‘ஆரத்தி’க்கு வரவேற்பு: மகிழ்ச்சியில் மாளவிகா!

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் தங்கலான்.

இந்தப் படத்தை பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார். கோலார் தங்கச் சுரங்கத்தில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் எனப் பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதோடு, பிரபலங்கள் பலருமே தங்கலான் படத்தைப் பார்த்துப் பாராட்டி வருகின்றனர்.

தங்களானில் விக்ரமுக்கு அடுத்து மாளவிகா மோகனனின் நடிப்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழில் அவர் நடித்த படங்களிலேயே தங்கலான் தான் அவரின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் பலர் எழுதியுள்ளனர்.

இந்த நிலையில் தங்கலான் படத்தின் வெற்றி குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் “கொளுத்தும் வெயிலில் 10 மணி நேரம் படப்பிடிப்பு, எருமையில் சவாரி செய்தது, சிங்கிள் ஷாட் சண்டைக் காட்சிகள், எரியும் பாறையில் நின்றது என வேறு எந்த படத்திற்காகவும் இந்த அளவிற்கு உழைத்ததில்லை.

ஆனால் தற்போது அந்தக் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படுவது நெகிழ்ச்சியை தருகிறது” என மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment