மதராஸி – எஸ்.கே ரசிகர்களைத் திருப்திப்படுத்துமா?

‘டாக்டர்’ படத்திற்குப் பிறகு, தன்னை ஒரு ‘ஆக்‌ஷன் ஹீரோ’வாக நிலைநிறுத்திக் கொண்டார் சிவகார்த்திகேயன்.

அதேபோல ‘தீனா’, ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ போன்ற படங்களில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘அன்லிமிடெட் எண்டர்டெயின்மெண்ட்’ தந்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இவர்கள் இருவரும் ஒன்றிணைந்தால் நமக்கு எப்படிப்பட்ட ஆக்‌ஷன் படம் கிடைக்கும்? அந்த கேள்விக்கான பதிலாக அமைந்திருக்கிறது ‘மதராஸி’.

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்திற்கு மலையளவு எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. அதை ஒப்பிடுகையில், ‘மதராஸி’ வெளியாவதற்கு முன்னர் பெரியளவுக்கு வரவேற்பு இல்லை.

அதற்கு, இப்படத்தின் டைட்டிலும் ஒரு காரணம் எனலாம். அதையும் தாண்டி, இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கோ, படத்தின் பாடல்களோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இவற்றையெல்லாம் மீறி ‘மதராஸி’ ரசிகர்களுக்கு என்ன தருகிறது?

‘மதராஸி’ கதை!

‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் பாத்திரம் அதற்கு முன்னர் அவர் நடித்த பாத்திரங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருக்கும்.

எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டுமென்று நினைக்கிற நாயகனின் சிந்தனை ‘அப்நார்மல்’ ஆகத் திரையில் காட்டப்பட்டிருக்கும்.

இன்ன பிற பாத்திரங்கள் ‘காமெடி’ செய்வதாக அதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

ஏ.ஆர்.முருகதாஸின் பெரும்பாலான படங்களில் நாயகிகள் நாயகர்களின் குறைகளைக் கண்டதும் இரக்கப்படுபவர்களாக, பரிதாபப்படுபவர்களாகக் காட்டப்பட்டிருப்பார்கள்; கூடவே, குறைகளைத் தாண்டி நிறைகளைக் காண்பவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்.

மேற்சொன்னவாறு ‘டாக்டர்’ பட நாயகன் போன்ற வார்ப்புடன் தனது பிரத்யேக நாயகி பிம்பத்தை ஒன்றிணைத்து ஒரு ‘மசாலா’ படத்திற்கான கதையைத் தந்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

வெளிநாடுகளில் துப்பாக்கிச்சூடு அடிக்கடி நிகழ, சாதாரண மக்கள் அவற்றை வாங்கிப் பயன்படுத்துகிற சூழல் உருவாக்கப்பட்டதே முக்கியக் காரணம்.

அப்படியொன்று தமிழ்நாட்டில் நடந்தால் என்னவாகும் என்ற கற்பனையின் அடிப்படையில் இக்கதையை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார்.

சில கனரக வாகனங்களில் துப்பாக்கிகளை நிறைத்துக்கொண்டு தமிழ்நாட்டு எல்லைக்குள் புகுகின்றனர் சிலர்.

அந்த தகவலை முன்னரே அறிந்து அவர்களைத் தடுக்க முனைகிறது என்.ஐ.ஏ. அதில் அந்த ஆபரேஷனை நடத்தும் அதிகாரி பிரேம் (பிஜு மேனன்) காயமடைகிறார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, ஒரு இளைஞரை பிரேம் சந்திக்கிறார். அந்த நபரின் பெயர் ரகுராம் (சிவகார்த்திகேயன்).

காதலி மாலதி (ருக்மிணி வசந்த்) தன்னைவிட்டுச் சென்றுவிட்டார் என்பதற்காகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, அதனால் காயமுற்று அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை விற்பதற்காகச் சில நகரங்களில் இருப்பவர்களுக்குத் துப்பாக்கிகளை இலவசமாகக் கொடுக்கிறது அந்த கும்பல்.

அதன் விளைவாகச் சில இடங்களில் சர்வசாதாரணமாகத் துப்பாக்கிச்சூடு நடக்கிறது.

அந்த கும்பல் துப்பாக்கிகளை வைத்திருக்கும் இடத்திற்குள் எவராலும் எளிதாக நுழைய முடியாது; அப்படி நுழைந்துவிட்டால் எளிதாக வெளியே வர முடியாது.

ஏற்கனவே சில வீரர்களை மாநில எல்லையில் இழந்திருக்கும் நிலையில், தான் நினைத்ததைச் செயல்படுத்த முடியாமல் தவிக்கிறார் பிரேம்.

அதேநேரத்தில், அந்த கும்பலைக் கூண்டோடு ஒழித்தால் தான் நிலைமை சீராகும் என்பதையும் உணர்கிறார்.

அதனால், வேறு வழியில்லாமல் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தனது ஆபரேஷனில் ரகுராமை ஈடுபடுத்தத் துணிகிறார் பிரேம்.

‘எப்படியும் தற்கொலை பண்ணிக்கப் போறான்; அவனை நம்ம ஆபரேஷனுக்கு யூஸ் பண்ணிக்குவோம்’ என்று தன்னுடன் பணியாற்றுபவர்களிடம் சொல்கிறார்.

ரகுராமும் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து, அந்த வாகனங்கள் இருக்கிற பகுதிக்குள் நுழைகிறார்.

அது எளிதில் தீப்பற்றக்கூடிய ஒரு ஆலை. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப்படை வீரனைப் போல அந்த காரியத்தைச் செய்ய முனைகிறார் ரகுராம்.

அப்போது, அவர் எதிரே போதை மயக்கத்தில் இருக்கிறார் அந்த கும்பலின் தலைவனான விராட் (வித்யூத் ஜாம்வால்).

இந்த தகவல் ஒரேநேரத்தில் பிரேமுக்கும் விராட்டின் நண்பனான சிராக்குக்கும் (சபீர் கல்லாரக்கல்) தெரிகிறது. ஒரேநேரத்தில் அவர்கள் இருவரோடும் மொபைலில் பேசுகிறார் ரகுராம்.

‘கொல்’ என்று பிரேம் சொல்ல, ‘கொன்னா உன்னைச் சும்மா விடமாட்டேன்’ என்கிறார் சிராக்.

அந்த நேரத்தில், அந்த உரையாடலின்போது மாலதியும் உடனிருந்தால் எப்படியிருக்கும்? அதன்பிறகு என்ன நடக்கும் என்று சொல்கிறது ‘மதராஸி’யின் மீதி.

உண்மையைச் சொன்னால், இது முதலுக்கு மோசமில்லாத ஒரு ஆக்‌ஷன் கதை. அதற்கேற்றவாறு திரைக்கதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் முருகதாஸின் பழைய படங்களின் வாசனையும் நிறையவே இருக்கிறது.

‘இதுதாண்டா அவரோட ஸ்டைல்’ என்று சிலர் பாராட்டவும் வாய்ப்புண்டு. ‘என்ன ஒரே க்ளிஷேவா இருக்குது’ என்று கழுவி ஊற்றவும் வாய்ப்புண்டு.

இப்படிப் பல்வேறுபட்ட கருத்துகளைத் தாங்கிக்கொண்டு திரையில் ஓடுகிறது ‘மதராஸி’யின் இரண்டாம் பாதி. அதுவே இப்படத்தின் பலவீனம்.

ஓடிடியில் ரசிக்கலாம்!

‘துப்பாக்கி படத்தோட டிக்கெட் கிடைச்சிடுச்சு’ என்று ஒருகாலத்தில் ‘ட்வீட்’ இட்டவர் சிவகார்த்திகேயன். பின்னர் நாயகன் ஆகி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் கதை மற்றும் தயாரிப்பில் நடித்து, இப்போது அவரது இயக்கத்தில் நாயகனாக நடிக்கிற இடத்திற்கு உயர்ந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் பாத்திரம் முதலில் ‘செயற்கைத்தனமாக’த் தெரிந்தாலும், வில்லன் கும்பலோடு அதனைத் தொடர்புபடுத்துகிற விதமே இப்படத்தின் யுஎஸ்பி ஆக உள்ளது.

அதனை உணர்ந்து அவரும் சிறப்புற நடித்திருக்கிறார்.

என்ன, தற்கொலை செய்துகொள்ளப் போகிற மனநிலையில் இருப்பவராக அவரைக் காட்டியதுதான் பெரிதாக ஒட்டவில்லை.

நாயகி ருக்மிணி வசந்த் அழகாக இருக்கிறார். ஸ்கூல் டீச்சர் பாடம் நடத்துவது போல நாயகனைக் காதலிக்கிறார். ஆனாலும், மனம் அந்த காட்சிகளில் பெரிதாக லயிக்க மாட்டேன் என்கிறது.

