுள்ளது.
தமிழ்த் திரையுலகம் தற்போது மீண்டு எழுந்து வருவது போல் உள்ளது. கொஞ்ச நாட்களாக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமாகவும் வெற்றிப் படங்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.
எதார்த்தப் படங்கள் இன்றையக் காலகட்டத்தில் மக்களால் மிகவும் பாராட்டப்படுகிறது. பித்தலை மாத்தி படமும் நிச்சயம் டிரெண்ட் மாத்தி படமாக இருக்கும் என்றார்.
அடுத்து பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன்: இன்னைக்கு சினிமா ரொம்பவே சிரமத்தில் இருக்கிறது. பணக்காரனாக வந்த தயாரிப்பாளர்களை ஏழையாக அனுப்பி வைக்கின்றனர்.
தற்போது பெரும்பாலான படங்கள் ஆங்கிலத் தலைப்புடன் வெளிவருகின்றன.
முன்பு தமிழில் தலைப்பு வைத்த படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் பரிசீலனை செய்து வருகின்றனர்.
டிக்கெட் விலையை குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் மனு கொடுத்தேன் கவனிப்பதாக சொல்லியுள்ளனர். 100 படங்கள் வந்தால் 80 படங்கள் காணாமல் போகிறது. பெரிய வருத்தமாக உள்ளது” என்றார்.