சாதீய ஒடுக்குமுறைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பரியேறும் பெருமாள்கள் மீம்ஸ்களில் வறுத்தெடுக்கப்படும் காலம் இது.
21ஆம் நூற்றாண்டிலேயே நிலைமை இப்படியிருக்க, சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் நந்தனார் கதையைத் திரைப்படமாக எடுப்பதென்பது குதிரைக்கொம்புதான்.
ஆனால், அதனை வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டினார் எஸ்.எஸ்.வாசன். சதிலீலாவதி படத்தில் கதாசிரியராக, தியாகபூமி படத்தில் விநியோகஸ்தராகப் பரிமளித்தவர், 1941ஆம் ஆண்டு ஜெமினி ஸ்டூடியோவுக்கான அடித்தளத்தை அமைத்தார்.
ஒரு படப்பிடிப்பின்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிச் சின்னா பின்னமானது மோஷன் பிக்சர்ஸ் புரடியூசர்ஸ் கம்பைனுக்கு சொந்தமான ஸ்டூடியோ.
அதன் பங்குதாரர்கள் மேற்கொண்டு நிர்வகிக்கத் தயங்கினர். இதனால், அதனை விற்பதென்று முடிவானது. அதன் தொடர்ச்சியாக, இயக்குநர் கே.சுப்பிரமணியத்திடம் இருந்து அந்த இடத்தை வாங்கினார் வாசன்.
வெற்றிகள் தந்த ஜெமினி!
சென்னை அண்ணாசாலையில் ஜெமினி ஸ்டூடியோ நிர்மாணிக்கப்பட்டது. மதனகாமராஜன் என்ற படம் ஜெமினியின் தயாரிப்பாக வெளியாகி பெருவெற்றி பெற்றது. இதற்கடுத்து தெலுங்கில் பாலநாகம்மா எனும் படத்தைத் தயாரித்தார் வாசன்.
இரண்டு பெருவெற்றிகளின் தொடர்ச்சியாக, அவர் தயாரித்த படம்தான் ‘நந்தனார்’.
திருநாளைப் போவார் எனும் நந்தனாரின் கதையை வெளிப்படுத்தும் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரம் கதாகாலாட்சேபம் செய்யப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1923, 1930 ஆகிய ஆண்டுகளில் மவுனப்படங்களாக இக்கதை உருமாறியது.
1935-ல் கே.பி.சுந்தராம்பாள் நந்தனாராகவும், மகாராஜபுரம் சந்தானம் வேதியராகவும் நடிக்க ‘பக்தநந்தனார்’ வெளியானது. மாணிக்லால் டாண்டன் இயக்கிய இந்தப் படம் படுதோல்வி அடைந்தது.
இப்படத்துக்காக சுந்தராம்பாளுக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்பட்டதாகத் தகவல் உண்டு.
இதனாலேயே நந்தனார் கதையை வாசன் திரைப்படமாக்கத் துணிந்தபோது, அது வெற்றி பெறுமென்று சினிமாவுலகில் எவரும் நம்பவில்லை. ஆனாலும் தன் முடிவில் அவர் உறுதியாக இருந்தார்.
செருகளத்தூர் சாமாவை வேதியராகவும், எம்.எம்.தண்டபாணி தேசிகரை நந்தனாராகவும் கொண்டு படம் தயாரிக்கப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதன் தொடர்ச்சியாக அபூர்வ சகோதரர்கள், மங்கம்மா சபதம், சந்திரலேகா, வஞ்சிக்கோட்டை வாலிபன் உட்படப் பல வெற்றிப் படங்கள் ஜெமினி ஸ்டூடியோவினால் தயாரிக்கப்பட்டது வரலாறு.
தீண்டாமையைத் துரத்திய பக்தி!
ஆன்மிகத்தில் எந்த வேறுபாடுகளுக்கும் இடம் கிடையாது. சிவபக்தி முக்தி தரும் என்று அன்றைய சமூகத்தில் புழக்கத்தில் இருந்த விஷயங்களையே நந்தனார் திரைப்படம் பேசியது.
அதே நேரத்தில் சாதிக் கட்டுமானங்களால் எதையும் சாதிக்க முடியாது என்றும் வெளிப்படுத்தியது.
சிதம்பரம் நடராஜர் சிலை டைட்டிலில் காண்பிக்கப்பட, அதன்பின் டாப் ஆங்கிளில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விடம் காட்டப்படுவதில் இருந்து நந்தனார் திரைக்கதை தொடங்குகிறது.
மனிதர்களுக்குச் சமமாக இருக்கும் ஆடு, மாடுகள், கணவனுக்கு பேன் பார்க்கும் மனைவி, கோழிகளுக்கு இரை போடும் பெண்மணி, குழந்தைகளுக்கு உணவூட்டும் தாய், சேர்ந்து பணியாற்றும் தம்பதி, இவற்றுக்கு நடுவே ஆடுகளை மோதவிட்டு கேளிக்கையாற்றும் கூட்டம் ஆகியவற்றுடன் சிவனிடம் பிறவா வரம் தாரும் என்று கேட்டவாறே நிகழ்கிறது நந்தனின் அறிமுகம்.
எல்லோருக்கும் தெரிந்த கதை!
சிவபக்தியில் ஊறிய நந்தன், சேரி வாழ் மக்களின் நாட்டாமையாக இருக்கிறார். ஆனாலும் தான் பணியாற்றும் வேதியரின் வயலில் கடுமையாக உழைப்பைச் செலுத்துகிறார்.
நந்தனுக்கு வேதியரிடம் இருக்கும் செல்வாக்கைக் கண்டு கணக்காளர் ஜம்பு பொறாமையுடன் திரிகிறார். இந்தச் சூழலில் கருப்பனைக் கும்பிட்டால்தான் ஊர் நன்மை பெறும் என்று பூசாரி சொல்வதை ஏற்க மறுக்கிறார் நந்தன்.
சிவனைக் கடவுளாக ஏற்று ஆடு, மாடுகளைக் கொல்லாமல் இருக்க வேண்டுமென்று போதிக்கிறார். ஒருகட்டத்தில் நந்தனின் பக்தி தங்களது மரபுகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதுகின்றனர் அவ்வூர் மக்கள்.
வேதியரிடம் தங்கள் தரப்பு நியாயத்தை அவர்கள் சொல்ல, நந்தனின் நாட்டமைப் பொறுப்பு பறிக்கப்படுகிறது.
பக்தியை நெஞ்சில் சுமக்கும் நந்தன், எஜமான விசுவாசத்துடன் வயலில் கடுமையாக உழைக்கிறார். உடனடியாக சிதம்பரம் நடராஜரைத் தரிசிக்க வேண்டுமென்று உறுதியுடன் இருக்கிறார்.
இதனை ஏற்காத வேதியர், ஒருநாள் நந்தனிடம் கடுமையான வேலைப்பளுவை ஒப்படைக்கிறார்.
நாற்பது வேலி நிலத்தைப் பயிராக்கும் பொறுப்பைச் செய்து முடித்தால் உடனடியாக சிதம்பரம் செல்ல அனுமதியளிப்பதாகக் கூறுகிறார்.
அதற்கடுத்தநாள் வேதியரும் அவ்வூர் மக்களும் ஆச்சர்யப்படும் படியாக வயல் முழுவதும் நெற்கதிர்கள் தலைசாய்ந்து கிடக்கின்றன. நந்தனின் பக்தியை அறிந்த வேதியர், அவர் சிதம்பரம் செல்ல இசைகிறார்.
சிதம்பரத்தில் சிவனுடன் நந்தன் ஜோதியாக ஐக்கியமாவதாகத் திரைப்படம் முடிவடைகிறது.
கோயில் திருவிழாக்களிலும் நாடக மேடைகளிலும் கண்ட கதையைத் திரைப்படமாக எடுப்பதென்பது மிகக் கடினமான விஷயம். பார்த்தவர்கள் மீண்டும் பார்க்கும்படி ஏதேனும் புதுமை இருக்க வேண்டும்.
இதனைக் கருத்தில் கொண்டு எம்.எம்.தண்டபாணி தேசிகரின் முழுத்திறமையும் படத்தில் பயன்படுத்தப்பட வேண்டுமென்று உறுதியாக இருந்தார் வாசன்.
இதனால், இப்படத்தில் இடம்பெற்ற 31 பாடல்களில் 22 பாடல்கள் இவரால் பாடப்பட்டன.
