மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் இடம் பெற்ற பல வசனங்கள் பிரபலமானவை.
அவற்றிலிருந்து சில…
*
‘நாம்’ படத்தில். ஜமீன்தார்: “என்னடா… ஆச்சர்யக் குறி போடுகிறாய்?”
எம்.ஜி.ஆர்: ஆச்சர்யக் குறி தான் ஜமீன்தார் அவர்களே! கொஞ்சம் வளைந்தால் அது கேள்விக்குறி ஆகிவிடும். அரிவாளுக்கும், கேள்விக் குறிக்கும் அதிக வித்தியாசம் இல்லை.
*
‘மர்மயோகி’ படத்தில் எம்.ஜி.ஆர். ஏற்ற பாத்திரத்தின் பெயர் கரிகாலன்.
படத்தில், ‘‘கரிகாலன் குறி வைத்தால் தவற மாட்டான். தவறுமானால் குறி வைக்க மாட்டான்’’ என்று எம்.ஜி.ஆர் பேசும் வசனம்.
*
‘நாடோடி மன்னன்’ படத்தில்… மார்த்தண்டன் (மன்னர் – எம்.ஜி.ஆர்): “…விவசாயிக்கு உழத் தெரியும். வியாபாரிக்குத் தொழில் தெரியும். அரசனுக்குத் தானே ஆளத் தெரியும்?
வீராங்கன் (நாடோடி–எம்.ஜி.ஆர்): அப்படித்தான் மக்கள் இதுவரை நம்பி வந்தார்கள்.
ஆனால் விதிக்கப்படும் கொடிய வரிகளும், கொடுக்கப்படும் சவுக்கடிகளும் மன்னராகிய நீங்கள் வாழத் தெரிந்தவரகளே தவிர, ஆளத் தெரிந்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து விட்டன.
*
எம்.ஜி.ஆர்: நீங்கள் மாளிகையில் இருந்து கொண்டு மக்களைப் பார்க்கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்.
என்னை நம்பாமல் கெட்டவர்கள் அதிகம். நம்பிக் கெட்டவர்கள் இன்று வரை இல்லை.
*
அமைச்சர்: உழுபவனுக்கே நிலம் உரிமைக்கப்படுகிறது. உரிமைக்காரருக்கு நஷ்ட ஈடு நிலத்தின் வருமானத்தில் கால் பங்கு. தொழில் முதலீடு செய்பவர்களுக்கு லாபத்தில் பத்து சதவிகிதமும், மற்றவை தொழிலாளர்களுக்கும் பிரித்து தரப்பட வேண்டும்.
ராஜகுரு: அப்படி என்றால் நாட்டில் பணக்காரர்களே இருக்க மாட்டார்கள்.
எம்.ஜி.ஆர் – வீராங்கன்: தவறு பணக்காரர்கள் இருப்பார்கள். ஏழைகள் இருக்க மாட்டார்கள்.
அமைச்சர்: பள்ளிப்படிப்பு முடிந்ததும் தொழிலில் ஈடுபடும் வரை மாணவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.
பிங்களன்: பொக்கிஷம் காலி…
எம்.ஜிஆர் – வீராங்கன்: மக்களிடமிருந்து பெற்ற வரிப்பணத்தை மக்களுக்கே செலவிடுகிறோம்.
*
– ‘’ஆயிரத்தில் ஒருவன்”படத்தில்…
நம்பியார்: கேவலம் ஒரு பெண்ணுக்காக நட்பை கெடுத்து கொள்ளாதே. யோசித்து சொல்.
எம்.ஜி.ஆர்: யோசிக்க வேண்டியவன் நானல்ல… அவளை யாசிப்பதை விடுங்கள்.
நம்பியார்: உயிர் மீது உனக்கு ஆசை இல்லையா?
எம்.ஜி.ஆர்: இதே கேள்வியை நானும் கேட்கலாமா?
நம்பியார்: மோதுவது தான் உன் முடிவா?
எம்.ஜி.ஆர்: உங்களுக்கு அதைத்தவிர வேறு வழியில்லை என்றால் நான் தயார்.
நம்பியார்: அவளை அடைந்தே தீருவேன்.
எம்.ஜி.ஆர்: அது தான் நடக்காது.
நம்பியார்: (கோவத்தோடு) என்னையே எதிர்க்க துணிந்து விட்டாய். மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்.ஜி.ஆர்: சினம் கொண்ட சிங்கத்துடன் தோற்று ஓடும்.
நம்பியார்: தோல்வியே அடையாதவன் நான்.
எம்.ஜி.ஆர்: தோல்வியை எதிரிகளுக்குப் பரிசளித்தே பழகியவன் நான்.
நம்பியார்: நாவை அடக்கு. நான் உன் தலைவன்.
எம்.ஜி.ஆர்: ஆனால் உங்கள் நடத்தை அப்படி இல்லையே.
#
படகோட்டி- படத்தில்
*
சரோஜா தேவி: எனது காதல் கருக வேண்டியது தானா?
எம்.ஜி.ஆர்: நான் தனி மனிதனல்ல. மக்களுக்குக் கட்டுப்பட்டவன். நான் தலைவன் அல்ல. தலைவன் என்ற பெயரில் மக்களின் அடிமை நான்.
*
‘உரிமைக்குரல்’ – படத்தில்…
எம்.ஜி.ஆர்: “எங்க பரம்பரைக்கே சோறு போட்டு வளர்த்த பூமி இது. மானம், மரியாதை உள்ள எவனும் உயிர் போனாலும், தன் நிலத்தை மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டான்.
என் தாய் எனக்குப் பாலூட்டி வளர்த்தாங்க. இந்த நிலத்தாய் எனக்குச் சோறூட்டி வளர்த்தாங்கடா.. இந்தத் தாயை விட்டுக் கொடுகிற அளவுக்கு நான் கோழை இல்லடா”
*
தொடரும்…
– மணா