‘சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்லாம் பண்ணனும்னா எவ்ளோ பட்ஜெட் ஆகும் தெரியுமா?’ இது போன்ற பேச்சுக்களே இதுநாள் வரை ‘பேண்டஸி’, ‘அட்வெஞ்சர்’ ரக கதை சொல்லலுக்குத் தடையாக இருந்து வந்திருக்கின்றன.
அதேநேரத்தில், ‘அதனை இங்கும் முயற்சித்துப் பார்க்கலாமே’ என்று ரசிகர்களை எண்ணுகிற வகையில் சில படங்களில் விஎஃப்எக்ஸ் தரம் இருந்ததையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இவ்விரண்டையும் ஒன்றிணைக்கிற வகையிலான முயற்சியை மேற்கொண்டிருக்கிறது தற்போது மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘லோகா சேஃப்டர் 1: சந்திரா’.
‘வேபேரர் பிலிம்ஸ்’ சார்பில் மலையாள நட்சத்திரம் துல்கர் சல்மான் தயாரித்திருக்கிற இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே தனுஷ் தயாரிப்பில் ‘தரங்கம்’ எனும் மலையாளப் படம் தந்தவர்.
அதுவே வழக்கத்திற்கு மாறான ஒரு ‘காமெடி த்ரில்லர்’ ஆகத்தான் இருந்தது. ஆனாலும் பெரும்பாலான ரசிகர்களை அது கவரவில்லை. அதனால், ’இப்படம் எப்படி இருக்கப் போகிறதோ’ என்ற எண்ணம் மலையாளத் திரையுலகில் நிலவி வந்தது.
இந்தப் படமானது கல்யாணி பிரியதர்ஷனை ‘சூப்பர்வுமன்’ ஆகத் திரையில் காட்டியிருக்கிறது. ஒரே நாளில் அவரைப் பல மொழி ரசிகர்கள் உற்றுநோக்கச் செய்திருக்கிறது.
சரி, அப்படி என்ன இருக்கிறது இப்படத்தில்..?!
நம்பவைக்கிற ’பேண்டஸி’!
வெளிநாடு ஒன்றில் இருந்து தனது பேக்கில் ஒரு பொருளை எடுத்து வருகிறார் சந்திரா (கல்யாணி பிரியதர்ஷன்). அவரிடம் ‘அபாரமான’ ஆற்றல் இருப்பது அந்த சம்பவத்தில் தெரிய வருகிறது.
பெங்களூரு வரும் சந்திரா ஒரு பிளாட்டில் வசிக்கத் தொடங்குகிறார். அங்கு அவரை அழைத்து வரும் நபர் (நிஷாந்த் சாகர்), ‘எந்த வம்பு தும்புக்கும் செல்லாமல் லோ ப்ரபைல் மெயிண்டெய்ன் செய்ய வேண்டும்’ என்று கூறுகிறார்.
அதற்கேற்ப, மாலை நேரத்தில் ஒரு உணவகத்தில் பணி எனத் தனது வாழ்வை அமைத்துக் கொள்கிறார் சந்திரா.
அவரது பிளாட்டுக்கு எதிரே, சாலையின் அந்தப் புறமிருக்கும் பிளாட்டில் சன்னி (நஸ்லென்) தனது நண்பன் வேணு (சந்து சலீம்குமார்) உடன் இருந்து வருகிறார்.
அவர் ஒரு நிறுவன வேலையில் இருந்து விலகிச் சில மாதங்களாகிறது. அவருக்கான செலவுகளை வேணுவும் இன்னொரு நண்பனான நைஜிலும் (அருண் குரியன்) பார்த்துக் கொள்கின்றனர்.
முதல் பார்வையிலேயே சந்திரா மீது காதல் கொள்கிறார் சன்னி. மெல்ல அவருடன் பழகத் தொடங்குகிறார்.
இந்த நிலையில், உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சைகளுக்காக மனிதர்களைக் கடத்துகிற கும்பலைச் சேர்ந்தவர்களோடு சந்திராவுக்கு மோதல் ஏற்படுகிறது. அவர்களில் ஒருவரைத் தாக்குகிறார் சந்திரா.
அதன் தொடர்ச்சியாக, லோக்கல் இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கௌடா (சாண்டி) உடன் அவருக்கு மோதல் ஏற்படுகிறது.
ஒருநாள் சந்திராவைத் தாக்கிக் கடத்திச் செல்கிறது அந்தக் கும்பல். அதனைக் காணும் சன்னி, அவர்களைப் பின்தொடர்ந்து செல்கிறார்.
ஓரிடத்தில் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் சந்திராவைத் தாக்க முயற்சிக்கின்றனர். அங்கு சென்ற பின்புதான், சந்திராவின் ஆற்றல் எத்தகையது, அவர் எப்படிப்பட்டவர் என்பது சன்னிக்குத் தெரிய வருகிறது.
அதன் பிறகு என்ன ஆனது? சந்திரா ஏன் பெங்களூரு வந்திருக்கிறார்? அவருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
உண்மையைச் சொன்னால், சந்திரா எனும் பாத்திரத்தின் ஒரு பகுதி மட்டுமே இப்படத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு எதிரே நிற்பவர்கள் யார் என்பது கூடத் தெளிவாகச் சொல்லப்படவில்லை.
இந்தக் கதையில் வில்லனாக இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா பாத்திரம் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆள் கடத்தல் கும்பலின் தலைவரையோ அல்லது இதர சமூக விரோதச் செயல்களைத் திட்டமிடுபவர்களையோ இக்கதை நமக்குக் காட்டவே இல்லை.
ஆனாலும், இந்தக் கதை சொல்லல் நமக்குப் பிடித்துப் போகிறது. காரணம், ஒவ்வொரு காட்சியிலும் நிறைந்து நிற்கிற ‘டீட்டெய்லிங்’. அதுவே, ‘சூப்பர் நேச்சுரல் ட்ராமா’ வகைமையில் அமைந்த இப்படத்தினை ரசிகர்கள் கொண்டாட வைத்திருக்கிறது. இதற்கு மாபெரும் வெற்றியைச் சேர்ப்பித்திருக்கிறது.
அபார உழைப்பு!
கல்யாணி பிரியதர்ஷன் திரை வாழ்வில் இது ஒரு திருப்பு முனை. இனி அவரால் நாயகனோடு ‘டூயட்’ பாடவும் அழகுப்பதுமையாக வலம் வரவும் முடியாது.
அந்த அளவுக்கு அவரை ‘சூப்பர்வுமன்’ ஆகக் காட்டியிருக்கிறது ‘சந்திரா’ பாத்திரம். அது மட்டுமல்லாமல், ஆக்ஷன் காட்சிகளில் அவரது பெர்பார்மன்ஸை கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். அது சுலபமாக எவருக்கும் கிட்டாதது.
நஸ்லென் இந்தப் படத்தின் நாயகன். அப்பாத்திரத்திற்குச் சரியான நியாயத்தைச் சேர்த்திருப்பதே அவரது நடிப்புக்கான பாராட்டு.
சாண்டி இதில் வில்லனாகத் தோன்றியிருக்கிறார். முன்பாதியில் சாதாரணமாக வந்து போகும் அவர் பின்பாதியில் மிரட்டியிருக்கிறார்.
‘வைஃப் தர்ற மாதிரி டான்ஸ் ஆடுற சாண்டியா இவர்’ என்று கேட்கும் அளவுக்கு உள்ளது அவரது இருப்பு.
அருண் குரியன், சந்து சலீம்குமார் வருகிற காட்சிகள் லேசாகச் சிரிக்க வைக்கின்றன.
இவர்களோடு நிஷாந்த் சாகர், விஜயராகவன், நித்யஸ்ரீ, சரத் சபா எனப் பலர் இதிலுண்டு.
அன்னா பென், டொவினோ தாமஸ், சன்னி வெய்ன் என்று நீள்கிற ‘கேமியோ லிஸ்ட்’டில் துல்கர் சல்மானும் உண்டு. சௌபின் ஷாகிர், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்ட சிலரும் ஒரு ஷாட்டுக்கு முகம் காட்டியிருக்கின்றனர்.
அந்த வகையில், மலையாளத் திரையுலகின் ‘அவெஞ்சர்ஸ்’ ஆக உருவெடுத்திருக்கிறது இப்படம்.
ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை இப்படத்திற்குப் பெரும்பலம். காட்சிகளில் நிறைந்திருக்கிற செறிவை மேலும் ஒரு படி அதிகமாக்குவதில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது.
காட்சிகளில் நிகழ்கிற இடங்கள் ‘கிராபிக் நாவல்’ படித்த உணர்வைத் தருகின்றன. அவற்றில் விஎஃப்எக்ஸ் பங்கு பாதி என்றாலும், தயாரிப்பு வடிவமைப்பாளர் பங்கலான் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.
ஆங்காங்கே பிளாஷ்பேக்குகள், பிளாஷ் கட்கள் வருகிற கதை சொல்லலை ரொம்பவே நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் சமன் சாக்கோ.
நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு ஒவ்வொரு பிரேமையும் ‘பளிங்கு’ போன்று வார்த்திருக்கிறது.
இருள் சூழ்ந்த பகுதிகளில் நிகழ்வதாக வடிவமைக்கப்பட்ட சண்டைக்காட்சிகளில் அது தெளிவாகத் தெரியும்.
போலவே, படம் முழுக்கப் பரவியிருக்கும் இருண்மையை நமக்குள் கடத்தப் பெருமளவில் உதவியிருக்கிறது டிஐ நுட்பம்.
யான்னிக் பென் சண்டைக்காட்சி வடிவமைப்பு, மேற்கத்திய படம் பார்த்த உணர்வைத் தருகிறது.
இன்னும் ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு மற்றும் இத்யாதி அம்சங்கள் ‘செம’ பீலிங் தருகின்றன.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டொமினிக் அருண். திரைக்கதை வசனம் ஆக்கத்தில் அவருடன் கைகோர்த்து செயல்பட்டிருக்கிறார் நடிகை சாந்தி பாலச்சந்திரன். இப்படத்தில் ஒரு ஷாட்டில் அவர் தலைகாட்டியிருக்கிறார்.
ஒருவேளை இந்தப் படம் வெற்றி பெறாமல் போயிருந்தால், திரைக்கதையில் முழுமையாகச் சொல்லாமல் தவிர்க்கப்பட்டிருக்கிற விஷயங்கள் கேள்விக்குள்ளாகியிருக்கும். இப்போது, அவையனைத்தும் அடுத்தடுத்த பாகங்களுக்கான ‘லீட்’களாக மாறியிருக்கின்றன.
அந்த வகையில், நிறைய கிளைக்கதைகள் இப்படத்தில் ‘ஜஸ்ட் லைக் தட்’ சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தக் கதை சொல்லல் தான் இந்த அம்புலிமாமா கதையை ஜென்ஸீ தலைமுறையினரும் ரசிக்கும்படி செய்திருக்கிறது.
சில ரசிகர்கள் ‘யூனிவர்ஸ்’ என்ற போர்வையில் குறிப்பிட்ட இயக்குனர்களின் படங்களை ஒரு வரிசையில் அடுக்கப் பிரயத்தனப்படுவார்கள். ‘பேட்மேன்’, ‘சூப்பர்மேன்’ சீரிஸ் படங்களில் ஏதேனும் ஒரு சூழல், பாத்திரம், பொருள் காண்பிக்கப்படும்போது ‘ஹோ’வென்று ஆர்ப்பரிப்பார்கள். தங்களை அப்படைப்பின் தீவிர ரசிகர்கள் என்று காட்டிக் கொள்வார்கள்.
அப்படிப்பட்ட ரசிகர்களை உருவாக்குவதற்கான அத்தனை லட்சணங்களையும் கொண்டிருக்கிறது ‘லோகா சேஃப்டர் 1: சந்திரா’.
அனைத்துக்கும் மேலாக ‘நீலி’ எனும் நாட்டார் தெய்வத்தையும் கதனார் என்கிற கிறித்துவ மத போதகரையும் ஒன்றிணைக்கும்விதமான கற்பனைகள் இப்படத்தில் நிறைந்து கிடக்கின்றன. அந்த கதை சொல்லலே இப்படத்தின் தனித்துவங்களில் முதன்மையானது.
அந்த வகையில், ஒரு புதிய திசையைக் காட்டியிருக்கிறது இப்படம். அது பிடிக்காதவர்களுக்கு இப்படத்தின் குறைகள் மட்டுமே கண்களுக்குத் தெரியும்..!
- உதயசங்கரன் பாடகலிங்கம்