இதுவரை சினிமா என்பது டீம் ஒர்க்… இனி!?

‘ஒன்’ படத்தின் மூலம் எல்லாவற்றையும் உடைத்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்

திரைப்படம் பிரபலமாக ஆரம்பித்த காலங்களில், ஒரு படம் என்றால் ஒருவர் கதை எழுதுவார். அல்லது சிலர் சேர்ந்து எழுதுவார்கள்.

அப்புறம் கதை விவாதக் குழு என்று சிலர் அமர்ந்து கதையை வளர்ப்பார்கள். அதன்பிறகு சினோரியோ என்று காட்சிகளை எழுதுவார்கள். அப்புறம் வசனம் எழுதுவார்கள். அப்புறம் அவை டைரக்டர் வசம் போகும்.

பின்னர் தமிழ் சினிமாவில் ஸ்ரீதர் போன்று ரைட்டர்களே இயக்குனராக வந்தபோது, கதை வசனம் டைரக்ஷன் மூன்றும் டைரக்டர் பெயரில் வந்தது.

ஆனால், அதைக் கூட ஒரே சமயத்தில் போட்டுக்கொள்ள மாட்டார்கள். கதை, வசனம் என்பதை டைட்டிலில் நடுவே தனியாகப் போட்டுக் கொண்டு டைரக்ஷன் என்பதை கடைசியாக பிரித்து தனியாகப் போடுவார்கள்.

பாரதிராஜா இயக்குநர் ஆனபோது கதையை ஒருவரிடம் வாங்கி, வசனத்தை ஒருவரை எழுத வைத்து, தன் பங்களிப்பை திரைக்கதை – இயக்கம் என்ற பெயரில் போட ஆரம்பித்தார்.

(மேலே சொன்ன சினோரியோவின் வளர்ச்சிதான் திரைக்கதை. சினாரியோ & டைரக்ஷன் என்று சிலர் போட்டுக் கொண்டதும் உண்டு)

பாரதிராஜாவிடம் இருந்து பாக்கியராஜ் எழுத்தாளராகவும் இயக்குநராகவும் வந்தபோது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று போட ஆரம்பித்தார். அதை பலரும் தொடர்ந்தனர். (இன்று வரை இதுதான் அதிகம்)

பாலுமகேந்திரா இதோடு ஒளிப்பதிவு எடிட்டிங் இரண்டையும் சேர்த்து செய்து, கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் என்று போட ஆரம்பித்தார்.

அடுத்து வந்த டி.ராஜேந்தர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு, டைரக்ஷன் என்று விஸ்வரூபம் எடுத்தார்.

அதன் பின்னர் சிலர் இன்னும் பல வேலைகளை செய்ததாக டைட்டிலில் போட்டுக் கொண்ட சில படங்கள் எண்ணிக்கையில் இன்னொன்றாக மட்டுமே வந்தன.

ஆனால் இந்த ONE படத்தின் சங்ககிரி ராஜ்குமார் என்ன பண்ணி வைத்திருக்கிறார் தெரியுமா?

ஒரு சாதாரண சின்ன படம் என்றாலே அந்தப் படத்தில் ஆரம்பம் முதல் முதல் பிரதி ரெடியாகும் வரை முதன்மை படைப்பாளிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை சுமார் முன்னூறு பேராவது பங்களிப்பு செய்வார்கள்.

பெரிய படங்கள் என்றால் பல ஆயிரம் பேர் வேலை செய்வார்கள். பிரம்மாணட படங்கள் எல்லாம் இன்னும் அதிகமாக வேலை செய்வார்கள்

அப்படி இருக்க, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், தயாரிப்பு, டைரக்ஷன், கலை இயக்கம், நடன இயக்கம், சண்டை இயக்கம், மேக்கப், உடைகள், கிராபிக்ஸ் இவை மட்டுமல்ல, டிராலி தள்ளுவது முதற்கொண்டு அத்தனை வேலைகளையும் ஒருவரே செய்து ஒரு படம் எடுத்து இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

இதோடு போச்சா?

படத்தின் ஹீரோ, நண்பர்கள், அம்மா, போலீஸ், சிறு சிறு கதாபாத்திரங்கள், ஒரு காட்சியில் வருபவர்கள், ஒரு ஷாட்டில் வருபவர்கள், சினிமா தியேட்டரில் இருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் என்று எல்லா கேரக்டரைகளையும் ஒருவரே அதாவது மேற்படி சங்ககிரி ராஜ்குமாரே செய்து இருக்கிறார்.

நம்ப முடிகிறதா?

ஆம். படத்தில் கேமராவுக்கு பின்னணியில் எல்லா வேலைகளையும் செய்தது மட்டுமின்றி படத்தில் வரும் எல்லா மனிதர்களாகவும் கேரக்டர்களாகவும் ராஜ்குமாரே நடித்திருக்கிறார்.

(போனால் போகிறதென்று படத்தில் வரும் அணில், பாம்பு, புழுவாக மட்டும் நடிக்காமல் விட்டிருக்கிறார்)

உலகில் இதுவரை யாருமே செய்யாத சாதனையாக, இப்படி முதன் முதலாக சங்ககிரி ராஜ்குமார் இயக்கி இருக்கும் படம்தான் ஒன் (மேன்).

(அடுத்து படத்தின் கதை பற்றிப் படிக்கும்போது அதில் வரும் எல்லா கேரக்டர்களிலும் அவரே நடித்திருக்கிறார் அல்லது வருகிறார் அல்லது தோன்றுகிறார் என்பதை உணர்ந்து படித்தால் உங்களால் இன்னும் நன்றாக உணர முடியும்)

ராஜா, பூமா, ஜாக்கி, ரூபி உள்ளிட்ட நண்பர்கள் ஒரு விஞ்ஞான மாநாட்டுக்காக போகிறார்கள்.

அதில் ராஜா பாச உணர்வே இல்லாதவன். உடல்நிலை சரியில்லாத தன் அம்மாவைக் கூட மதிக்காமல் எரிந்து எரிந்து விழுவான்.

போகும் வழியில் ஒரு காட்டுப் பகுதியில் வாகனம் பழுதாகிறது. சரி செய்ய சில மணி நேரம் ஆகும் என்ற நிலையில் காட்டுக்குள் போகிறார்கள். அங்கே ஒரு பழைய விஞ்ஞான ஆய்வகம் இருக்கிறது.

அதில் ஒரு வீடியோ கிடைக்கிறது. அதில் பேசும் ஒருவர் (எல்லாமே சங்ககிரி ராஜ்குமார் தான்) தனது ஒரு வித்தியாசமான கண்டுபிடிப்பு பற்றிச் சொல்கிறார்.

அங்கே இருக்கும் ஒரு சிவப்பு நிற திரவத்தை ஊசி மூலம் ஏற்றிக் கொண்டு, ஒரு சிவப்பு நிற வாயுவை விடுவித்தால் அந்த வாயு சில நொடிகளில் உலகம் முழுவதும் பரவி எல்லா மனிதர்களும் மறைந்து விடுவார்கள்.

சிவப்பு நிற திரவ ஊசியை போட்டுக் கொண்டவர்கள் மட்டும் உலகத்தில் இருப்பார்கள்.

மறைந்த உலக மக்கள் எல்லாம் மீண்டும் உருவாக பத்துநாள் ஆகும். அந்த பத்து நாளில் உலகமே சிவப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் வசமாகும். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

சிவப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் பத்தாம் நாள் முடிவில் அதே ஆய்வகத்தில் உள்ள பச்சை திரவ ஊசியை போட்டுக் கொண்டு பச்சை நிற வாயுவை விடுவிக்காவிட்டால், அவர்கள் உடல் மட்டும் பற்றி எரிந்து விடும் அல்லது உருகி விடும். மற்ற எல்லா மக்களும் மீண்டு(ம்) வந்து விடுவார்கள்.

நான்கு நண்பர்களும் சிவப்பு நிற ஊசி போட்டுக் கொண்டு உலகில் அவர்கள் மட்டுமே இருக்கும் சூழலை உண்டாக்குகிறார்கள். உலகப் பணம், நகைகள் மற்றும் செல்வங்கள் எல்லாம் அவர்களுக்கென்று ஆகிறது.

உலகம் எங்கும் போகிறார்கள். பல்வேறு நாட்டு உணவுகளை உண்டு களிக்கிறார்கள். ஒரு நிலையில் அவர்களைத் தவிர யாருமே உலகத்தில் இல்லாத நிலையில் ஒரு விபத்தில் நண்பன் ஒருவனை பறிகொடுக்கிறார்கள்.

எனினும் மற்ற யாருமே இல்லாத – இரைச்சல், சண்டை சச்சரவு இல்லாத அமைதியான உலகம், பாச உணர்வே இல்லாத ராஜாவுக்கு மிகவும் பிடித்துப் போகிறது.

எனவே பத்துநாள் கழித்து மீண்டும் பச்சை வாயுவை திறக்காமல் விட்டால், ஒட்டுமொத்த மனித இனமும் நிரந்தரமாக இல்லாமலே போய்விடும். நாம் மட்டும் உலகில் நிம்மதியாக ஜாலியாக காய் கனிகளை உண்டு வாழ்வோம் என்கிறான்.

ஆனால், தங்கள் குடும்பம் மற்றும் உறவுகளை இழக்க விரும்பாத மற்ற நண்பர்கள் இருவர் அதை மறுக்கிறார்கள்.

‘நிறைய டாலர்களை மட்டும் எடுத்துக் கொண்டு பச்சை வாயுவைத் திறந்து, உலகத்தை இயங்க வைத்து பச்சை ஊசி போட்டு நம்மையும் காப்பாற்றிக் கொண்டு குடும்பத்தோடு இணைந்து விடலாம்’ என்கிறார்கள் .

கருத்து வேறுபாடு முற்றி அடிதடி சண்டை, துப்பாக்கிச் சூடு எல்லாம் அவர்களுக்குள் நடக்க, அப்புறம் உலகம் என்ன ஆனது என்பதே இந்த ஒன் மேன்.

சங்ககிரி ராஜ்குமார் செய்திருக்கும் தொழில்நுட்பச் சாதனைகளுக்கும் அப்பாற்பட்டு படம் சொல்லும் விஷயங்களும் சிறப்பாக இருக்கிறது.

ஆரம்பத்தில் இயல்பாக துவங்கும் படம் போகப்போக பரபரப்பாக விறுவிறுப்பாக பயணிக்கிறது.

பின்னணி இசை எல்லாம் மிக சிறப்பாக இருக்கிறது. தனிமனிதனாக இவ்வளவு கணினி வரைகலை வேலைகளை செய்வது எல்லாம் இமாலய மனம் மற்றும் உடல் உழைப்பு.

சிகப்பு திரவம், பச்சை திரவம் என்பது கொரோனா போன்ற கிருமிகளை உருவாக்கி உலக மக்களை ‘மறைய’ வைத்து பின்னர் அதற்கு மருந்து கண்டுபிடிப்பதன் மூலம் கோடி கோடிகளை ஈட்டிய மெடிக்கல் மாஃபியாக்களை குறியீடாக, ஒரு வசனத்தின் மூலம் உணர்த்துகிறது.

படத்தின் ஆரம்பக் காட்சிகளை அமைத்த விதம் கிளைமாக்சின் ஒரு பகுதியை யூகிக்கும்படியாக இருக்கிறது.

அப்படி இல்லாமல் நேரடியாக கதைக்குள் இறங்கி திரைக்கதையை வளர்த்து இருந்தால், ஒரு தரப்பு ஆடியன்ஸுக்கு இன்னும் பரபரப்பு கிடைத்து இருக்கும்

பணமும் நகையும் ஒரு நிலைக்கு மேல் உடன் வராது.

பந்த பாசம் பணத்தை விடப் பெரியது.

தான் மட்டும் நன்றாக வாழ வேண்டும் மற்றவர்கள் அழியட்டும் என்று நினைப்பவன் நன்றாக வாழவே முடியாது.

– என்று படம் சொல்லும் செய்திகள் சிறப்பானவை.

தமிழ் ஈழம் ஏர்லைன்ஸ் என்று ஒரு விமானம் என்று காட்டுவதன் மூலம் தனது இன உணர்வையும் வெளிப்படுத்துகிறார் சங்ககிரி ராஜ்குமார்.

இப்படியாக இந்தப் படம் படைப்பு ரீதியாக மலைக்க வைப்பது மட்டும் இல்லாமல் கருத்தியல் ரீதியாகவும் சிறப்பாக இருக்கிறது.

இந்த முயற்சி வெற்றி பெற்றால் என்ன ஆகும்?

எல்லா படங்களிலும் எல்லா கேரக்டரிலும் ஒருவரே நடிப்பது என்பது எல்லா சமயமும் சரி வராது. (நடிகர்களே இல்லாமல் கற்பனையான வெவ்வேறு உருவங்கள் மூலமே படம் எடுக்க முடியும் என்பது வேறு)

ஆனால் நடிப்புக்கு அப்பாற்பட்ட சினிமா உருவாக்கத்தில், ‘பல விஷயங்களுக்கு மற்றவர்களை மற்ற பல தொழில் நுட்பக்கலைஞர்களை நம்பித்தான் ஆக வேண்டும் இல்லாவிட்டால் சினிமா எடுக்கவே முடியாது’ என்ற நிலை தலைகீழாக மாறும்.

ஒரு மனிதன் முயன்றால் தான் மட்டுமே ஒரு முழுப்படத்தையும் படைப்பியல் ரீதியாக உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

இது சினிமா தயாரிப்பில் ஒரு மிகப்பெரிய மாற்றத்துக்கு கூட வழி வகுக்கும்.

எப்படிப் பார்த்தாலும் இது சினிமா ஆக்கத்தில் புதிய மாற்றங்களுக்கு வழி வகுக்கும் படம்.

மொத்தத்தில் ONE .. The ONE and ONLY

– சு. செந்தில்குமரன்

Comments (0)
Add Comment