தேசிய விருது வென்ற இயக்குநரான கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகும் ‘எம்.எஸ்: எ லெகசி ஆன் ஸ்கிரீன்’ திரைப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நேஷனல் கிரஷ் நடிகை ரஷ்மிகா மந்தானா நடிக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இசை அரங்கமாக திகழ்ந்த சென்னை மியூசிக் அகாடமி அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியவை:
“வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படங்களை உருவாக்கும்போது அதில் ஏராளமான சவால்கள் இருக்கும். ஏனெனில் ஒருவரது வாழ்க்கை மிகப்பெரிய வெற்றி பெற்ற வாழ்க்கையாக இருக்கும்.
நான் குழந்தையாக இருக்கும்போது எங்கள் அம்மா, குமுதம் பத்திரிக்கைக்காக எம்.எஸ் அம்மாவை நேர்காணல் செய்தார். அப்போது அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு அவர்களைப் பற்றி தெரியாது.
அவர்களைப் பற்றி நாம் எல்லோருக்கும் தெரிந்ததுபோல் ‘குறை ஒன்றும் இல்லை’ என்ற பாட்டை அவர்கள் பாடினார்கள் என்ற சில விவரங்கள் மட்டும்தான் எனக்கும் தெரியும்.
அதன்பிறகு என்னுடைய நண்பர் ராஜீவ் மேனன் சில பாடல்களை உருவாக்கலாம் என விவாதித்தபோது, நான் – பாம்பே ஜெயஸ்ரீ – கார்த்திக் ஆகியோர் இணைந்து ஒரு சில பாடல்களை உருவாக்கினோம்.
அது மறக்க இயலாத அனுபவம். அப்போதுதான் எம்.எஸ் அம்மாவின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள தொடங்கினேன்.
இயக்குநர் கௌதம் ஒரு திரைக்கதையை எழுதி அதை எனக்கு வாசிக்கக் கொடுத்தார். அதை வாசிக்கும் பொழுது தான் எவ்வளவு அழகான வாழ்க்கையை எம்.எஸ். அம்மா வாழ்ந்திருக்கிறார் என்பது புரிந்தது.
அழகான வாழ்க்கை மட்டுமல்ல… எவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையே… அதனை மீறி அவர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
ஒவ்வொரு முறையும் தடைகளை உடைத்து அதனை கடந்திருக்கிறார்கள். அதனால் இந்த வாழ்க்கையை சொல்ல வேண்டும் என தோன்றியது.
நடிகர் சிவகுமார் :
”எம்.எஸ் அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி சிறுவயதில் படித்திருக்கிறேன். அவர்களுடைய வீட்டில் பாட்டு கேட்பதற்கு ரேடியோ கூட இருக்காதாம்.
அருகிலுள்ள பூங்காவிற்கு சென்று தான் கேட்பார்களாம். அப்படி இருந்த பெண்… இதுபோன்ற சபாக்களில் பாடுவதற்கு எப்படியெல்லாம் சதாசிவம் உதவி செய்தார் என்பதையும் படித்திருக்கிறேன்.
அந்த மகத்தான அம்மாவைப் பற்றிய சுயசரிதை திரைப்படத்தை உருவாக்குகிறார்கள். ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் :
“எம்.எஸ் அவர்கள் வாழ்க்கையில் பின்பற்றிய கொள்கை – ஒழுக்கம் – நேர்மை – அர்ப்பணிப்பு – அதுவும் அவருடைய பத்தாவது வயதிலிருந்து இருபது வயது வரையிலான வாழ்க்கையில்,
அதுவும் அவருடைய கடினமான தருணங்களில் தன்னுடைய தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த வாழ்க்கை.. இசை மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும், பற்றும்.. என பல விசயங்கள் இதில் உள்ளது.
இளம் வயதில் அவர் எவ்வளவு சங்கடங்களையும் கடினமான தருணங்களையும் எதிர்கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.
இப்படத்தின் இயக்குநர் கௌதம் கடந்த ஓராண்டாக பல இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, பலரை சந்தித்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி இருக்கிறார். இயக்குநர் கௌதம் தான் இயக்கிய முதல் திரைப்படத்திற்காக தேசிய விருதினை வென்றவர்.
ஒவ்வொரு நாளும் நாம் ஏராளமான இசைகளை கேட்கிறோம். ஆனால் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் எம்.எஸ் அம்மாவின் குரலில் ஒலிக்கும் சுப்ரபாதத்தைக் கேட்கிறோம்.
தற்போது சமூக ஊடகங்கள் மூலமாக ஏராளமான இசைகளை… இசை வடிவங்களை… நாம் கேட்கிறோம். இதில் நாம் எதனை ரீ கிரியேட் செய்கிறோம்.
ஆனால், நாங்கள் எம்.எஸ் அம்மாவின் இசையை ரீ கிரியேட் செய்யவில்லை. செய்யவும் முடியாது.
இந்த அரங்கத்தில் நம்முடைய கண்களுக்குப் புலப்படாமல் அமர்ந்து ரசிக்கும் எம்.எஸ் அம்மாவின் ஆசி நம் அனைவருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.