‘எம்புரான்‘ படத்துக்கு சம்பளம் வாங்க மறுத்த மோகன்லால்!

நடிகராக சினிமாவில் கால்பதித்த பிரித்விராஜ், ‘லூசிபர்’ என்ற மலையாளப் படம் மூலம் இயக்குநராகப் புதிய அவதாரம் எடுத்தார்.

மோகன்லால் ஹீரோவாக நடித்த அந்தப் படம், 2019 ஆம் ஆண்டு வெளியானது. பெரும் வெற்றி பெற்றதால், இதன் அடுத்த பாகம் ‘எம்புரான்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.

பிரித்விராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திலும் மோகன்லாலே நாயகனாக நடித்துள்ளார். மோகன்லாலுடன், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுக்க நாளை மறுநாள் (மார்ச் – 27, வியாழக்கிழமை) வெளியாக உள்ளது.

‘எம்புரான்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு 21 – ஆம் தேதி உலகம் முழுவதும் தொடங்கியது.

இதுவரை நடைபெற்றுள்ள டிக்கெட் முன்பதிவில் மட்டும் 60 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக ‘எம்புரான்’ படக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள படம் என்பதால் ‘எம்புரான்’ குறித்து மலையாள ஊடகங்கள் ஏகத்துக்கும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அதில் ஒன்று – படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி – நடிகர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளமாக மட்டும் 80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 20 கோடி ரூபாய்தான் படத்தை உருவாக்க செலவிடப்பட்டுள்ளது’ என்பது.

இதனை பிரித்விராஜ் மறுத்துள்ளார்.

“படத்தின் பட்ஜெட் – நடிகர்கள் சம்பளம் குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை கிடையாது.

பட்ஜெட் முழுக்க படத்தை உருவாக்கவே செலவிடப்பட்டுள்ளது – மோகன்லால் இந்தப் படத்தில் நடிக்க இன்று வரை ஒரு பைசா கூட வாங்கவில்லை” என்றார்.

பேட்டியின்போது உடன் இருந்த மோகன்லால், “உண்மைதான் – நான் சம்பளம் வாங்கவில்லை. அதேபோல் இயக்குநர் பிரிதிவிராஜும், நயா பைசா வாங்கவில்லை” என்று சொன்னார்.

படம் குறித்த மேலும் சில தகவல்கள்:

படத்துக்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 3 மணி நேரப் படம். ரீலீஸ் ஆன சில நாட்களிலேயே ரூ. 300 கோடி வசூலித்து விடும் என்கிறார்கள்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment