ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக இடம்பெறுபவர், இன்னொரு படத்தில் சீரியசாக வரும் குணசித்திர பாத்திரத்தை ஏற்பார். ஒரு படத்தில் பிரதானமாக இடம்பெறுபவர், இன்னொரு படத்தில் இரண்டொரு காட்சிகளோடு ‘பை’ சொல்லிவிடுவார்.
அவ்வளவு ஏன், நாயகனாகப் பெருவெற்றி பெற்றவர்கள் கூடச் சில படங்களில் நட்புக்காகத் தலைகாட்டிவிட்டுச் செல்வார்கள். அதனை ஏற்பவர்கள் நட்சத்திர நாயகர்களாக இருந்தால் ‘கேமியோ’ என்போம்.
வளர்ந்து வருகிற அல்லது சுமாரான வெற்றிகளைக் கொடுக்கிற நடிகர் என்றால், ‘வித்தியாசமான கேரக்டர்ல நடிச்சிருக்காரே’ என்று கடந்துவிடுவோம்.
இந்த அணுகுமுறை இருந்தால் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படும் பல திரைப்படைப்புகளை நாம் கண்டு ரசிக்க முடியும். மேற்சொன்ன இந்த நிலைமையை மலையாளம், தெலுங்கு, இந்தித் திரைப்படங்களில் காண முடியும்.
தமிழில் இப்படியொரு வழக்கம் உருவாவதற்கான அறிகுறியே தெரிவதாக இல்லை.
‘அந்தப் படத்துல எவ்ளோ பெரிய கேரக்டர், இதுல அவரை யூஸ் பண்ணாம வேஸ்ட் பண்ணிட்டாங்க’ என்ற ஒற்றை வரி விமர்சனத்தில் கடையை இழுத்து மூடிவிடுவார்கள்.
சம்பந்தப்பட்ட நடிகர் அந்தப் பாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறாரா என்பதைக் கூட உற்றுநோக்குவது இல்லை.
அதற்குப் பின், அவர் தனக்குப் பிரதான இடம் தரும் கதைகளுக்கே முக்கியத்துவம் தரத் தொடங்குவார். அவரது திறமையால் மிளிரக்கூடிய ஒரு துணை கதாபாத்திரத்திற்கு இன்னொருவரைத் தேடிச் செல்ல வேண்டியிருக்கும். அது அவ்வளவு சிறப்பானதாக அமையாது.
அனைத்துக்கும் மேலாக, கும்பலாகச் சில நகைச்சுவை, குணசித்திர நடிகர்கள், நாயகர்கள் திரையில் தோன்றுவதை இவ்வழக்கம் அரிதானதாக மாற்றிவிட்டது.
‘மல்டி ஸ்டாரர்’ திரைப்படங்கள் மட்டுமல்லாமல், இப்படியொரு காஸ்ட்டிங்கை முன்னிறுத்துவதே பெரிய சவாலாக இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான், ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை பாய்ச்சுவது போன்று வெளியாகியிருக்கிறது ‘லெக் பீஸ்’ ட்ரெய்லர்.
‘பெயரே ஒரு தினுசாக இருக்கிறதே’ என்று யோசிக்க வேண்டாம். ‘வித்தியாசமான காம்போவா இருக்கே’ என்று கருதுகிற வகையில், ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிப்புக்கலைஞர்கள் சிலர் இதில் கைகோர்த்திருக்கின்றனர்.
ஸ்ரீநாத் இயக்கம்!
‘மாண்புமிகு மாணவன்’, ‘வேட்டைக்காரன்’ உள்ளிட்ட சில படங்களில் விஜய்யின் நண்பராகத் தோன்றியவர் ஸ்ரீநாத். நிஜத்திலும் அவருக்கு நெருக்கமான நட்பு வட்டத்தில் ஒருவராகத் திகழ்பவர்.
திரையில் இவரைப் பார்க்கும்போது, விவேக்கும் கவுண்டமணியும் ஒன்றிணைந்தாற் போன்ற உடல்மொழி தென்படும்; அதே போன்றதொரு காமெடி டைமிங்கும் இவரிடம் உண்டு.
‘தாம்தூம்’ படத்தில் கங்கனாவின் அல்லக்கையாக வந்து ‘தனியாவர்த்தனம்’ செய்திருக்கிறார். ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ போன்ற சில படங்களில் நாயகனின் நண்பர்களில் ஒருவராக இடம்பெற்ற இவரது நடிப்பை ரசித்திருக்கிறோம்.
ஆனாலும், இவர் அதிக படங்களில் நடிக்கவில்லை. பிடித்தமான கதைகள் அமையாதது உட்படப் பல காரணங்கள் அதன் பின்னிருக்கலாம்.
மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஜீவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ஸ்ரீநாத். முத்திரை, வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று இரண்டுப் படங்களை இயக்கியிருக்கிறார்.
இவர் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிற திரைப்படம் ‘லெக் பீஸ்’. இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்தவுடனேயே ‘நோ லாஜிக் ஒன்லி காமெடி மேஜிக்’ என்கிற பார்முலா பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.