பக்தியும் பாடல்களும்!
பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் பாடல்கள் எழுதினர். எம்.எம்.தண்டபாணி தேசிகர் சிறப்பாகப் பாட, அவருக்கு உறுதுணையாகப் பாபநாசம் சிவன் இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
இப்படத்தின் இயக்குனர் முருகதாஸா என்ற முத்துசாமிக்கும் பாபநாசம் சிவனுக்கும் இடையே ஒரு போட்டி ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
‘தேசிகரை நன்றாக நடிக்க வைக்க என்னால் முடியும்; சிறப்பாகப் பாட வைக்க உம்மால் முடியுமா’ என்று சிவனிடம் அவர் கேட்க, அதன் பலனாக ‘என்னப்பன் அல்லவா’, ‘தில்லையம்பலத் தலமொன்று இருக்குதாம்’, ‘பிறவா வரம் தாரும்’ என்பன உள்ளிட்ட ஹிட்டான பாடல்களை தேசிகர் பாடியதாகக் கூறப்படுகிறது.
பாபநாசம் எழுதிய தில்லையம்பலத் தலமொன்று பாடலில் தண்டபாணி தேசிகர் கேள்வி கேட்டு பாடுவதாகவும், அதற்கான பதில்களை செருகளத்தூர் சாமா பேச்சு வழக்கில் சொல்வதாகவும் இடம்பெற்றிருப்பது சிறப்பு.
பட்டினத்தார், தாயுமானவர், மாணிக்கவாசகர், திருமழிசை ஆழ்வார் போன்ற படங்களில் நாயகனாக நடித்தார் தண்டபாணி தேசிகர். எல்லாமே பக்திப் படங்கள் என்பதைக் கவனித்தாக வேண்டும்.
போலீஸ், நீதிபதி, குடிகாரர் வேடங்களைக் குறிப்பிட்ட நடிகர்களுக்கு மட்டுமே தந்த தமிழ்ப் படைப்பாளிகள் தேசிகரிடம் இருந்தே அதனைத் தொடங்கியிருக்க வேண்டும்.
நடிப்பு மட்டுமல்லாலம்ல், பின்னாட்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறையில் பேராசிரியராகவும் பணியாற்றினார் தண்டபாணி தேசிகர். கர்நாடக இசையில் கவனத்தைச் செலுத்தி திரைத்துறையில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
ஜெமினி ஆர்கெஸ்ட்ரா!
நந்தனார் படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர்கள் எம்.டி.பார்த்தசாரதி, ராஜேஷ்வர் ராவ் ஆகியோர். பின்னணி இசையமைப்பு ஜெமினி ஆர்ச்செஸ்ட்ரா என்றே டைட்டிலில் குறிப்பிடப்பட்டது.
1935-களில் சினிமாவில் வலம் வந்த பார்த்தசாரதி, தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்காமல் திருச்சி வானொலி நிலையத்தில் ஊழியராகச் சேர்ந்திருந்தார்.
அப்போது, அவருக்கு மிகப்பெரிய சம்பளம் தருவதாகச் சொல்லி ஜெமினி ஸ்டூடியோவின் இசையமைப்பாளராகப் பணியமர்த்தினார் வாசன்.
பார்த்தசாரதி, ராஜேஸ்வர் காம்பினேஷனில் ஜெமினி ஸ்டூடியோவின் ‘மதனகாமராஜன்’ திரைப்படம் வெளியானது. திண்டுக்கல் அமிர்தம் ஸ்டூடியோஸுக்காக ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த படம் என்றே அதன் டைட்டிலில் குறிப்பிடப்பட்டது.
இதனால் ஜெமினி தயாரிப்பில் தமிழில் முதன்முதலாக வெளியாகும் நந்தனார் படத்தின் இசையமைப்பாளர்கள் என்ற பெயரை பார்த்தசாரதியும் ராஜேஸ்வரும் பெற்றனர். இப்படத்துக்குப் பின்னர் சில படங்களில் இசை ஜெமினி ஆர்க்கெஸ்ட்ரா என்றே குறிப்பிடப்பட்டது.
இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் ஹிட். ஆனால், படம் வெளியாகி ஒரு மாதத்துக்குப் பின்னரே கிராமபோன் ரிக்கார்டு விற்பனைக்கு வந்தது. இதற்குக் காரணம் எஸ்.எஸ்.வாசன்.
வாசன் அறிவித்த பரிசுப்போட்டி!
அக்காலத்தில் திரைப்படம் வெளியாகும்போதே கிராமபோன் ரிக்கார்ட்ஸ் வெளியிடும் பழக்கம் இருந்தது. படத்தின் வெற்றிக்குப் பாடல்களும் பெரிதாகக் கைகொடுத்தன.
சாதித் துவேஷத்தில் நந்தனார் பாடல்களைக் கேட்டுவிட்டு, படத்தை மேட்டுக்குடி மக்கள் புறக்கணித்துவிடக் கூடாதென்று நினைத்தார் வாசன்.
நந்தனார் படத்தில் இடம்பெற்ற முத்தான மூன்று பாடல்களைத் தேர்ந்தெடுத்து எழுதி, அத்துடன் தியேட்டர் டிக்கெட்டையும் இணைத்துக் கொடுத்தால் 10,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார் வாசன்.
போட்டியில் கலந்துகொள்ளக் கண்டிப்பாக தியேட்டருக்கு போக வேண்டுமென்பதால் கூட்டம் பெருகியது.
இதற்கு முன் தயாரிக்கப்பட்ட நந்தனார் கதை தோல்வியடைந்த நிலையில், இப்படத்தை வெற்றி பெற வாசன் கையாண்ட இந்த உத்தி கைமேல் பலன் தந்தது.
படம் வெளியாகி 100 நாட்களுக்குப் பிறகு இசைத்தட்டுகள் வெளியாகின. போட்டியின் முடிவில் 20 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, ஜெமினியின் சார்பில் அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சுப்பு – சுந்தரிபாய் ஜோடி!
இப்படத்தில் பாடலாசிரியர்களில் ஒருவராகவும் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய கொத்தமங்கலம் சுப்பு மிஸ்.மாலினி உள்ளிட்ட சில படங்களில் தலைகாட்டினார்.
பின்னாட்களில் தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட சில படங்களுக்குத் திரைக்கதை எழுதியதோடு, அவ்வையார் உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்தார்.
கொத்தமங்கலம் சுப்புவின் மனைவி சுந்தரிபாய், நந்தனார் படத்தில் கருப்பியாக நடித்திருந்தார்.
அந்த நேரத்தில் ஜெமினி ஸ்டூடியோவில் நடிகையாக மாதச் சம்பளத்தில் இவர் இருக்க, கிரியேட்டிவ் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் சுப்பு.
இருவரிடையே காதல் மலர, அது கல்யாணத்தில் முடிந்தது. எங்க வீட்டுப்பிள்ளை, படிக்காத மேதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் அம்மா, அத்தை வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றார் சுந்தரி பாய்.
கண்கவர் காட்சிகள்!
நந்தன் சிதம்பரம் செல்வதற்காக சிவனே வயலை விளைவித்தார் என்பதை அறிந்ததும் பதறியோடுகிறார் வேதியர். அந்தக் காட்சி டட்ச் ஆங்கிள் எனும் சாய்மானக் கோணத்தில் காட்டப்படுவது ஆச்சரியம்.
இதனைத் தொடர்ந்து வரும் ‘என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா’ என்ற பாடலின்போதும், நந்தனைத் தேடி வரும் மக்கள் இந்த சாய்கோணத்திலேயே காட்டப்படுகின்றனர்.
நந்தனார் திரைப்படத்துக்கு முன்னதாக ‘வேணுகானம்’, ‘பக்தி’, ‘பாதுகா பட்டாபிஷேகம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் முருகதாஸா.
இப்படத்தின் ஒளிப்பதிவை சைலன் போஸ் மற்றும் பி.எஸ்.ரங்கா ஆகியோர் கையாண்டனர். படப்பிடிப்பு என்ற தலைப்பிலேயே டைட்டில் காட்சியில் இவர்களது பெயர்கள் இடம்பெற்றன.
ஜாம்பவான்களின் தொடக்கம்!