வில்லனாக வருபவர்களில் வித்யூத் ஜாம்வால் சட்டென்று விசிலடிக்க வைக்கிறார். அவருக்கான காட்சிகள் குறைவு. ஆனால், தனது ‘ஸ்டண்ட்’ திறனால் அந்தக் குறையை மறக்கடிக்கிறார்.

துப்பாக்கி பாணியில், இதில் அவருக்கும் சிவகார்த்திகேயனுக்குமான கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

சபீர் கல்லாரக்கல் தான் வரும் இடங்களில் மிரட்டியிருக்கிறார்.

பிஜு மேனன், அவரது மகனாக வரும் விக்ராந்துக்கு முக்கியத்துவம் தருகிற வகையில் ஓரிரு காட்சிகள் உள்ளன.

சித்தார்த் சங்கர், ரிஷி ரித்விக் போன்றவர்கள் ஒருபுறமிருக்க, எதிர்புறத்தில் விமலா ராமன் வில்லத்தனமாக வந்து போயிருக்கிறார்.

ஆனால், அவர்களை அடையாளம் காணும் முன்பாகவே அக்காட்சிகள் நம்மைக் கடந்துவிடுகின்றன.

இவர்கள் போக, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், லிவிங்ஸ்டன், வினோதினி வைத்தியநாதன், சந்தான பாரதி உட்படச் சிலர் இப்படத்தில் வந்து போயிருக்கின்றனர்.

இவர்களது பங்கு இவ்வளவுதான் என்பது போல அப்பாத்திரங்கள் திரைக்கதையில் இடம்பெற்றிருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் சுதீப் இளமோன், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், தயாரிப்பு வடிவமைப்பாளர் அருண் வெஞ்சாரமூடு மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் ‘மதராஸி’யின் காட்சியாக்கம், ஒரு நல்ல ‘கமர்ஷியல் ஆக்‌ஷன் படம்’ பார்த்த திருப்தியை வழங்குகிறது.

அனிருத்தின் இசையில் ‘சலம்பல’, ‘தங்கப்பூவே’ பாடல்கள் ‘ஓகே’ ரகத்தில் தான் இருக்கின்றனவே தவிர, ‘கூஸ்பம்ஸ்’ தரும்விதமாக இல்லை.

அதேநேரத்தில், பின்னணி இசையில் அந்த மாயாஜாலத்தை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

‘துப்பாக்கி’ அளவுக்கு இப்படம் ‘மிரட்டலான’ ஆக்‌ஷன் படம் கிடையாது. அதேநேரத்தில் ‘ஸ்பைடர்’, ‘தர்பார்’ அளவுக்கு இது நம்மைச் சோதிப்பதில்லை.

அந்த வகையில் ‘ஒருமுறை பார்க்கலாம்’ என்கிற இடத்தில் இருக்கிறது ‘மதராஸி’. அதுவே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கான பாராட்டு.

எதிர்குரல்களால் இப்படத்தை தியேட்டரில் பார்க்காதவர்கள் கூட எதிர்காலத்தில் ஓடிடியில் பார்த்துவிட்டு ‘நல்லாயிருக்கு’ என்று சொல்ல வாய்ப்புண்டு.

சிவகார்த்திகேயன் திரை வாழ்வில் ‘அண்டர்ரேட்டட்’ படமாக விளங்குவது இதுவரை ‘காக்கி சட்டை’ மட்டுமே.

அப்படம் வந்த காலகட்டத்தில், அவர் ‘ஆக்‌ஷன் ஸ்டார்’ ஆகவில்லை. அதுவே அப்படியொரு நிலைக்கு காரணமாக இருந்தது.

தற்போது அப்படிப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் இல்லை. அப்படியிருந்தும் ‘மதராஸி’க்கு எதிர்க்குரல்கள் எழுகின்றன என்றால், அவர் தனது படத்தின் உள்ளடக்கத்தில் மாற்றங்களைப் புகுத்தியாக வேண்டுமென்றே அர்த்தம்.

‘வெறுமனே ஆக்‌ஷன் படம் பார்த்தால் போதும்’ என்பதைத் தாண்டிப் பல விதமான ரசிகர்கள் தனக்கு உள்ளனர் என்பதை அவர் உணர வேண்டும்.

சிவகார்த்திகேயனின் அனைத்து ரசிகர்களும் ‘மதராஸி’யை ரசிப்பார்களா என்பதற்கான பதில் இதில் அடங்கியிருக்கிறது.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment