நடிகர் தனுஷ் தற்போது இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு நடிகர் தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநரானார். இந்தப் படத்தில் ராஜ்கிரன், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதையடுத்து இயக்குநராக மீண்டும் கலமிறங்கினார் தனுஷ். இதில் இவரே நடித்து, இயக்கி வெளிவந்த படம் ‘ராயன்’. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலிலும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 3-வதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படத்துக்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இதில், தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்தை தனுஷின், வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. காதல் மற்றும் நகைச்சுவை கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் முதல் சிங்கிள் வரும் வெள்ளிகிழமை ஆகஸ்ட் 30-ம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது படக்குழு.
இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் 4-ஆவதாக ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதனை நித்யா மேனன் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில், ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்குப் பிறகு தனுஷுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். அவரே அதை இயக்குகிறார். அதுவும் சிறந்த படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.