படத்தின் இறுதியில் சிவ தாண்டவம் என்றவுடன் புயல் போன்ற ஆட்டத்தை எதிர்பார்க்க, தென்றல் போல வந்தாடுகிறார் ரஞ்சன். பின்னாளில் இவர்தான் சந்திரலேகா போன்ற படங்களில் கொடூர வில்லனாக நடித்தார் என்பதை நம்பவே முடியவில்லை.
டைட்டிலில் இவரது பெயர் பி.ஏ., எம்.லிட். என்ற பட்டத்துடன் இடம்பிடித்தது.
நந்தனார் படத்தொகுப்பைக் கையாண்டவர்கள் ஸி.பஞ்சு, என்.ஆர்.கிருஷ்ணசுவாமி. இவர்களே பின்னாளில் கிருஷ்ணன் – பஞ்சு என்ற பெயரில் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கினர்.
நாயகி கிடையாது!
கதாநாயகிகளை போஸ்டரில் இடம்பெறச் செய்து மக்களை தியேட்டருக்கு வரவழைத்த காலம் அது. அப்போது, நாயகி என்று எவரும் இல்லாமல் நந்தனார் தயாரிக்கப்பட்டது அதிசயம்தான்.
ஞானம்பாள், சுந்தரிபாய் ஆகியோர் சில காட்சிகளில் வந்துபோனாலும், அந்த பாத்திரங்களால் திரைக்கதையில் பெரிதாகத் தாக்கம் இல்லை.
அதேபோல இப்படத்தில் சண்டைக் காட்சிகளும் கிடையாது என்பதும் ஆச்சர்யம்தான்.
புறக்கணிக்கப்பட்ட நாட்டார் மரபு!
இப்படத்தில் சாதிப் பெயர்கள் வசனங்களில் அடிக்கடி வந்துபோவது பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது.
ஆனால், திரைக்கதை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் பக்தியையே உயர்த்திக் காட்டுவதாகச் சொல்லப்பட்டது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து நாயன்மார்களில் ஒருவராக மாறிய நந்தனைப் பற்றிய கதையாக இருந்தாலும், நாட்டார் தெய்வங்களையும் அவற்றை வணங்கும் மரபுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் சில காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பதையும் கவனிக்காமல் விட முடியாது.
சிவபக்தியில் சாதிபேதமில்லை என்று சொன்னாலும், தொன்றுதொட்டுப் பழகிவரும் குறிப்பிட்ட சமூகத்தினரின் வழக்கங்களைக் கீழ்மையாகக் கருதியதைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
புராண இதிகாசங்கள், ராஜா-ராணிக் கதைகள், நாட்டுப்பற்று மற்றும் சமூக நல்லிணக்கத்தைச் சொன்ன புனைவுகள் என்றே 1940-களில் திரைப்படங்களின் கதைகள் ஆக்கப்பட்டன.
அந்த வகையில், புராணத்தை முன்னிறுத்தி சமூகச் சீர்திருத்தத்தை வலியுறுத்திய திரைப்படமாக ‘நந்தனார்’ கருதப்படுகிறது.
படத்தின் பெயர்: நந்தனார், தயாரிப்பு: ஜெமினி ஸ்டூடியோ, இயக்கம்: முருகதாஸா, கதை, வசனம்: கி.ரா., பாடல்கள்: பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு, படப்பிடிப்பு: சைலன் போஸ், பி.எஸ்.ரங்கா
காட்சி ஜோடனைகள்: கே.ஆர்.சர்மா, கூட்வான்கர், ஏ.பி.செல்லையா, ஒலிப்பதிவு: பி.கே.விஸ்வநாத், கே.ஆர்.ராமஸ்வாமி, சங்கீத டைரக்ஷன்: எம்.டி.பார்த்தசாரதி, ராஜேஸ்வர ராவ், எடிடிங்: ஸி.பஞ்சு, என்.ஆர்.கிருஷ்ணசுவாமி, லெபரட்டரி: வி.ராமஸ்வாமி, எம்.சேஷகிரிராவ்
நடிப்பு: தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா, நாராயணராவ், எம்.ஆர்.சுவாமிநாதன், வேலாயுதம், ஞானாம்பாள், சுந்தரிபாய், ஜெயலட்சுமி மற்றும் பலர்.
– உதய் பாடகலிங்கம்