நயன்தாரா கொடுத்த ‘சர்ப்பிரைஸ்’!

‘அல்டிமேட் ஸ்டார் ‘அஜித்துக்கும், ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாராவுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை திரை உலகம் அறிந்தது. பட விழாக்களில் இருவரும் கலந்து கொள்வதில்லை. தங்கள் பட புரமோஷனில் கூட, அவர்கள் பங்கேற்பதில்லை.

இந்த நிலையில் தனக்கு சம்மந்தம் இல்லாத சினிமா நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொண்டு ஆச்சர்யம் அளித்துள்ளார்.

என்ன நிகழ்ச்சி?

மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘நேசிப்பாயா’. விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.

ஆகாஷ் முரளியின் மாமனாரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இவர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் அமைத்துள்ள ‘நேசிப்பாயா’ படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. நயன்தாரா விழாவில் கலந்து கொண்டு முதல் தோற்றத்தை வெளியிட்டார்.

கருப்பு நிற உடையில் புதுப்பொலிவுடன் அவர் காணப்பட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போல் ரொம்பவும் ‘கியூட்’ ஆக இந்த உடையில் காட்சி அளித்தார்.

விழாவில் பேசிய நயன்தாரா, ‘இந்தப் படம் மூலம் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள் – எனக்கு அதிதி ஷங்கரை ரொம்ப பிடிக்கும் – திறமையானவர் – நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போகமாட்டேன் – ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல் – இயக்குநர் விஷ்ணுவர்தன், அவர் மனைவி அனுவுடைய படம் இது – பதினைந்து வருடமாக இருவரும் நல்ல பழக்கம் – என் குடும்பம் போலத்தான் இவர்கள்- அதனால்தான் இங்கு வந்தேன்’ என்று குறிப்பிட்டார்.

“இந்தப் படம் ஒரு அட்வென்சர் காதல் கதை. ஆக்ஷனும் உள்ளது. ஆகாஷுக்கு இது முதல் படம் போல இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். அதிதி பயங்கர எனர்ஜியாக உள்ளார். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்” என்று படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார், இயக்குநர் விஷ்ணு வர்தன்.

தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஆர்.பி.சவுத்ரி, ஐசரி கணேஷ், நடிகர் அதர்வா மற்றும் இவரது குடும்பம் நடிகர் ஆர்யா உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டார்கள்.

-பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment