தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு, பாசம் மற்றும் உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு ஆக்ஷன் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘அப்பா குட்டி’ உருவாகியுள்ளது.
குடும்ப உணர்வுகளுடன் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
மு.மாறன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார்.
பேபி லிதன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி இசையமைப்பதுடன் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அப்பா குட்டி’ நவம்பர் 20ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனிடையே ‘அப்பா குட்டி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சசி :
“ப்ரீத்தி அஸ்ராணி இவ்வளவு அழகாகத் தமிழ் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் இவ்வளவு அழகாகத் தமிழைக் கற்றுக்கொண்டு பேசுவது சாதாரண விஷயமல்ல. அவருக்கு பாராட்டுகள்.
ஒரு திரைப்படத்தை உருவாக்கிய பிறகு அதை ஓடிடி நிறுவனங்களுக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கொண்டு செல்வது இயக்குநர்களுக்கு மிகப்பெரிய சவால்.
‘பிச்சைக்காரன்’ படத்தில் ஒரு மகனாக விஜய் ஆண்டனி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதேபோல் ‘அப்பா குட்டி’ படத்தில் ஒரு அப்பாவாக அனைவரது மனதிலும் இடம்பிடிக்கப் போகிறார்.”
நடிகர் விஜய் ஆண்டனி:
“இயக்குநர் மு.மாறன் மிகவும் திறமையானவர். குறுகிய காலத்திலேயே திட்டமிட்டு, வேகமாகவும் சிறப்பாகவும் படத்தை முடித்திருக்கிறார்.
ப்ரீத்தி அஸ்ராணி எந்தக் கோணத்தில் கேமரா வைத்தாலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர்.
தமிழ் தாய்மொழி இல்லையென்றாலும், வசனங்களைப் பேசி நடித்த விதம் பாராட்டுக்குரியது. பேபி லிதன்யாவின் நடிப்பும் வியக்க வைக்கிறது.”
நடிகை ப்ரீத்தி அஸ்ராணி :
“படத்தின் கதையைக் கேட்டபோதே மிகவும் பிடித்துவிட்டது. ஒரு மகளாக அப்பாவின் அன்பையும் தியாகத்தையும் உணரக்கூடிய பல தருணங்கள் படத்தில் இருக்கின்றன.
அம்மாவின் அன்பைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால், அப்பாக்கள் தங்களுடைய அன்பையும் உணர்வுகளையும் அதிகம் வெளிப்படுத்துவதில்லை.
அவர்கள் நமக்காகச் செய்யும் தியாகங்களையும் முயற்சிகளையும் நாம் பல நேரங்களில் கவனிப்பதில்லை.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பலரும் தங்களுடைய அப்பாவுக்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவார்கள் என்று நம்புகிறேன்.
பாடலாசிரியர் ஏகாதசி :
“இயக்குநருடன் முதன்முதலில் ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் பணியாற்றினேன். அந்தப் படத்தில் ஆறு பாடல்கள் எழுதினேன். அப்போது நண்பர் தமிழரசன் மூலம் மீரா கதிரவன் சாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நான் எழுதிய ஒரு பாடல் விஜய் ஆண்டனிக்கும் தனஞ்செயனுக்கும் பிடித்துப்போனதால், அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் அவர்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் அப்பாவைப் பற்றியும், மகளைப் பற்றியும் இரண்டு உணர்வுபூர்வமான பாடல்களை எழுதியிருக்கிறேன்.
குறிப்பாக, ‘திருவிழா தேர்த்திண்ணையில் உறங்கும்… அது உறக்கத்தில்கூட என் பேரை உளறும்’ என்ற வரிகள் பலரையும் நெகிழ வைத்திருக்கின்றன.
இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு பலரும் எனக்குத் தொலைபேசியிலும், குறுஞ்செய்தியிலும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
என்னுடைய பாடல்களில் அம்மாவைப் பற்றிய பாடல் மிகவும் பிரபலமானது. அதேபோல் அப்பாவைப் பற்றிய ஒரு பாடலும் இந்தப் படத்தில் அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி.
பாடலாசிரியர் அருண் பாரதி :
‘என்னை அறிமுகப்படுத்தியவர் விஜய் ஆண்டனி. அதன்பிறகு பல பாடல்களில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படத்திலும் எனக்கு ஓர் அழகான பாடலைக் கொடுத்திருக்கிறார்.
‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் பார்த்து’ பாடலைப் போல, இந்தப் படத்திலும் அப்பா – மகள் உறவைப் பேசும் பாடல்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவை.
இயக்குநர் மு.மாறன் :
“இது என்னுடைய நான்காவது படம். இதற்கு முன்பு நான் இயக்கிய மூன்று படங்களும் கிரைம் த்ரில்லர் ஜானரில் அமைந்திருந்தன.
தொடர்ந்து அதே ஜானரில் ஏன் படங்கள் இயக்குகிறீர்கள் என்று பலரும் கேட்டதால், இந்த முறை வித்தியாசமான கதைக்களத்தில் முயற்சி செய்திருக்கிறேன்.
விஜய் ஆண்டனியைச் சந்தித்து கதையின் முதல் பாதியைச் சொன்னதுமே இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தைத் தொடங்கலாம் என்றார்.
நல்ல கதைகளுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம்.
‘கன்டென்ட்தான் கிங்’ என்று பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கூறிவருகிறீர்கள். அப்படிப்பட்ட நல்ல கதையுடன் நாங்கள் வருகிறோம்”.
இயக்குநர் மந்திரமூர்த்தி :
“விஜய் ஆண்டனி கடின உழைப்பாளி. கொடுத்த வாக்கைக் காப்பாற்றக்கூடிய மனிதர். ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அதைச் சரியாகச் செய்து முடிப்பதில் மிகவும் உறுதியாக இருப்பவர்.
படத்தின் கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணி தமிழ் சினிமாவில் என் அறிமுகத்தில் எனக்குப் பெருமை தரக்கூடிய ஒரு கலைஞர்.
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதைச் சிறப்பாகவும், எதிர்பார்ப்புகளைத் தாண்டியும் நடிக்கக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது.
நடிகர் ஜென்சன் திவாகர் :
“கிரைம் த்ரில்லராகத் தொடங்கும் கதை, தொடர்ந்து உணர்வுபூர்வமான அனுபவமாக மாறி, முதல் பாதி முடியும் வரை விறுவிறுப்பைக் குறைக்கவில்லை.
ஸ்கிரிப்டில் இருந்த உணர்வுகளைத் திரையில் அப்படியே கொண்டுவந்ததற்கு முக்கியக் காரணம் படத்தின் நடிகர் தேர்வு. அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் :
“எங்கள் தயாரிப்பில் வெளியான ‘தெய்வத் திருமகள்’ படத்தில் தந்தையாக விக்ரம் அற்புதமாக நடித்திருந்தார்.
அந்தப் படத்தைப் போலவே ஒரு தந்தை மகளுக்காக எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்தப் படத்திற்குப் பிறகு அவரது நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.
இயக்குநர் மு. மாறன் மிகக் குறுகிய காலத்தில், ஒரே ஷெட்யூலில் சுமார் 60 நாட்களில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
மிகவும் அழுத்தமான உணர்வுகளைக் கொண்ட கதையைச் சிறப்பாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
ப்ரீத்தி அஸ்ராணி இந்தப் படத்தில் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரம் மிகவும் சவாலானது. ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்க அவர் முன்வந்ததும், அந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருப்பதும் பாராட்டுக்குரியது.
இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதேபோல் பேபி லிதன்யாவின் நடிப்பு, வசன உச்சரிப்பு மற்றும் விஜய் ஆண்டனியுடன் அவர் வெளிப்படுத்திய உணர்வுகள் மிகவும் அருமையாக இருக்கின்றன
இந்தப் படத்தைத் தமிழ் தெரியாத ஒரு சர்வதேச ஓடிடி நிறுவனப் பிரதிநிதிகளுக்குத் திரையிட்டபோது, அவர்கள் மொழி புரியாமலேயே கதையுடன் உணர்வுபூர்வமாகப் பயணித்தனர்.”