சிரிப்புக்கு உத்தரவாதம்!
‘லெக் பீஸ்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எஸ்.ஏ. பத்மநாபன் அமைத்திருக்கிறார். வித்தியாசமான சில பாத்திரங்கள், அவற்றின் இடையே முளைக்கும் முரண், அதனைத் தொடர்ந்து நிகழ்கிற சம்பவங்கள், அதனூடே கிடைக்கிற நகைச்சுவை என்று இப்படம் நகரக்கூடும்.
பெரும்பாலான காட்சிகளின் தொடக்கம் இதுதான் என்பது போன்று சில ஷாட்கள் ட்ரெய்லரில் வெளிப்பட்டிருக்கின்றன. அவை நீரில் தலைகாட்டும் மீனின் துடுப்பு போலத் தலைகாட்டி, அத்திரைக்கதைக்குள் பிடித்திழுக்கும் காமெடி கொக்கிகளாகத் தெரிகின்றன.
அது, ‘வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதம்’ என்று பூடகமாகச் சொல்வது போன்றிருக்கின்றன. தியேட்டரில் அப்படியொரு சிரிப்பொலி எழுமானால், எதிர்பார்ப்பை விடப் பல மடங்கு வரவேற்பை ‘லெக் பீஸ்’ பெறலாம்.
மொத்தப் படமும் சேவல் பண்ணைக்குள் நுழைந்த எபெக்டை தரக்கூடும். அந்த அளவுக்கு இதில் பெரிய நடிகர் பட்டாளமே இதில் இருக்கிறது.
யோகிபாபு, விடிவி கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, மறைந்த ஜி.மாரிமுத்து, சாம்ஸ், மதுசூதனன் ராவ், மணிகண்டன் இவர்களோடு இயக்குநர் ஸ்ரீநாத்தும் இதில் நடித்திருக்கிறார்.
‘டாக்டர்’ படத்தில் ஆங்கிலோ இந்தியராக வந்து காமெடியில் கலக்கியவர் ஜோன் சர்ரோ. இயக்குநர் நெல்சனின் நட்பு வட்டத்தில் ஒருவராக இடம்பெற்றவர்.
யோகிபாபுவிடம் கராத்தே கார்த்தியைக் கொண்டுவந்து விட்டு அடி வாங்க வைப்பவராக, அப்படத்தில் வந்து போயிருப்பார்.
ஜோன் சர்ரோ இதில் இசையமைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். விக்னேஷ் ராமகிருஷ்ணனுடன் இணைந்து இவர் எழுதியிருக்கும் பாடல் வரிகளைத் தாங்கி ‘டிக்கில’ எனும் சிங்கிள் கடந்த வாரம் வெளியாகியிருக்கிறது.
சின்ன கல்லு பெத்த லாபம்!
‘மைக்கேல் மதன காமராஜன்’ மாதிரியான வெகு சில படங்களில் மட்டுமே ஒரு கும்பலே ஒன்றிணைந்து ‘காமெடி’ செய்வதைக் காண முடியும்.
சிங்கிதம் சீனிவாசராவ், கே.எஸ். ரவிக்குமார், சுந்தர்.சி உள்ளிட்ட ஒரு சில கமர்ஷியல் திரைப்பட இயக்குநர்களே அதனைச் சாதித்திருக்கின்றனர்.
இதற்கொரு உதாரணமாக, ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ‘சின்ன கல்லு பெத்த லாபம்’ வசனம் வரும் காட்சியைச் சொல்லலாம். அதுபோன்ற காட்சிகளில், ‘யார் என்ன வசனம் பேசினார்கள்’ என்ற குழப்பமோ, கூச்சலோ உருவாகாத வகையில் திரையில் அனைவரது நடிப்பும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். அது திரைக்கதையின், காட்சியமைப்பின் ஆன்மாவுக்குப் பலம் சேர்ப்பதாக அமையும்.
‘லெக் பீஸ்’ திரைப்படம் அப்படியொன்றாக அமையுமா என்ற கேள்வியை எழுப்பிக் கவனத்தை ஈர்த்திருக்கிறது. காமெடி டைமிங் அபாரமாக உள்ள கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது என நம்பலாம்.
அதனால், ‘சின்ன கல்லு பெத்த லாபம்’ என்று படக்குழுவினர் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.
ஒரேமாதிரியாக த்ரில்லர், ஹாரர், கேங்க்ஸ்டர், ஆக்ஷன் படங்களாகப் பார்த்து சலித்த நிலையில் இப்படம் ஒரு ஆசுவாசத்தைத் தரலாம்.
இந்த டைட்டில், படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும் காட்சிகளும் இருக்கக்கூடும் என்கிறது. அதே நேரத்தில் கவர்ச்சி, ஆபாசம் என்ற எல்லையைத் தாண்டி அருவெருப்பைத் தருவதாக இப்படம் அமையாது என்ற உறுதியைத் தருகிறது ‘லெக் பீஸ்’ ட்ரெய்லர். மொத்தப்படமும் அப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி!
– மாபா