ஏ.ஆர்.ரஹ்மானைத் துரத்தும் பணப் பிரச்சனைகள்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமா உலகில் நுழைந்து 30 ஆண்டுகளை பிரச்சினைகள் இன்றி கடந்து விட்டார். எந்தவித வம்பு தும்புக்கும் போகாமல் ‘தானுண்டு, தாளம் உண்டு’ என அமைதியான வாழ்க்கை நடத்தியவரை இப்போது சிக்கல்கள் துரத்தி வருகின்றன.

அண்மையில் சென்னை கிழக்கு கடற்கரையில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அனுமதி பெறப்பட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கையைவிட அதிக அளவில் டிக்கெட் விற்பனை செய்துள்ளனர்.

ஒரே நேரத்தில் பல்லாயிரம் பேர் நிகழ்ச்சிக்கு வந்ததால் அந்த இடம் போர்க்களமானது. டிக்கெட் இல்லாதவர்களும் உள்ளே நுழைந்து, ரிசர்வ் செய்யப்பட்ட இருக்கைகளை ஆக்கிரமித்தனர்.

கூட்டத்தை போலீசார் விரட்டி விரட்டி அடித்தனர். உள்ளே புகுந்த ஒரு கும்பல் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடுமையும் அரங்கேறியது.

பல மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நெரிசலில் முதலமைச்சர் ஸ்டாலினும் மாட்டிக்கொண்டார்.

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட இந்த குளறுபடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக ரஹ்மான் மன்னிப்பு கேட்டும், சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை வறுத்தெடுத்தனர்.

பெரும் போராட்டத்துக்கு பிறகு டிக்கெட் வாங்கி, நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டு விவகாரம் ‘செட்டில்’ செய்யப்பட்டது.

‘அப்பாடா பிரச்சினை ஓய்ந்தது’ என ஆசுவாசப்படுத்திக்கொண்டு, கம்போசிங்கில் உட்கார்ந்தவரை, இன்னொரு சிக்கல், கழுத்தை நெரிக்க ஆரம்பித்துள்ளது.

ரஹ்மான் மீது போலீசில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில், இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரில், “தேசிய அறுவை சிகிச்சை மாநாட்டை 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்தோம். மாநாட்டில்  ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இசை நிகழ்ச்சிக்காக ரஹ்மானுக்கு ரூ.29.50 லட்சம் முன் பணம் வழங்கினோம். ஆனால் மாநாடு நடத்த சரியான இடமும், அரசு அனுமதியும் கிடைக்கவில்லை. இசை நிகழ்ச்சியும் நடக்கவில்லை’ என குறிப்பிட்டுள்ளனர்.

‘இசை நிகழ்ச்சி நடைபெறாத நிலையில் முன்பணமாக கொடுத்த தொகையை திரும்ப தருமாறு ரஹ்மானுக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால் பணத்தை அவர் திருப்பி தரவில்லை.

எனவே. ரஹ்மான், அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த புகாரில் தெரிவித்து இருந்தனர்.

இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஹ்மானிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அவரது செயலாளர் செந்தில் வேலவன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

‘3 கோடி ரூபாய் செலவில் இசை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டு அதற்கு முன்தொகையாக 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை அவர்களே ரத்து செய்தார்கள் என்பதால் ஒப்பந்தத்தின்படி அந்த பணத்தை திருப்பி தர தேவையில்லை. புகாரை சட்டப்படி எதிர்கொள்வோம். புகார் அளித்த அசோசியேஷன் மீது வழக்கு தொடர்வோம்’ என ரஹ்மானின் செயலாளர் செந்தில் வேலவன் தெரிவித்துள்ளார்.

‘அறுவை சிகிச்சை’ நிபுணர்கள் பதில் என்னவோ?

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment