அக்டோபர் 6-ல் வெளியாகும் 6 படங்கள்!

பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும் வெள்ளிக்கிழமைகளில் தமிழகம் முழுக்க உள்ள அனைத்து திரைகளிலும் அவர்கள் மட்டுமே ஆக்ரமித்திருப்பார்கள்.

இரண்டு வாரங்கள் காத்திருப்புக்கு பிறகே சின்ன நடிகர்கள் மற்றும் சின்ன பட்ஜெட் சினிமாக்கள் திரையரங்குகளுக்கு வருகை தரும்.

தமிழகத்தில் பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளில் மூன்று அல்லது நான்கு படங்கள் ரிலீஸ் ஆகும். ஆனால், நாளை (அக்டோபர் – 6)  6 சினிமாக்கள் வருகின்றன.

அவை:

மார்கழி திங்கள், ரத்தம், இறுகப்பற்று, தி ரோடு, ஷாட் பூட் த்ரி, 800.

இந்தப் படங்கள் குறித்த ஒரு கண்ணோட்டம்.

மார்கழி திங்கள்:

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அவர் மகன் மனோஜ்.

தொடர்ந்து ‘அல்லி அர்ஜுனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘ஈரநிலம்’, ‘சமுத்திரம்’, ‘அன்னக்கொடி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், விஜய் போலவும் சோபிக்கவில்லை. பிரசாந்த் போல உயரத்தையும் எட்டவில்லை.

சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தோடு நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, தந்தை போன்று இயக்குநராகும் முடிவை மேற்கொண்டார்.

மனோஜ் ‘மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். டைரக்டர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

புது முகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

கிராமத்துக் காதலைக் கதைக்களமாக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படம், மனோஜ், இன்னொரு பாரதிராஜாவாக ஜொலிப்பாரா என்பதை தீர்மானிக்கும்.

ரத்தம்:

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படம் மூலம் இசை அமைப்பாளராக, தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் விஜய் ஆண்டனி.

பின்னர் நடிகராக அவதாரம் எடுத்தார். ‘பிச்சைக்காரன்’ படம் மூலம் பெயரையும், ஓரளவு பணத்தையும் சம்பாதித்தார்.

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘ரத்தம்’

‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2.0’ ஆகிய படங்களின் இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கியுள்ளார். பத்திரிகை ஆசிரியர் வேடத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.

பத்திரிகையாளராக நந்திதா ஸ்வேதா, விஜய் ஆண்டனியின் மனைவியாக மகிமா நம்பியார் முக்கிய கேரக்டரில் ரம்யா நம்பீசன் நடிக்கின்றனர்.

அரசியல், கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள ரத்தம் படத்துக்கு முதலில் ‘வன்மம்’ என்று தலைப்பு வைக்க தீர்மானித்தனர். பின்னர் ரத்தம் என பெயர் சூட்டப்பட்டது.

இறுகப்பற்று:

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் – ‘இறுகப்பற்று’.

‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘டாணாக்காரன்’ போன்ற படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோ சார்பில் எஸ்.ஆர். பிரபு இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

வடிவேலு நடித்த ‘எலி’, ‘தெனாலிராமன்’ ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.

வடிவேலுவை வைத்து தயாளன் இயக்கிய இரு படங்களும் தோல்வி அடைந்தாலும், அவர் மீதான நம்பிக்கையில் துணிச்சலாக முதலீடு செய்துள்ளார் தயாரிப்பாளர் பிரபு.

‘என்னை மாதிரி ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்த இயக்குநருக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் பிரபுவுக்கு, வெற்றியைப் பரிசாகக் கொடுத்து விட்டு, அவரைப் பற்றி நிறைய பேசுவேன்’ என நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் தயாளன்.

தி ரோட்:

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த த்ரிஷா, அதனையடுத்து நடித்துள்ள படம் ‘தி ரோட்’.

மதுரையில் கடந்த 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். த்ரிஷாவுக்கு இந்தப் படம் இன்னொரு பொன்னியின் செல்வனாக அமையாவிட்டாலும், தயாரிப்பாளரை ரோட்டில் நிறுத்திவிடும் படமாக இருக்கக்கூடாது.

ஷாட் பூட் த்ரி:

தலைப்பைப் பார்த்தாலே குழந்தைகளுக்கான படம் என்பது சொல்லாமலேயே புரியும். ஆம். இது குழந்தைகள் உலகத்தை சொல்லும் படம் தான்.

பிரசன்னா, சினேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ அர்ஜுன் நடித்த ‘நிபுணன்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இயக்குநர் வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு ஆகியோருக்கு பிரதான பாத்திரம், முன்னாள் மத்திய அமைச்சரும், இந்திரா காந்தியின் மருமகளுமான மேனகா காந்தி, இந்தப் படத்தை பார்த்து ரொம்பவும் சிலாகித்ததாக பூரிப்புடன் சொல்கிறார், அருண்.

800:

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை ‘800’ என்ற தலைப்பில் படமாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தை மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் விலகி கொண்டார்.

இதையடுத்து முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ஆஸ்கர் வென்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல் நடித்துள்ளார்.

மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

வெள்ளிக்கிழமை திரையில் பாயும் ஆறில், எத்தனை தேறும் என்பது திங்களன்று தெரிந்து விடும்.

-பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment